Sabarimala Ayyappan Temple: களைகட்டும் சபரிமலை சீசன் ! பக்தர்களுக்காக தரிசன நேரத்தை அதிகரித்த தேவஸ்தானம் போர்டு!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் சாமி தரிசனம் செய்யும் நேரத்தை தேவஸ்தானம் போர்டு அதிகரித்துள்ளது.
கேரள மாநிலம் பத்தினம் திட்டாவில் அமைந்துள்ளது சபரிமலை. உலகப்புகழ்பெற்ற சபரிமலை கோயிலில் ஐயப்பனை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். கார்த்திகை மாதத்தில் மட்டும முதல் நாள் தொடங்கி மண்டல பூஜை காலம் வரை 41 நாட்கள் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும்.
சபரிமலை ஐயப்பன் கோவில்:
மார்கழி மாதத்திலும் தை மாதத்திலும் மகர விளக்கு பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும். பங்குனி மாத ஆராட்டு விழாவும், சித்திரை மாத விஷூகனி காணும் விழாவும் கோயிலில் சிறப்பாக நடைபெறும். இப்படி சபரிமலை ஐயப்பன் கோயில் வழக்கமான கோயில்கள் போல் இல்லாமல் ஒவ்வொரு மாதமும் அந்தந்த பூஜைக்காக திறக்கப்படும். நடை திறக்கும் போது மட்டும் பக்தர்கள் முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்வர்.
அந்த வகையில் இந்த மாதம் 16 ஆம் தேதி மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. 17 ஆம் தேதி முதல் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். சாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் கூட்டம் குவிந்து வருகின்றனர். கடந்த 5 நாட்களில் மட்டும் சுமார் இரண்டரை லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.
பக்தர்கள் தரிசனம்:
சபரிமலையில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. பக்தர்களின் வசதிக்காக திருவாங்கூர் தேவஸ்தானம் தரிசன நேரம் தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஐயப்பனை தரிசனம் செய்ய 16 மணி நேரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு, சுப்ரபாத சேவை மற்றும் நெய் அபிஷேகத்திற்குப் பிறகு தரிசனங்கள் தொடங்கப்படும். பின்னர் மதியம் 1 மணிக்கு தரிசனம் நிறுத்தப்படும். அதன்பிறகு மாலை 4 மணிக்கு மீண்டும் தரிசனம் தொடங்கப்பட்டு இரவு 11 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அதனை தொடர்ந்து ஹரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு பின்னர் நடை அடைக்கப்படும்.
பொதுவாக விஷேச நாட்களில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு மதியம் 1 மணிக்கு நடை அடைக்கப்படும். மீண்டும் மாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு 10 மணிக்கு நடை மூடப்படும். ஆனால் தற்போது பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்படுவதால் அவர்களின் வசதிக்காக இந்த நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
13 ஆயிரம் போலீசார்:
சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டு மற்றும் கேரள அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க 13 ஆயிரம் போலீசார்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பூஜைகளை நேரில் கண்டு ஐயப்பனை தரிசனம் செய்ய இணையதளம் மூலமாக பக்தர்கள் பதிவு செய்து கொள்ளலாம். இதனை தொடர்ந்து, ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கும் வகையில், நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது என தேவசம்போர்டு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் https://sabarimalaonline.org/#/login எனும் இணையதள முகவரியில் தரிசனத்திற்கான முன்பதிவை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.