ஆன்மீகம்: மேட்டு மகாதானபுரம் மகாலட்சுமி கோயில் திருவிழா; தலையில் தேங்காய் உடைத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி உள்ளிட்ட வெளிமாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு தலையில் தேங்காய் உடைத்து தங்களது நேர்த்தி கடனை நிறைவேற்றினர்.
குளித்தலை அருகே மேட்டு மகாதானபுரம் மகாலட்சுமி கோவிலில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்து தங்களது நேர்த்தி கடனை நிறைவேற்றும் வினோத திருவிழா நடைபெற்றது.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மேட்டு மகாதானபுரத்தில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ மகாலட்சுமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் கிருஷ்ணராயபுரம் தேவர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி 19 அன்று பக்தர்கள் தங்கள் தலையில் தேங்காய் உடைக்க நேர்த்தி கடனை நிறைவேற்றும் வினோத திருவிழா நடைபெறுவது வழக்கம். முன்னதாக ஆடி 18 அன்று இரவு மகாதானபுரம் காவிரி ஆற்றில் பூசாரி கத்தி வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து ஆடி 19 காலை சுவாமி மகாலட்சுமி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் பரிவார தெய்வங்களுடன் திருவீதி உலா கண்டு கோவிலை வந்தடைந்தார்.
பின்னர் சுவாமி அம்பாளுக்கு பரம்பரை பூசாரி ஆணி கால் அணிந்து சிறப்பு பூஜைகள் செய்தார். பின்பு கோவில் கொடி மரத்தில் விளக்கு ஏற்றப்பட்டு கருடன் வட்டமிட்டத்தை தொடர்ந்து ஏழு பூசாரிகளும் ஒன்றாக கோயிலை வலம் வந்தனர். பெரிய பூசாரியின் மேல் அம்மன் அருள் வந்து இறங்கியதும் சப்த கன்னிமார்களை குறிக்கும் வகையில் கோவில் வளாகத்தில் அமர்ந்திருந்த 24 மணி தெலுங்கு செட்டியார் ஏழு பேரும் குறும்ப கவுண்டர்கள் 7 பேரும் தலையில் முதலில் தேங்காய் உடைக்கப்பட்டு பின்னர் வரிசையாக அமைந்திருந்த 520 பக்தர்கள் தலையில் தேங்காய் உடைக்கப்பட்டது. தலையில் தேங்காய் உடைக்கும் போது பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்று நாம முழக்கமிட்டும், மகாலட்சுமி தாயே என்றும் கோஷம் எழுப்பினர்.
இதில் சென்னை, கோவை, திருப்பூர், சேலம், திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி உள்ளிட்ட வெளிமாநிலத்தை சேர்ந்த பக்தர்கள் பலரும் கலந்து கொண்டு தலையில் தேங்காய் உடைத்து தங்களது நேர்த்தி கடனை நிறைவேற்றினர். இதில் சுமார் 3000 க்கு மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.