திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் திருத்தேர் திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடிப்பு
திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில் இந்திரவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேராட்டம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான சுவேதாரண்யேசுவரர் திருக்கோயில் அமைந்துள்ளது. சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவாலயம் இதுவாகும். இது சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலம். மேலும் புதனுக்கு உரிய தலமாக கருதப்படுகிறது. இந்திரன், வெள்ளை யானை வழிபட்ட தலமென்பது நம்பிக்கை. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 11 வது சிவத்தலமாகும்.
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் சிவ பெருமான் அகோரமூர்த்தியும், ஆதி நடராஜர் தனி சன்னதியிலும் எழுந்தருளியுள்ளனர். நவகிரக ஸ்தலங்களில் புதன் ஸ்தலமாகவும் உள்ளது. இக்கோயிலில் உள்ள சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம் ஆகிய மூன்று குளங்களில் புனிதநீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டால் ஞானம், குழந்தை பாக்கியம் கிடைப்பதுடன், எம பயம் நீங்கும் என்பது ஐதீகம். இத்தகைய சிறப்பு வாய்ந்த சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் ஆண்டு தோறும் மாசி மாதம் இந்திரப் பெருவிழா வெகுவிமரிசையாக நடை பெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு இந்திரப்பெருவிழா மார்ச் 4 -ஆம் தேதி இரவு கொடியேற்றத்துடள் தொடங்கியது. அதனை தொடர்ந்து விழாவில் முக்கிய நிகழ்வான 9 ம் நாள் திருவிழாவான திருத்தேரோட்டம் திருவிழா இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. திருதேர் திருவிழாவை முன்னிட்டு முன்னதாக சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து, வினாயகர், முருகன், சுவாமி, அம்பாள் அடுத்தடுத்த மூன்று தேர்களில் எழுந்தருள திரளான பக்தர்கள் நமச்சிவாய கோஷமிட்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
முன்னதாக திருத்தேரோட்டத்தை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி வடம் பிடித்து இழுத்து திருத்தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். இதையடுத்து திருத்தேர் நான்கு மாடவீதிகளையும் வலம் வந்தது நிலையை அடைய உள்ளது. தேரோட்டத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த ஆயிரகணக்கான பக்தர்கள் திருவெண்காட்டில் குவிந்துள்ளதால் பாதுகாப்பு பணியில் ஏராளமான காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
இந்திரா விழா ஏற்பாட்டினை கோயில் செயல் அலுவலர் செய்திருந்தார். தொடர்ந்து வருகின்ற 12 நாள் நிகழ்வாக மார்ச் 15 ஆம் தேதி இரவு தெப்ப உற்சவமும் 13 நாள் சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் விழாவானது நிறைவு பெறுகின்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவியின் பூர்வீக இல்லத்தின் எதிரில் கோயில் அமைந்துள்ளது மேலும் இன்றைய விழா உபயதாரர் துர்கா ஸ்டாலின் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்..