வீட்டில் விளக்கேற்ற போகிறீர்களா? - வாஸ்து சாஸ்திரம் சொல்வது கவனிங்க!
நீங்கள் வீட்டின் பிரதான வாசலில் விளக்கேற்றுவதாக இருந்தால் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு ஏற்ற வேண்டும். அதேபோல் பிரதோஷ காலத்தில் விளக்கேற்றுவதாக இருந்தால் வீட்டின் பிரதான கதவை திறந்து வைக்க வேண்டும்.

நம்முடைய வீட்டில் தீபம் ஏற்றுவது என்பது பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வரும் வழக்கமாகும். தீபத்தின் ஒளி பிரகாசமாக இருவது போல் நம் வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள துன்பங்கள், துயரங்கள் போன்ற இருள் நீங்கி வழி (ஒளி) பிறக்கும் என்பது நம்பிக்கையாகும். பொதுவாக இந்த விளக்குகள் தெய்வங்கள் மற்றும் நம் முன்னோர்களுக்கு மன திருப்தியை ஏற்படுத்த ஏற்றப்படுவதாக நம்பப்படுகிறது. தீபம் ஏற்றுவதால் வீட்டில் இருக்கும் எதிர்மறை நீங்கி நேர்மறை எண்ணங்கள் ஏற்படும் என சொல்லப்படுகிறது. சிலர் காலை நேரங்களிலும் பலர் மாலை நேரங்களிலும் விளக்கேற்றி வழிபடுகிறார்கள். இதில் சிலர் வீட்டிற்கு வெளியே விளக்கு வைக்கும் பழக்கத்தை தொடர்ந்து பின்பற்றி வருகிறார்கள். முன்பெல்லாம் நம் வீட்டின் பிரதான வாயிலில் விளக்கு மாடம் அமைக்கப்பட்டிருக்கும்.
அப்படியாக நாம் விளக்கு வைக்கும் போது வாஸ்து சாஸ்திரப்படி சில தவறுகளை செய்து விடுகிறோம் இதனால் வீட்டில் மட்டுமல்லாது குடும்ப உறுப்பினர்களிடையேயும் எதிர்மறை தாக்கம் ஏற்பட்டு எதிர்பாராத விஷயங்கள் நடைபெறலாம் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது அதனைப் பற்றி நாம் காணலாம்.
நீங்கள் வீட்டின் பிரதான வாசலில் விளக்கேற்றுவதாக இருந்தால் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு ஏற்ற வேண்டும். அதேபோல் பிரதோஷ காலத்தில் விளக்கேற்றுவதாக இருந்தால் வீட்டின் பிரதான கதவை திறந்து வைக்க வேண்டும். இதன் பின்னர் லட்சுமிதேவிக்கு நெய் தீபம் ஏற்ற வேண்டும். அந்த விளக்கை வீட்டின் வாசலின் இடது பக்கத்தில் வைக்க வேண்டும். நெய் இல்லாவிட்டால் எள் அல்லது கடுகு எண்ணெய் தீபம் ஏற்றலாம் இதனை ஏற்றினால் வலது பக்கத்தில் வைக்க வேண்டும்.
முன்னோர்களுக்கு விளக்கு வைப்பதாக இருந்தால் வீட்டின் வாசலில் தெற்கு பக்கத்தில் வைக்க வேண்டும். இதற்கு மண் விளக்கு சிறந்ததாக சொல்லப்படுகிறது. அதே சமயம் விளக்கேற்ற பித்தளை விளக்குகளையும் நாம் பயன்படுத்தலாம். எந்த விளக்கை நீங்கள் வைப்பதாக இருந்தாலும் அந்த இடத்தில் எவர்சில்வர் அல்லது கண்ணாடி பாத்திரத்தில் தண்ணீர் வைக்க வேண்டும். தீபம் ஏற்றுவது இருளை நீக்கும் என்பது போல தண்ணீர் வைப்பது எதிர்மறை சக்தியை அழிக்கும் என நம்பப்படுகிறது.
மேலும் தீபம் ஏற்றிய பிறகு அதன் பலன் கிடைப்பதற்காக பல தங்கள் வீட்டின் கதவுகளை மூடுகின்றனர். ஆனால் இதனை செய்யக்கூடாது. லட்சுமிதேவியின் வருகைக்காக கதவுகளை திறந்து வைக்க வேண்டும். தீபத்தை குளிர்வித்த பிறகு கதவுகளை அடைத்துக் கொள்ளலாம். சிலர் இடப்பற்றாக்குறை காரணமாக வாசலில் செருப்பு வைத்து அல்லது குப்பைத்தொட்டி வைக்கும் இடங்களில் விளக்குகளை வைக்கிறார்கள். இது எதிர்மறை ஆற்றலை உருவாக்கும். இவ்வாறு வைப்பது சனியின் இருப்பை அதிகரிக்க செய்வதாகும் அதனால் அதனை தவிர்க்க வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது.






















