Thiruppavai 13: தாமரை கண்கள் உடைய அழகான பெண்ணே... மகிழ்ச்சியான நீராடுதலை தவிர்க்காதே...தோழியை எழுப்பும் ஆண்டாள்
Margali 13: மார்கழி மாதம் 13வது நாளான இன்று, இந்த நாளுக்கு உரிய திருப்பாவை பாடலாக ஆண்டாள் இயற்றியதை காண்போம்.
மார்கழி மாத்தில் கண்ணபிராணை போற்றி, 30 நாட்களும் 30 பாடல்கள் கொண்ட திருப்பாவையை ஆண்டாள் இயற்றியுள்ளார்.
பன்னிரண்டாவது பாடலில், தோழிகள் படும் சிரமத்தை கூறி எழுப்புவது போல பாடல் அமைத்த ஆண்டாள், பதிமூன்றாவது பாடல் மூலம் எவ்வாறு எழுப்புகிறார் என்பதை காண்போம்.
பதிமூன்றாவது பாடல் விளக்கம்:
பறவை வடிவில் வந்த பகாசுரன் மற்றும் இராவணன் ஆகியோரது தலையினை கொய்தவன் கண்ணன். அவனை போற்றி பாடுவதற்காக, பாவை நோன்பு செய்யும் இடத்திற்கு அனைவரும் சென்றுவிட்டனர்.
வியாழன் மறைந்துவிட்டது, வெள்ளியும் எழுந்துவிட்டது என வானியல் அறிவியலை ஆண்டாள் கையாண்டு உள்ளது வியக்க வைக்கிறது. இந்த நிகழ்வை வைத்து கி.பி 8ஆம் நூற்றாண்டில் ஆண்டாள் வாழ்ந்த காலம் என அறியப்படுகிறது.
பறவைகளும் பாட ஆரம்பித்துவிட்டன, தாமரை போன்ற கண்களை உடைய அழகான பெண்ணே குளுமையான மகிழ்ச்சியான நீராடுதலை தவிர்க்க பார்க்கிறாயே…
நல்ல நாள் வந்துவிட்டது, திருட்டு தனமான தூக்கத்தை எறிந்து விட்டு வா. அதாவது அளவு கடந்து தூக்கத்தை மேற்கொள்வதால், திருட்டு தூக்கம் என குறிப்பிட்டு, தோழியை எழுப்புவது போல் ஆண்டாள் பாடல் அமைத்து இருக்கிறார்.
இப்பாடல் மூலம் அளவான தூக்கம் மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என ஆண்டாள் குறிப்பால் உணர்த்துகிறார்.
திருப்பாவை பதிமூன்றாவது பாடல்
புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்ப்
பிள்ளைக ளெல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழ முறங்கிற்று
புள்ளும் சிலம்பினகாண் போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்துநீ ராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்.
ஆண்டாள்:
கி.பி. எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த பெரியாழ்வாரின் வளர்ப்பு மகளான ஆண்டாள், சூடி கொடுத்த சுடர் கொடி என்றும் செந்தமிழ் செல்வி கோதை நாச்சியார் என்றும் அன்போடு அழைக்கப்படுகிறார். இவர் மிகவும் தமிழ் புலமை மிக்கவராக திகழ்ந்துள்ளார்.
பக்தி இயக்கம்:
கி.பி ஆறாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரையிலான காலத்தை பக்தி இயக்க காலம் என்று அழைப்பர். ஏனென்றால் இக்காலக்கட்டத்தில் பக்தி இலக்கியங்கள் பல உருவாகின என்றும், குறிப்பாக சைவர்களான நாயன்மார்களும், வைணவர்களான ஆழ்வார்களும் இறைவனை போற்றி பல பாடல்கள் இயற்றினர். தமிழுக்கு பங்காற்றியதில், பக்தி இலக்கியங்களுக்கும் பெரும் பங்கு உண்டு.
மார்கழி மாதத்தில், கண்ணபிரானை வைத்து, இலக்கியம் நயம் மிக்கதாகவும், உவமை- உருவகத்தை நேர்த்தியாகவும், தமிழை அழகுப்படுத்தி பாடல் அமைத்திருப்பதை காணும்போது, ஆண்டாளின் தமிழ் வளத்தை அறியலாம்.