தஞ்சை வெண்ணாற்றங்கரை சன்னதிகளில் இன்று விடையாற்றி உற்சவம்
தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்த 88 கோயில்களுள் தஞ்சை மாமணிக்கோயில்கள் சிறப்பு வாய்ந்தவை.
தஞ்சாவூர்: தஞ்சையில் 16 பெருமாள்கள் நவநீத சேவை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இன்று (வெள்ளிக்கிழமை) வெண்ணாற்றங்கரை சன்னதிகளில் விடையாற்றி உற்சவம் நடைபெற உள்ளது.
அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்த கோயில்கள்
தஞ்சை அரண்மனை தேவஸ்தானத்துடன் இணைந்த 88 கோயில்களுள் தஞ்சை மாமணிக்கோயில்கள் சிறப்பு வாய்ந்தவை. ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்டதும், 108 திவ்யதேசங்களுள் 3-வதாக விளங்குவதும் தஞ்சை வெண்ணாற்றங்கரையில் உள்ள மேலசிங்கப்பெருமாள், நீலமேகப்பெருமாள், மணிக்குன்ற பெருமாள் கோயில்களாகும்.
கருட வாகனத்தில் சேவை
இந்த கோயில்களில் இந்து சமய அறநிலையத்துறை, தஞ்சை அரண்மனை தேவஸ்தானம், தஞ்சை ராமானுஜ தர்சன சபை ஆகியவை சார்பில் 90-வது ஆண்டாக கருடசேவை பெருவிழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி தஞ்சை நகரில் உள்ள 25 பெருமாள்கள் கருடவாகனத்தில் எழுந்தருளி தஞ்சையில் உள்ள 4 ராஜவீதிகளில் வலம் வந்தன.
நவநீத சேவை உற்சவம்
இந்த நிலையில் தொடர்ந்து நேற்று காலை 16 பெருமாள்கள் நவநீதசேவை நடைபெற்றது. இதனை வெண்ணைத்தாழி உற்சவம் என்றும் அழைப்பர். இதையொட்டி நேற்று காலை நீலமேகப்பெருமாள், நரசிம்மப்பெருமாள், மணிக்குன்னப்பெருமாள், கல்யாண வெங்கடேசப்பெருமாள், மேலராஜவீதி நவநீதகிருஷ்ணன், எல்லையம்மன் தெரு ஜனார்த்தன பெருமாள், கரந்தை யாதவகண்ணன், கீழராஜவீதி வரதராஜபெருமாள், தெற்கு வீதி கலியுக வெங்கடேச பெருமாள், பள்ளியக்ரகாரம் கோதண்டராமபெருமாள், மானம்புச்சாவடி நவநீதகிருஷ்ணன், பிரசன்ன வெங்கடேசபெருமாள், மேலஅலங்கம் ரெங்கநாதபெருமாள், படித்துறை வெங்கடேசபெருமாள், கோட்டை பிரசன்ன வெங்கடேச பெருமாள், விஜயராமர் சன்னதி ஆகிய 16 பெருமாள்கள் அந்தந்த கோவில்களில் இருந்து நவநீத சேவையில் புறப்பட்டு வெண்ணைத்தாழி அலங்காரத்துடன் கொடிமரத்துமூலையை வந்தடைந்தனர்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
பின்னர் கீழராஜவீதி, தெற்கு வீதி, மேலவீதி, வடக்கு வீதி ஆகிய 4 ராஜவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு பெருமாள்கள் வெண்ணைத்தாழி அலங்காரத்தில் காட்சி அளித்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று பெருமாளுக்கு வெண்ணெய் சாற்றி அர்ச்சனை செய்து வழிப்பட்டனர்.
இன்று விடையாற்றி உற்சவம்
பின்னர் வந்த வழியே அந்தந்த கோயில்களுக்கு 16 பெருமாள்களும் சென்றடைந்தனர். விழாவில் இன்று (வெள்ளிக்கிழமை) வெண்ணாற்றங்கரை சன்னதிகளில் விடையாற்றி உற்சவம் நடைபெறுகிறது.