’ஒருமுறை வணங்கினால் வாழ்நாள் முழுவதும் பாதுகாப்பு’ மகா பத்ரகாளியின் கோயிலின் பெருமைகள்..!
'பெண்கள், குழந்தைகள் இந்த கோயிலுக்கு வந்து வணங்கிச் சென்றால், காளியே இன்னொரு உருவெடுத்து அவர்களின் பாதுகாப்பு அரணாக செல்வாள் என்பது மக்களின் நம்பிக்கை’

திருவாரூர் மாவட்டம் வடுவூரில், தஞ்சை – மன்னார்குடி சாலையில் எழுந்தருளியிருக்கும் மகா பத்ர காளியம்மன் கோயில் குடமுழுக்கு நாளை காலை 10.30 மணிக்கு கோலாகலமாக நடைபெறவிருக்கிறது.
கண் கண்ட தெய்வமான காளி
வடுவூர் தன்னரசு நாட்டை காக்கும் முக்கிய தெய்வங்களுள் ஒன்றான மகா பத்ர காளியம்மன் கோயில் அடிச்சேரி கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்டு, காளி அம்மனின் பழைய திருவுருவச் சிலை அப்படியே புதிய கோயில் கருவறையில் எடுத்து வைக்கப்பட்டு, காளியின் திருக்கண் திறக்கப்பட்டு, நாளை புனித நீர் ஊற்றி புதிய கோயிலின் பிரம்மாண்ட குடமுழுக்கு திருவிழா நடைபெறவிருக்கிறது.
மூன்று நாட்கள் நடைபெற்ற யாகம்
அதற்காக கடந்த திங்கள்கிழமை தொடங்கிய மூன்று நாள் யாகம் எட்டுக்குடி பாஸ்கர சேது சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்று வருகிறது. முதல் நாளில் கணபதி ஹோமம் தொடங்கி, அனுங்ஞை, விக்னேஸ்வர பூஜை, எஜமானர் சங்கல்பம், வாஸ்து சாந்தி என முதல் நாளில் பல யாகங்களும் இரண்டாவது நாளில் வேதிகா அர்ச்சனை தொடங்கி, பூர்ணஹிதி, தீபாராதனையோடு விமான கலசம் பிரதிஷ்டை, மூலவர் பிரஷ்டை, ஸ்வாமிகளுக்கு கண் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நாளை குடமுழுக்கு
இந்நிலையில், நாளை காலை 7 மணிக்கு யாகசாலை பூஜை தொடங்கி, கோ பூஜை, வேதிகா அர்ச்சனை, திரவியயாஹிரிதி, தீபாரதணை காட்டப்படும். அதனையடுத்து, காலை பத்து மணிக்கு நாமகர்ணம் செய்யப்பட்டு, கெடம் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெறும். பின்னர் காலை 10 மணிக்கு விமான குடமுழுக்கும், காலை 10.45 மணிக்கு மூலவர் கும்பாபிஷேகமும் பரிவாரங்களுக்கு கும்பாபிசேகமும் நடைபெறவுள்ளது.
கருப்பண்ணசாமியும், பேச்சியம்மனும்
மகா பத்ர காளியம்மன் கோயிலில் தனியாக தன்னரசு நாட்டின் காவல் தெய்வங்களான கருப்பண்ணசாமிக்கும் பேச்சியம்மனுக்கும் தனியாக சன்னதி அமைக்கப்பட்டுள்ளது.
கோயில் பெருமை
காத்து, கருப்பு, பில்லி, சூனியம் உள்ளிட்ட துஷ்ட சக்திகளால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களின் குடும்பத்தினர் காளியம்மனை வந்து வணங்கினால் அந்த தாக்கம் மறைந்து குணமாவார்கள் என்பது ஐதீகம். அதோடு, மனதில் நினைத்த காரியங்கள் நிறைவேற வேண்டுமென்றால் காளியின் சன்னதியில் மண்டியிட்டு, வாசலில் சிதறுக்காய் உடைத்து வழிபட்டால் அவர்கள் நினைத்த காரியம் நிறைவேறும் என்பதும் வடுவூர் மக்களின் நம்பிக்கை. குறிப்பாக, நெடுந் தொலைவு வாகனங்களில் செல்பவர்கள் விபத்து உள்ளிட்ட எந்த பாதிப்புகளிலும் சிக்காமல் செல்வதற்கு, வாகனங்களை காளி கோயில் அருகே நிறுத்தி, காளி பாதங்களில் வைத்து எடுத்த எலுமிச்சை பழங்களை சக்கரங்களில் வைத்து நசுக்கி சென்றால், அவர்கள் செல்லும் வழியெல்லாம் மகா பத்ர காளியின் காவல் வேலி தொடர்ந்து, அவர்களை அரணாக காக்கும் என்றும் சொல்லப்படுவதால் தஞ்சை – மன்னை சாலையில் வாகனங்களில் செல்பவர்கள் காளியை வணங்கி செல்வது பாரம்பரிய வழக்கமாக இருக்கிறது.
பாதுகாப்புக்கு காளி தேவி
குறிப்பாக, பெண்களின் பாதுகாப்பு தெய்வமாக விளங்கும் மகா பத்ர காளியம்மனை ஒருமுறை வந்து வணங்கி சென்றாலே, வாழ்நாள் முழுவதும் காப்பவளாக, வணங்கும் அந்த பெண்களுடனே உருவெடுத்து செல்வாள் காளி, என்ற நம்பிக்கையும் இங்கு நிலவுகிறது. அதே நேரத்தில் குழந்தை இல்லாதவர்கள் விருதம் இருந்து காளியம்மனுக்கு பொங்கல் வைத்து வழிபட்டால், குழந்தை வரமும் கொடுப்பாள் இந்த காளி என்பதால் காளி என்ற பெயரோடு சேர்த்து ’அம்மன்’ என்றும் இந்த தெய்வம் அழைக்கப்படும் வரலாறும் அடையாளுமும் இருப்பதால் வடுவூர் சுற்றுவட்டாரம் மட்டுமின்றி தஞ்சாவூர், திருவாரூர் மாவட்டங்களில் பெயர் பெற்ற தெய்வமாக மகா பத்ர காளி விளங்கி வருகிறாள் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்ரெண்டிங் செய்திகள்























