பக்தர்களே! பணக்கஷ்டத்தை தீர்க்கும் வரலட்சுமி பூஜை - வீட்டில் செய்வது எப்படி?
வரலட்சுமி பூஜையை வீட்டில் செய்வது எப்படி? என்றும், புனர்பூஜை செய்வது எப்படி? என்றும் கீழே விரிவாக காணலாம்.
வீட்டில் செல்வம் செழிக்க, வீட்டில் இருப்பவர்கள் ஆரோக்கியத்துடன் இருப்பதற்காக வரலட்சுமி பூஜை செய்யப்படுகிறது. இந்த பூஜையை யார் வேண்டுமானாலும் செய்யலாம் என்றாலும், பெரும்பாலான வீடுகளில் பெண்களே இந்த பூஜையை செய்கின்றனர்.
நடப்பாண்டில் வரலட்சுமி பூஜை வரும் ஆகஸ்ட் 16ம் தேதி கொண்டாடப்படுகிறது. ஆடி மாத கடைசி வெள்ளியில் வரும் இந்த வரலட்சுமி விரதம் மிகுந்த சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
வரலட்சுமி பூஜை செய்வது எப்படி?
வரலட்சுமி பூஜையை வியாழன், வெள்ளி, சனி என்று மூன்று நாட்கள் செய்யலாம். 3 நாட்கள் செய்ய முடியாவிட்டால் வெள்ளிக்கிழமை நாளில் செய்வது நல்லது. மகாலட்சுமியை வியாழக்கிழமை அழைத்து வெள்ளிக்கிழமை பூஜை செய்யப்படுகிறது. சனிக்கிழமை புனர்பூஜை செய்யப்படுகிறது.
- முதல் நாளே வீட்டை கழுவி, சுத்தம் செய்து கொள்ள வேண்டும். சாமி படங்களையும் சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
- வரலட்சுமி படத்தை சுத்தமாக்கி பூஜை தினத்தில் குங்குமம், சந்தனம் வைக்க வேண்டும்.
- வாழைப்பழம், வெற்றிலை பாக்கு வைக்க வேண்டும். தாமரை இலை கிடைத்தால் கூடுதல் சிறப்பு ஆகும்.
- ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்கள் இருந்தாலும் கூடுதல் சிறப்பு ஆகும்
- துளசி, வில்வம், அருகு ஆகியவற்றை அர்ச்சனைக்கு பயன்படுத்துவது சிறப்பு ஆகும்.
- பூக்களை கட்டி அம்மனின் பாதத்தில் வைக்க வேண்டும்.
- பின்னர், அம்மனுக்கு தீபாராதனை காட்டி பூஜை செய்ய வேண்டும்.
- கலசம் வைத்து வழிபட்டால் கலசத்தின் உள்ளே அரசி, நாணயங்கள், ரூபாய்கள் இருக்க வேண்டும்
- கலசத்தின் மேலே தேங்காய், அதைச் சுற்றி மாவிலை இருக்க வேண்டும்.
- கலசத்தை பூக்களால் அலங்கரிக்க வேண்டும். சந்தனம், குங்குமம் வைக்க வேண்டும்.
- கலசத்தின் அருகில் குத்து விளக்கு ஏற்றுவது கூடுதல் சிறப்பு ஆகும்.
இந்த பூஜையை வெள்ளிக்கிழமை காலை 10.20 மணிக்குள் செய்து முடிக்க வேண்டும். வரலட்சுமி பூஜை செய்யும் நேரத்தில் தாலிச்சரடு மாற்றிக் கொள்ள விரும்பும் பெண்கள் மாற்றிக் கொள்ளலாம்.
புனர்பூஜை செய்வது எப்படி?
வரலட்சுமி பூஜை செய்த அடுத்த நாள் புனர்பூஜை செய்யப்படுகிறது. வரலட்சுமி பூஜை படத்தை வைத்து மட்டுமின்றி கலசத்தை வைத்தும் செய்யப்படுகிறது. அவ்வாறு கலசத்தை வைத்து பூஜை செய்தால் அந்த கலசத்தை சமையலறையில் உள்ள அரிசி பாத்திரத்தில் வைத்துவிட வேண்டும்.
சமையலறை என்பது அன்னபூரணி வாசம் செய்யும் இடமாகும். வீட்டில் நிரந்தரமாக செல்வ செழிப்புடன் ஆரோக்கியமாக நிம்மதியாக வாழ வேண்டும் என்று வேண்டிக்கொண்டு அந்த கலசத்தை வைக்க வேண்டும். கலசத்தின் மேலே வைத்திருக்கும் தேங்காயை கொண்டு வீட்டில் ஏதேனும் இனிப்பு செய்யலாம்.
கலசத்தின் உள்ளே வைத்திருக்கும் நாணயத்தை வீட்டின் பீரோ, பணம் சேகரிக்கும் பெட்டகத்தில் வைப்பது நல்லது ஆகும். கலசத்தில் வைக்கப்பட்ட பொருட்களை சமையலுக்கு பயன்படுத்துவதுடன், கலசத்தில் வைத்த அரிசியை சர்க்கரை பொங்கல் செய்வதும் நல்லது ஆகும்.