ரயிலடி டூ கரந்தை வரை.. தஞ்சையில் 61 விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைப்பு
தஞ்சாவூரில் ரயிலடி இருந்து கரந்தை வரை விசர்ஜன ஊர்வலத்தில் 61 விநாயகர் சிலைகள் கொண்டு செல்லப்பட்டு வடவாற்றில் கரைக்கப்பட்டன.
தஞ்சாவூர்: தஞ்சாவூரில் ரயிலடி இருந்து கரந்தை வரை விசர்ஜன ஊர்வலத்தில் 61 விநாயகர் சிலைகள் கொண்டு செல்லப்பட்டு வடவாற்றில் கரைக்கப்பட்டன.
விரதம் என்றால் என்ன?
நினைத்த காரியங்கள் நிறைவேறவும், மன நிம்மதி கிடைக்கவும், வாழ்வில் 16 வகை செல்வங்களும் பெற்று வாழ இறைவனை நினைத்து இருப்பது விரதம். ஒரு விசேஷ நாளில் ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை நினைத்து ஐம்புலனை அடக்கி, உண்ணாமல் இருக்கும் நிலை விரதமாகும். விரதம் இருப்பதால் மனம், புத்தி, உடல் முதலியவை தூய்மை அடையும். விரதங்களை கடைபிடிப்பதால் ஆன்மிக ரீதியான பயன்களுடன் அறிவியல் ரீதியாக உடலும், உள்ளமும் நலம் பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரார்த்தனைகளை நிறைவேற்றும் விரத நாட்களை திதி மற்றும் நட்சத்திரங்கள் அடிப்படையில் கடைபிடிப்பது இந்துக்களின் வழக்கம். திதிகளின் தேவதைகளுக்கு சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு கொடுக்கும் சக்தி உள்ளதால் பிறந்த திதிகளுக்கான தெய்வங்களை வழிபாடு செய்து கொள்வது சிறப்பான பலன்களைத் தரும் என்கின்றனர் ஆன்மீக பெரியோர்கள்.
பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கும் வலிமை பெற்றவை
திதியால் ஏற்படும் கிரக தோஷம் நீங்க அதற்குரிய திதிதேவதைகளை வழிபட்டால் எத்தகைய கடுமையான பாதிப்புகளில் இருந்தும் விடுபடலாம். திதிகளின் அதி தேவதைகளை வழிபாடு செய்தால் அது அவர்களுக்கு காவல் தெய்வங்களாக இருந்து வறுமை பிணி, பீடை, கஷ்டம் என அனைத்து பிரச்சினைகளையும் நீக்கி சுபிட்சமான வாழ்வு கிடைக்கச் செய்யும். பொதுவாக அமாவாசை, பவுர்ணமி, சதுர்த்தி, பஞ்சமி,சஷ்டி, ஏகாதசி, திரயோதசி போன்ற ஒரு சில குறிப்பிட்ட திதிகள் காலத்தால் தீர்க்க முடியாத பல பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுக்கும் வலிமை பெற்றவை.
பக்தர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் விநாயகர்
அந்த வகையில் வளர்பிறை சதுர்த்தி திதியின் அதி தேவதை விநாயகரை ஆவணி மாத வளர்பிறை சதுர்த்தி திதியில் வழிபடுவது மிகவும் உன்னதமானது. இந்துக்களின் வழிபாட்டு தெய்வங்களில் முதன்மையானது விநாயகர் வழிபாடு. கணபதியை வழிபட்டுத் துவங்கும் அனைத்தும் சிறப்பாக வெற்றியடையும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. தன்னை வழிபடும் பக்தர்களின் வேண்டுதல்களை உடனடியாக நிறைவேற்றுவது விநாயகரின் தனிச்சிறப்பு. இத்தகைய சிறப்புகள் பெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டி தஞ்சை நகரில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
61 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக சென்றன
இதன்படி தஞ்சாவூரில் பாஜக, இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் 85 இடங்களில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டன. இவற்றில் பல சிலைகள் கடந்த சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் கரைக்கப்பட்டன. இந்நிலையில், மூன்றாம் நாளான நேற்று மாலை விசர்ஜன ஊர்வலம் நடைபெற்றது. இதில் தஞ்சை நகரின் பல்வேறு பகுதிகளிலும் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்த விநாயகர் சிலைகளும், பல்வேறு பகுதிகளிலிருந்து ஸ்ரீ விஸ்வரூப விநாயகர் விழாக் குழுவினரால் அமைக்கப்பட்ட 45 சிலைகளும், இந்து முன்னணி சார்பில் அமைக்கப்பட்ட 16 சிலைகளும் என மொத்தம் 61விநாயகர் சிலைகள் ரயிலடிக்குக் கொண்டு வரப்பட்டன.
பின்னர், நடைபெற்ற ஊர்வலத்துக்கு ஸ்ரீவிஸ்வரூப விநாயகர் குழு ஒருங்கிணைப்பாளர் வி. விநாயகம் தலைமை வகித்தார். இந்த ஊர்வலத்தை மன்னார்குடி ஜீயர் ஸ்ரீ செண்டலங்கார செண்பகமன்னார் ராமானுஜ ஜீயர் சுவாமிகள் தொடங்கி வைத்தார். பாஜக தெற்கு மாவட்டத் தலைவர் பி. ஜெய்சதீஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
ரயிலடி முதல் கரந்தை வரை ஊர்வலம்
இச்சிலைகள் காந்திஜி சாலை, பழைய பேருந்து நிலையம், தெற்கு வீதி, மேல வீதி, வடக்கு வீதி, கொடிமரத்து மூலை, கரந்தை வழியாக ஊர்வலமாகக் கொண்டு செல்லப்பட்டு, வடவாற்றில் கரைக்கப்பட்டன. இதையொட்டி, நூற்றுக்கும் 300க்கும் அதிகமாக போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் ஆங்காங்கே உள்ள நீர் நிலைகளில் கரைக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது. மாவட்டம் முழுவதும் நேற்று விநாயகர் சிலைகள் விசர்ஜனம் நடந்ததால் ஆயிரத்திற்கும் அதிகமாக போலீசார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு இருந்தனர். விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட பகுதிகளில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டது.