திருமண தடை நீக்கும் ஸ்தலம் - திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் ஆனி பிரம்மோற்சவம் திருவி்ழா கொடியேற்றம்
Thiruthangal Nindra Narayana Perumal Temple: தானே சிறந்தவள் என்பதை நிரூபிக்க, ஸ்ரீதேவி, வைகுண்டத்தைவிட்டு புறப்பட்டு, தங்காலமலை பகுதிக்கு வந்து தவம் புரிந்தார். ஸ்ரீதேவியின் தவத்தில் மகிழ்ந்த திருமால், இத்தலத்தில் ஸ்ரீதேவிக்கு காட்சி கொடுத்து, ஸ்ரீதேவியே சிறந்தவள் என்று ஏற்றுக் கொண்ட தலம் திருத்தங்கல்.
சிவகாசி அருகே திருத்தங்கல், ஸ்ரீநின்ற நாராயணப்பெருமாள் கோயில் ஆனி பிரம்மோற்சவம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல்லில், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான, பிரசித்தி பெற்ற வைணவ கோயிலான ஸ்ரீநின்ற நாராயணப்பெருமாள் கோயில் உள்ளது.108 வைணவ திவ்ய தேசங்களில், விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் நின்ற நாராயணப் பெருமாள் கோயில், 100-வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. குடவரைக் கோயிலான இத்தலத்தை திருமங்கையாழ்வார், பூதத்தாழ்வார் ஆகியோர் மங்களாசாசனம் செய்துள்ளனர்.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருத்தங்கல் ஸ்ரீநின்ற நாராயணப்பெருமாள் கோயிலில் ஸ்ரீநின்ற நாராயணப்பெருமாள் - ஸ்ரீசெங்கமலத்தாயார் எழுந்தருளி அருள் புரிகின்றனர். இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஆனி பிரம்மோற்சவம் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான ஆனி பிரம்மோற்சவம் திருவிழா கருட கொடியேற்றத்துடன் துவங்கியது.
பிரம்மோற்சவம் திருவிழாவை முன்னிட்டு தினமும் இரவு, ஸ்ரீநின்ற நாராயணப்பெருமாள் - ஸ்ரீசெங்கமலத்தாயார் சுவாமிகள் சூரிய பிரபை, சந்திர பிரபை, சிம்மம், சேஷம், கருடன், அன்னம் வாகனங்களில் எழுந்தருளி நான்கு ரத வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி தருவார்கள். ஆனி பிரம்மோற்சவம் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆனி தேரோட்டம் நிகழ்ச்சி வரும் 25ம் தேதி (செவ்வாய் கிழமை) காலை நடைபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், கோவில் நிர்வாகிகள் மற்றும் நிகழ்ச்சி உபயதாரர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.
ஸ்தல வரலாறு
திருப்பாற்கடலில் திருமால் சயனித்திருந்தார். ஸ்ரீதேவி, பூமாதேவி, நீளாதேவி ஆகிய மூவரிடையே தங்களில் `யார் சிறந்தவர்?’ என்ற போட்டி ஏற்பட்டது. மூவரின் தோழிகளுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒவ்வொருவரும் தங்களுடைய தேவிகளின் பெருமைகளைச் சொல்லி இவரே சிறந்தவர் என வாதிட்டனர். விவாதம் முடியாமல் நீண்டுகொண்டே சென்றது. இந்தச் சூழலில் தானே சிறந்தவள் என்பதை நிரூபிக்கும்பொருட்டு ஶ்ரீதேவி தங்காமலை வந்தார். இங்கு, செங்கமலை நாச்சியார் என்ற பெயரில் இறைவனை நோக்கிக் கடும் தவம் செய்தார். தவத்தை மெச்சி, அவர் முன் தோன்றிய பெருமாள், 'நீயே சிறந்தவள்' எனக் கூறி, ஸ்ரீதேவியை ஏற்றுக்கொண்டார்.இதனால் இத்தலம் திருத்தங்கல் என்று அழைக்கப்படுவதாக கூறுகின்றனர் பக்தர்கள்.