ஸ்ரீரங்கம் கோயில் வைகுண்ட ஏகாதேசி திருவிழாவில் 15.8 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம்
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் திருக்கோவிலில் , 22 நாளாக நடந்த வைகுண்ட ஏகாதசி திருவிழாவில் 15.8 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர். கோவில் நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது.
108 வைணவத் திருத்தலங்களுள் முதல் திருத்தலமாகப் போற்றப்படும் திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயில், பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுகிறது. காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளால் சூழப்பட்ட தீவில், 7 சுற்று மதில்களுடன் இக்கோயில் அமைந்துள்ளது. திருப்பாற்கடலில் இருந்து தோன்றிய ரங்கநாதரை, நெடுங்காலமாக பிரம்மதேவர் பூஜித்து வந்தார். ரங்கநாதருக்கு நித்திய பூஜைகள் செய்ய, சூரியன் நியமிக்கப்பட்டார். சூரிய குலத்தில் தோன்றிய ராமபிரானும், அயோத்தியில் இருந்த ரங்கநாதரை வழிபட்டு வந்தார். ஸ்ரீராம பட்டாபிஷேகத்துக்கு வருகை புரிந்த விபீஷணனுக்கு, ராமபிரான், தான் பூஜித்து வந்த ரங்கநாதர் சிலையை பரிசாக அளித்தார். விபீஷணன், இலங்கை திரும்பும் வழியில், சற்று நேரம் ஓய்வெடுக்க எண்ணினார். ரங்கநாதர் சிலையை கீழே வைக்க விரும்பாத விபீஷணன், காவிரி ஆற்றங்கரையில் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் சிறுவனிடம் அச்சிலையைக் கொடுத்து, எக்காரணம் கொண்டும் கீழே வைக்கக் கூடாது என்று கூறிவிட்டு, சற்று நேரம் ஓய்வெடுத்தார். ஆனால் அச்சிறுவன், ரங்கநாதர் சிலையைக் கீழே வைத்துவிட்டான். சிறிது நேரம் இளைப்பாறிவிட்டு வந்த விபீஷணன், சிறுவனைக் கடிந்து கொண்டார். தரையில் இருந்து மீண்டும் ரங்கநாதர் சிலையை எடுக்க இயலவில்லை.
இதனால் கலங்கிய மனநிலையில் இருந்த விபீஷணனுக்கு, அப்பகுதியை ஆட்சி புரிந்த மன்னர் தர்மவர்மன் ஆறுதல் கூறினார். ரங்கநாதருக்கு காவிரிக் கரையிலேயே தங்கியிருக்க வேண்டும் என்று விருப்பம். அதனால் குடதிசை முடியை வைத்து, குணதிசை பாதம் நீட்டி, வடதிசை பின்பு காட்டி, விபீஷணன் இருக்கும் தென் திசை இலங்கை நோக்கி பள்ளிகொண்டு அருள்வதாக உறுதியளித்தார். சிறுவனாக வந்தது விநாயகப் பெருமான் என்று கூறப்படுகிறது. அவரே மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் என்று அழைக்கப்படுகிறார். ரங்கநாதரின் விருப்பத்துக்கு ஏற்ப தர்மவர்மனும், இவ்விடத்தில் கோயில் கட்டி வழிபட்டார். காலப்போக்கில் இக்கோயில் வெள்ளப்பெருக்கில் மண்ணில் மறைந்து போனதாக கூறப்படுகிறது. மன்னர் தர்மசோழர் மரபில் வந்த கிள்ளிவளவன், இக்கோயிலை மீண்டும் அமைத்து வழிபட்டதாக வரலாறு கூறுகிறது.
இந்த சிறப்புமிக்க கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த டிசம்பர் மாதம் 12-ந் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. பகல்பத்து, ராப்பத்து என 20 நாட்கள் நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் பிரதான நிகழ்ச்சியான சொர்க்க வாசல் திறப்பு கடந்த டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி நடைபெற்றது. ஜனவரி 2ஆம் தேதி நம்மாழ்வார் மோட்சத்துடன் நிறைவடைந்தது. இந்த வைகுண்ட ஏகாதேசி விழாவின் போது ஒவ்வொரு நாளும் பெரும்மாள் சிறப்பு அலங்காரத்தில் பக்கதர்களுக்கு காட்சியளித்தார். இந்நிலையில் இந்த விழாவில் ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வருகை புரிந்த பக்தர்களின் எண்ணிக்கை விவரத்தை கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி விழாவின் முக்கிய நிகழ்வான டிசம்பர் 23ஆம் தேதி பரமபத வாசல் திறக்கப்பட்டதில் சுமார் 2.1 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மேலும் ரா பத்து விழாக்களின் போது தினமும் சராசரியாக 1 லட்சம் பார்வையாளர்கள் வருகை தந்தனர். அதேபோல் பகல் பத்து கொண்டாட்டங்களில் சராசரியாக ஒரு நாளைக்கு 42,000 பேர் கலந்து கொண்டனர். மொத்தம் 22 நாளாக நடந்த வைகுண்ட ஏகாதசி திருவிழாவில் 15.8 லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக விரைவு தரிசனத்திற்காக சிறப்பு நுழைவு சீட்டு கட்டணம் ஒருவருக்கு 100 ரூபாய் விற்கப்பட்டது. குறிப்பாக பரமபத வாசல் தினத்தை ஒட்டி பக்தர்கள் அருகாமையில் சென்று வழிபாடுகளை காண ஏதுவாக தலா 700 ரூபாய்க்கு தனி சிறப்பு டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டது. கோவிலில் டிக்கெட் விற்பனையும் சிறப்பாக நடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும், முந்தைய 2022-2023 திருவிழாவில் சுமார் 14.4 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதேபோல் 2021-2022 ஆண்டு திருவிழாவின் 10.5 லட்சம் பேர் திருவிழாவில் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர் என்பது குறிப்பிடதக்கது.