புகழ்பெற்ற மாசிப் பெட்டி எடுப்பு திருவிழா! ஆணி செருப்புடன் வந்த பூசாரிகள் - ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள்
உசிலம்பட்டியில் புகழ்பெற்ற மாசி பெட்டி எடுப்பு திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
உசிலம்பட்டி வீதிகளில் ஊர்வலமாக வந்த பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவிலின் புகழ்பெற்ற மாசி பெட்டிகள் - ஆணி செருப்பில் நடந்து வந்த பூசாரிகளை காண பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி நின்று தரிசனம் செய்தனர்.
புகழ்பெற்ற மாசி பெட்டி எடுப்பு திருவிழா
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பாப்பாபட்டியில் அமைந்துள்ளது புகழ்பெற்ற ஒச்சாண்டம்மன் கோவில். இந்த கோவிலின் மாசி திருவிழாவை முன்னிட்டு புகழ்பெற்ற மாசி பெட்டி எடுப்பு திருவிழா நேற்று முன் தினம் வெகுவிமர்சையாக துவங்கியது. உசிலம்பட்டி சின்னக்கருப்பசாமி கோவிலிலிருந்து ஓச்சாண்டம்மனின் ஆடை, ஆபரணங்கள் அடங்கிய புகழ் பெற்ற மாசி பெட்டிகள் பாப்பாபட்டியில் உள்ள கோவிலுக்கு எடுத்து செல்லப்பட்டு, மாசி சிவராத்திரி இரவு ஆடை ஆபரணங்கள் மூலம் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து நேற்று உசிலம்பட்டியில் உள்ள கருப்பு கோவிலுக்கு திரும்பிய மாசி பெட்டிகள். நேற்று இரவு வடகாட்டுப்பட்டியில் தங்க வைக்கப்பட்டு இன்று மாலை 6 மணியளவில் உசிலம்பட்டிக்கு கொண்டு வரப்பட்டது.
காவல்துறையினருக்கு மரியாதை நிகழ்வு
உசிலம்பட்டியின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்ட. இந்த மாசிப் பெட்டி ஊர்வலத்தின் போது பாதுகாப்பு அளிக்கும் காவல்துறையினருக்கு மரியாதை செலுத்துதல் மற்றும் இரு பூசாரிகள் பாதாள கட்டை எனும் ஆணி செருப்பில் நடந்து வந்தனர். உசிலம்பட்டி நகர் காவல் நிலையம் முன்பு உசிலம்பட்டி டி.எஸ்.பி., விஜயக்குமார், உசிலம்பட்டி உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி மகாராஜன் உள்ளிட்டோர் பூசாரிகள் வழங்கிய மரியாதையை ஏற்றுக் கொண்டு பூசாரிகளுக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
இந்த நிகழ்வுகளை காண மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கேரள மாநிலத்திலிருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடி நின்று மாசி பெட்டி தரிசனம் செய்தனர். இந்த மாசிப் பெட்டி ஊர்வலத்திற்காக உசிலம்பட்டி நகர் பகுதிக்கு வரும் வாகனங்கள் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து மாற்றம் செய்து மாற்று வழியில் அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - மத்திய அரசிடம் திமுக புலி போல் பாயாமல், பூனை போல் ஏன் பதுங்குகிறது - ஆர்.பி.உதயகுமார்
மேலும் செய்திகள் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - TNPSC Group 4: இன்றே கடைசி: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 விண்ணப்பத்தில் திருத்தம் செய்யலாம்!- எப்படி?