மழையே கொட்டினாலும் வந்து குவிந்து விடுவோம்... எங்கு? யார் தெரியுங்களா?
நேரம் செல்ல செல்ல கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. பெரிய கோயிலின் அழகை கண்டு ரசித்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். மேலும் பல மணி நேரம் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
தஞ்சாவூர்: வார விடுமுறை மற்றும் கார்த்திகை மாத பிறப்பை ஒட்டி மழையை கூட பொருட்படுத்தாமல் தஞ்சை பெரிய கோயிலில் பக்தர்களும், சுற்றுலாப்பயணிகளும் குவிந்தனர்.
உலக புகழ்பெற்றதும்... 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதும்...
உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவில் மாமன்னன் ராஜராஜ சோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகும். யுனெஸ்கோ பாரம்பரிய சின்னமாக விளங்கும் இக்கோயிலின் கட்டிட கலையும் - சிற்ப கலையும் காண தினமும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். வழக்கமாக வேலை நாட்களில் வரும் கூட்டத்தை விட விடுமுறை நாட்களில் அதிகளவில் பெரிய கோயிலுக்கு கூட்டம் வரும்.
தஞ்சாவூரில் காவிரியின் தென்கரையில் அமைந்திருக்கும் இந்தக் கோயில், ராஜராஜேச்சரம், பெருவுடையார் கோயில், பிரஹதீஸ்வரர் ஆலயம் என பல பெயர்களில் குறிப்பிடப்படுகிறது. கொட்டு 1003க்கும் 1010ஆம் ஆண்டிற்கும் இடையில் சோழ மன்னனான ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்தக் கோயில், திராவிடக் கோயில் கலையின் உன்னதமான சான்றாகக் கருதப்படுகிறது.
கோயிலின் சில பகுதிகள் பிற்காலப் பாண்டியர்கள், விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்டன. முன்தாழ்வாரம், நந்தி மண்டபம், அம்மன் சன்னிதி, சுப்ரமணியர் சன்னிதி போன்ற இந்தப் பகுதிகளைத் தவிர கோயில் மற்ற பகுதிகள் ராஜராஜ சோழன் காலத்திலேயே கட்டப்பட்டவை. இக்கோயிலுக்கு தஞ்சை மட்டுமின்றி பிற மாவட்ட, மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் சுற்றுலாப்பயணிகள் வந்து செல்கின்றனர். இதேபோல் வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப்பயணிகள் பெரியகோயிலுக்கு வந்து அதன் கட்டிடக்கலையை கண்டு மகிழ்ந்து செல்கின்றனர்.
வார விடுமுறையில் மழையையும் பொருட்படுத்தவில்லை
இந்நிலையில் வார விடுமுறையால் நேற்று பெரிய கோவிலுக்கு காலையிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வர தொடங்கினர். மழை பெய்ததையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் அதிகளவில் தஞ்சை பெரிய கோயிலில் குவிந்தனர். நேரம் செல்ல செல்ல கட்டுக்கடங்காத கூட்டம் காணப்பட்டது. பெரிய கோயிலின் அழகை கண்டு ரசித்தும், செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர். மேலும் பல மணி நேரம் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
பல்வேறு இடங்களில் இருந்து பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை அழைத்துக் கொண்டு வந்திருந்தனர். பலர் குடும்பம் குடும்பமாக வந்தனர். இதேபோல் கோயிலில் உள்ள அனைத்து சன்னதிகளிலும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது.
ராஜாளி பூங்காவிலும் குவிந்த சுற்றுலாப்பயணிகள்
இதேபோல் தஞ்சை சிவகங்கை பூங்காவிலும் வழக்கத்தை விட அதிக அளவில் பொதுமக்கள் கூட்டம் காணப்பட்டது. அங்கு ஏராளமான சிறுவர்கள் விளையாடி மகிழ்ந்தனர். மேலும் தஞ்சை அருங்காட்சியகம், ராஜாளி பூங்கா, உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ராஜாளி பூங்கா பறவைகளை கைகளில் ஏந்தி அதோடு விளையாடலாம். குழந்தைகளும் மனம் மகிழ்ச்சியோடு பறவைகளுக்கு உணவு வழங்குவது போல் அமைக்கப்பட்டது தான் இந்த ராஜாளி பறவைகள் பூங்கா. தஞ்சையில் உள்ள சுற்றுலா இடங்களில் இது முக்கிய அங்கமாகவே மாறி உள்ளது இந்த ராஜாளிப்பூங்கா என்றால் மிகையில்லை.
இப்பூங்காவில் 20 நாடுகளைச் சேர்ந்த 300-க்கும் அதிகமான அரிய வகை பறவைகள் உள்ளன. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே இப்பூங்கா மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தக்கூடிய விருப்பமான இடமாக மாறியுள்ளது. இந்த பூங்காவில் இன்று காலை முதல் மாலை வரை ஏராளமான சுற்றுலாப்பயணிகள் குவிந்து பறவைகளை கைகளில் ஏந்தி உற்சாகமாகம் அடைந்தனர்.