Vaikunta Ekadasi Fasting : வைகுண்ட ஏகாதசி... விரதம், நேரம்... என்னவெல்லாம் சாப்பிடலாம்... முழு விவரம் இதோ...
Vaikunta Ekadasi Fasting : வைகுண்ட ஏகாதசி அன்று விரதம் எப்படி கடைப்பிடிப்பது என்பது பற்றி கீழே காணலாம்.
வைகுண்ட ஏகாதசி:
பெருமாளுக்கு உகந்த மாதமான மார்கழியில் ஆண்டுதோறும் வளர்பிறை பதினோராம் நாள் வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது. இந்துக்களின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றான வைகுண்ட ஏகாதசி 2023ஆம் ஆண்டு ஜனவரி 2-ஆம் தேதி (நாளை) கொண்டாடப்பட உள்ளது. வைகுண்ட ஏகாதசியை திருஅத்யயன உற்சவம் எனவும் அழைப்பர். சொர்க்க வாசல் வழியே எழுந்தருளி இந்த நாளில் பக்தர்களுக்கு தரிசனம் தரும் பெருமாளை இரவு முழுவதும் கண் விழித்தும், விரதமிருந்தும் பக்தர்கள் வழிபடுகின்றனர்.
108 வைணவ ஸ்தலங்களில் முதன்மையானதும், தமிழ்நாட்டின் முதன்மையான ஸ்தலமுமான ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழா 21 நாள்கள் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த விழா பகல் பத்து, இராப்பத்து என இரண்டு பகுதிகளாகக் கொண்டாடப்படுகிறது.
புராண கதை:
பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயில், திருப்பதி ஏழுமலையான் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் ஆகியவற்றில் இந்த நிகழ்வு வெகுசிறப்பாக நடைபெறும். இந்த விழாக்களில் கலந்துகொண்டு பெருமாளை அருகிலிருந்து சேவித்தால் மறுஜென்மம் கிடையாது என்பது ஐதீகம்.
முரன் எனும் அரக்கன் தேவர்களையும் முனிவர்களையும் மிகவும் துன்புறுத்தி வந்த நிலையில், தங்களைக் காப்பாற்றும்படி பகவான் விஷ்ணுவிடம் அவர்கள் அனைவரும் முறையிட்டனர். எனவே அனைவரையும் காக்கும் விதமாக பகவான் விஷ்ணு அரக்கன் முரனுடன் போரிட்டு படைக்கலன்களை அழித்தார்.
குகையில் விஷ்ணு பகவான் ஓய்வெடுக்கச்சென்ற நிலையில், படைக்கலன்கள் அழிந்த ஆத்திரத்திலிருந்த அரக்கன் முரன் பெருமாளைக் கொல்ல வாளேந்தி சென்றார். அப்போது விஷ்ணுவின் உடலில் இருந்து வெளிப்பட்ட சக்தி, பெண் உருவெடுத்து முரனுடன் போரிட்டு வென்றார். திருமாலின் சக்தியால் உருவான அந்தப் பெண்ணுக்கு ஏகாதசி என பள்ளி கொண்ட பெருமான் பெயரிட்டார். இவ்வாறு ஏகாதசி என்ற பெயர் வந்தது.
எப்போது விரதம் துவங்குவது?
பெருமாளுக்கு உகந்தது ஏகாதசி திதி. வளர்பிறை, தேய்பிறை ஆகிய இரண்டு காலங்களிலும் வரும் ஏகாதசி திதிகள் சிறப்புமிக்கவை. 2023-ஆம் ஆண்டின் முதல் நிகழ்வான வைகுண்ட ஏகாதசி ஜனவரி 2-ஆம் தேதி வருகிறது. இதற்கு பலரும் விரதம் இருந்து வழிபடுவார்கள். ஜனவரி 1-ஆம் தேதி அன்று இரவு எளிமையான உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். அதன்பிறகு ஜனவரி 2-ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டவுடன் விரதத்தை துவங்க வேண்டும். சொர்க்கவாசல் திறந்தவுடன் கோயிலுக்கு சென்றோ அல்லது வீட்டிலோ பெருமாளை வழிப்பட வேண்டும். அதன்பின், அடுத்த நாள் காலை பூஜையை முடித்துவிட்டு உணவை சாப்பிட தொடங்கலாம்.
என்னெல்லாம் சாப்பிடலாம்?
ஜனவரி 2-ஆம் தேதி சொர்க்கவாசல் திறந்தவுடன் விரதத்தை துவங்க வேண்டும். அதன்படி, ஏகாதசி அன்று முழுவதும் உணவு உட்கொள்ளாமல் இருக்க வேண்டும். முழு விரதம் இருக்க முடியாதவர்கள் பால், பழங்கள் மற்றும் இறைவனுக்கு வைத்து பூஜை செய்யப்படும் உணவை சாப்பிடலாம். குழந்தைகள், வயதானவர்கள் இருந்தால் அவல், பொறி, பழச்சாறு போன்றவற்றை உணவாக எடுத்துக் கொள்ளலாம். அன்று மாலை விஷ்னு கோயிலுக்கு சென்று வழிப்பட வேண்டும்.
ஏகாதசி அன்று இரவு முழுவதும் கண் விழித்திருக்க வேண்டும். இரவு முழுவதும் விஷ்னு நாமவளி, நாலாயிர திவ்ய பிரபந்தம் போன்ற மந்திரங்களை இரவில் சொல்ல வேண்டும். எதுவும் சொல்ல முடியாதவர்கள் ’ஓம் நமோ நாராயணாய’ என்ற மந்திரத்தை முடிந்த அளவு சொல்ல வேண்டும்.
விரதம் நிறைவு எப்போது?
ஏகாதசி அன்று அதாவது ஜனவரி 2ஆம் தேதி அன்று முழுவதும் விரதம் இருந்த பின்னர், ஜனவரி 3ஆம் தேதி அதிகாலை தலைகுளித்துவிட்டு பெருமாளை பிராத்திக்க வேண்டும். பிறகு 21 காய்கறிகளை பயன்படுத்தி சமைத்து சாப்பிட வேண்டும். இல்லையென்றால் முடிந்த அளவு காய்கறிகளை வைத்து சமைத்து சாப்பிடலாம். பிறகு, பெருமாளுக்கு, சமைத்த உணவுகள், இனிப்பு, பழங்கள் போன்றவற்றை வைத்து நைவேத்தியம் செய்த பிறகு நாமும் சாப்பிட துவங்கலாம்.
பின்னர், ஜனவரி 3-ஆம் தேதி வழக்கமான உணவை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அன்று முழுவதும் தூங்கக் கூடாது. அன்று மாலை 6 மணிக்கு வீட்டில் விளக்கேற்றி வழிப்பட்ட பிறகு தூங்க வேண்டும்.