தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் சித்திரை திருவிழா தேரோட்டம்
இத்திருக்கோயிலில் உள்ள ‘வாஞ்சா புஷ்கரணி’ என்ற கிணற்று தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டு வந்தால் பிள்ளை பேறு கிடைக்கும் என்பது ஐதீகம். குழந்தை வரம் தரும் அற்புதத் திருத்தலமாக இவ்வாலயம் விளங்குகிறது.
தூத்துக்குடி பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலய சித்திரை திருவிழாவின் தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
தூத்துக்குடியில் உள்ள பழமையான பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் ஆலய சித்திரை திருவிழா கடந்த 14ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஒவ்வொரு நாளும் சுவாமி அம்பாள் பரிவார மூர்த்திகளுடன் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு சுவாமி சங்கர ராமேஸ்வரர் மற்றும் பாகம் பிரியாள், விநாயகர், முருகப்பெருமான் ஆகியோர் அபிஷேக மண்டபத்தில் எழுந்தருளினர். பின்னர் பல்வேறு வகையான வாசனை திரவியங்கள் அபிஷேகம் செய்யப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதை அடுத்து விநாயகர், முருகப்பெருமான் சிறிய தேரில் எழுந்தருளியும், சங்கர ராமேஸ்வரர் பாகம்பிரியாள் பெரிய தேரில் எழுந்தருளினார் இந்தத் திருத்தேரோட்டத்தை அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, செல்வம் பட்டர், அறங்காவல குழு தலைவர் செந்தில்குமார் ஆகியோர் வடம் பிடித்து துவக்கி வைத்தனர். இந்த தேரோட்டத்தில் கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், பொய்க்கால் குதிரை, தப்பாட்டம், சிலம்பாட்டம் ஆகிய நாட்டுப்புற கலைகளின் கலை நிகழ்ச்சிகள் ஊர்வலமாக செல்ல பொதுமக்கள் வடம் பிடித்து தேரை ஆயிரக்கணக்கான வடம் பிடித்து இழுத்தனர்.
ஸ்தல புராணம்
தூத்துக்குடி மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ளது அருள்மிகு பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் திருக்கோயில். இத்தல இறைவனை காசிபர், கவுதமர், பரத்துவாசர், அத்திரி போன்ற முனிவர்கள் வணங்கி அருள் பெற்றுள்ளனர். திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமியை தரிசிக்க இவ்வழியே வந்த காசிப முனிவர் இங்கு லிங்கத் திருமேனி எழுப்பி வழிபாடு நடத்தினாராம். உமையாள், சிவபரம்பொருளிடம் திருமந்திரத்தை உபதேசிக்குமாறு கேட்டு, மந்திர உபதேசம் பெற்ற ஊர் ஆதலால், இவ்வூருக்கு ‘திருமந்திர நகர்’ என்ற சிறப்புப் பெயரும் உண்டு. கயத்தாரைத் தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி புரிந்த குறுநிலமன்னனான சங்கரராம பாண்டியன், இத்தல இறைவனை தரிசித்து குழந்தைப் பேறு பெற்றதால் கோயில் எழுப்பினான்.சங்கரராமப் பாண்டிய மன்னன் எழுப்பியக் கோயிலாததால் இத்தல இறைவனுக்கு சங்கர ராமேஸ்வரர் என்ற திருநாமம் சூட்டப்பட்டது. இங்கு ஆண்டுதோறும் நடக்கும் திருவிழாவில் சித்திரைப் பெருந்திருவிழா சிறப்பானதாகும்.
இத்திருக்கோயிலில் உள்ள ‘வாஞ்சா புஷ்கரணி’ என்ற கிணற்று தீர்த்தத்தில் நீராடி இறைவனை வழிபட்டு வந்தால் பிள்ளை பேறு கிடைக்கும் என்பது ஐதீகம். குழந்தை வரம் தரும் அற்புதத் திருத்தலமாக இவ்வாலயம் விளங்குகிறது. இக்கோவிலில் சுவடி இருப்புக் குறித்து நடத்தப்பட்ட கள ஆய்வில் கிடைத்த 13 சுவடிக்கட்டுகளில் உள்ள 3 ஆயிரத்து 127 ஏடுகள் இருந்தன. இந்த சுவடிகள் பெரும்பாலும் 18 மற்றும் 19-ம் நூற்றாண்டுகளில் எழுதப்பட்டது. இதில் ஒரு பெரிய ஓலைச்சுவடியில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் பாடிய தேவாரம் என்று அழைக்கப்படும் ஏழு திருமுறைகளும் மற்றொரு சுவடியில் பெரியபுராணமும், நம்பியாண்டார் நம்பி எழுதிய திருத்தொண்டர் திருவந்தாதியும் உள்ளது. மாணிக்கவாசகரின் திருவாசகம் மற்றும் திருக்கோவை நானூறு அகத்தியர் தேவாரத்திரட்டு, திருமுருகாற்றுப்படை நூலும் திருமந்திரம் நூல் சுவடியும் முழுமையாக இருந்தது. மேலும் பாகம்பிரியாள் திருப்பள்ளியெழுச்சி என்ற சுவடியும், பாகம்பிரியாள் இரட்டைமணிமாலை என்ற சுவடியும் இருந்தன.