குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா - விரதம் தொடங்கிய பக்தர்கள்
சகலநோய்களையும் துன்பங்களையும் நீக்கி வரம் அருள்வதால்தான், குலசை முத்தாரம்மனுக்கு விரதமிருந்து வேடமிட்டு தசராவில் அம்மனின் அருளைப்பெற வரும் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துக்கொண்டே வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற திருத்தலங்களில் குலசேகரபட்டிணம் முத்தாரம்மன் கோயிலும் ஒன்று. இந்தியாவிலேயே மைசூருக்கு அடுத்தப்படியாக தசரா திருவிழாவானது மிகச்சிறப்பாக தூத்துக்குடி மாவட்டம் குலசையில் தான் கொண்டாடப்பட்டு வருகின்றது. அந்த அளவுக்கு பல ஊர்களிலுள்ள மக்கள் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பி 10 நாள்கள் விரதமிருந்து தசரா திருவிழாவில் கலந்துகொள்வார்கள். இதேபோல மாநிலம் முழுவதிலும் இருந்து, தசரா 10-ம் நாள் திருவிழாவான சூரசம்ஹார நிகழ்ச்சியைக் காண குலசைக்குப் படையெடுப்பார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரிலிருந்து கன்னியாகுமரி செல்லும் சாலையில் 13 கி.மீ தொலைவில் உள்ளது குலசை. இத்திருக்கோயிலில் ஒரே பீடத்தில் சுவாமி ஞானமூர்த்தீஸ்வரரும் அம்பிகை முத்தாரம்மனும் அருள்பாலிக்கிறார்கள். கங்கையில் நீராடி காசி விசுவநாதரையும் விசாலாட்சியையும் வழிபட்ட பயன் இங்குள்ள கங்கை கலக்கும் வங்கக்கடலில் நீராடி முத்தாரம்மனையும் ஞானமூர்த்தீஸ்வரரையும் வழிபட்டால் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இந்த ஆண்டு திருவிழா அடுத்த மாதம் 26-ந் தேதி காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அக்டோபர் மாதம் 5-ந் தேதி நள்ளிரவு 12 மணிக்கு மகிஷா சூரசம்ஹாரம் குலசேகரன்பட்டினம் சிதம்பரேஸ்வரர் கோயில் கடற்கரை வளாகத்தில் நடைபெறுகிறது. தசரா திருவிழாவிற்கு வேடம் அணியும் பக்தர்கள் 90 நாட்கள், 60 நாட்கள், 48 நாட்கள், 21 நாட்கள் என விரதம் இருப்பார்கள். இந்நிலையில் பக்தர்கள் குலசேகரன்பட்டினம் கடலில் புனித நீராடி, சிவப்பு ஆடை அணிந்து, துளசி மாலையுடன் கோவிலுக்கு வந்து கோவில் அர்ச்சகர் கையால் அணிந்து விரதம் இருக்க தொடங்கியுள்ளனர். இதற்காக காலையில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் குவிந்து காணப்பட்டனர். நீண்டநேரம் காத்திருந்து மாலை அணிந்து சென்றனர்.
இங்கு பக்தர்கள் தங்களுடைய வேண்டுதல்களை நிறைவேற்ற கோரியும் நிறைவேறிய வேண்டுதல்களுக்காகவும் கிருஷ்ணன், முருகன், விநாயகர், சிவன், அஸ்டகாளி முதல் போலீஸ் வேடம், பிச்சைக்காரர் வேடம், ராஜா ராணி வேடமென பல்வேறு வேடங்கள் அணிந்து கிராமம் கிராமமாக சென்று யாசகம் பெற்று காணிக்கை செலுத்துவது வழக்கம். வேடம் அணியும் பக்தர்கள் 41 நாட்கள் விரதமிருந்து குலசேகரன்பட்டிணம் முத்தாரம்மன் கோயிலுக்கு செல்வது வழக்கமாக பக்தர்களால் பின்பற்றபட்டு வருகிறது. கொடியேற்றத்தை அடுத்து காப்பு அணிந்த பக்தர்கள் பல்வேறு வேடங்களை அணிந்து வீதிகள்தோறும் அம்மனுக்கு காணிக்கை வசூலித்து உண்டியலில் செலுத்துவர்.
தசரா நாள்களில் முதல் நாள் துர்க்கை அலங்காரத்திலும், 2-வது நாள் விசுவகாமேஷ்வரர் அலங்காரத்திலும், 3-வது நாள் பார்வதி அலங்காரத்திலும், 4-வது நாள் பாலசுப்பிரமணியர் அலங்காரத்திலும், 5-வது நாள் நவநீதகிருஷ்ணன் அலங்காரத்திலும், 6-வது நாள் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்திலும், 7-வது நாள் ஆனந்த நடராசர் அலங்காரத்திலும், 8-வது நாள் அலைமகள் அலங்காரத்திலும், 9-வது நாள் கலைமகள் அலங்காரத்திலும் காட்சியளித்து, திருச்சப்பரத்தில் வீதியுலா வரும் நிகழ்ச்சி நடக்கும். 10-வது நாள் அம்பிகை மகிஷாசுரமர்த்தினி திருக்கோலத்தில் எழுந்தருள, கடற்கரையில் சூரசம்ஹாரம் நடக்கும்.
கோவில் கொடியேற்றம் நடைபெற்ற பின்பு காப்பு அணிந்து தனித்தனியாகவும், குழுக்களாகவும் சேர்ந்து காணிக்கை பிரித்து கோவிலில் செலுத்துவார்கள்.மேலும், மாலை அணிந்த பக்தர்கள் அவர்களது ஊரில் தசரா குடில் அமைத்து அதில் தங்கி விரதம் இருப்பார்கள். இவ்வாறு விரதம் இருக்கும் பக்தர்கள் ஒருவேளை மதியம் மட்டுமே பச்சரிசி சாதம் உணவு சாப்பிடுவார்கள்.கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் அனுமதியின்றி தசரா திருவிழா நடைபெற்றது. இந்தாண்டு லட்சக்கணக்கான பக்தர்கள் தசரா திருவிழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அம்மை நோய் என்றில்லை, சகல நோய் களையும் துன்பங்களையும் நீக்கி வரமருளுவதால்தான், குலசை முத்தாரம்மனுக்கு விரதமிருந்து வேடமிட்டு தசராவில் அம்மனின் அருளைப்பெற வரும் பக்தர்களின் கூட்டம் ஆண்டுக்காண்டு அதிகரித்துக்கொண்டே வருகிறது.