(Source: ECI/ABP News/ABP Majha)
பக்தர்களே....ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழா தேதி அறிவிப்பு
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேர்த்திருவிழாவையொட்டி தேரில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சித்திரை தேர்த்திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான விழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி தேரில் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக கோவில் அர்ச்சகர்கள் வேதங்கள் சொல்ல முகூர்த்தக்காலில் புனிதநீர் தெளித்து, சந்தனம் பூசி, முகூர்த்தக்காலின் நுனியில் மாவிலை, பூமாலை உள்ளிட்ட மங்கலபொருட்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. அதன் பின்னர் காலை 10.15 மணியளவில் மிதுன லக்னத்தில் முகூர்த்தக்காலை தேரில் கோவில் இணைஆணையர் மாரிமுத்து, அர்ச்சகர்கள், அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் நட்டனர். அப்போது கோவில் யானைகள் ஆண்டாள், லட்சுமி தும்பிக்கையை உயர்த்தி மரியாதை செலுத்தின.
இந்நிகழ்ச்சியில் கோவில் அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். சித்திரை தேர்த்திருவிழாவையொட்டி இன்று அதிகாலை 4.30 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு அதிகாலை 5 மணிக்கு கொடியேற்ற மண்டபம் வந்தடைந்தார். காலை 6.30 மணிமுதல் 7 மணிக்குள் மேஷ லக்னத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. பின்னர் கொடிமண்டபத்தில் இருந்து நம்பெருமாள் காலை 7.30 மணிக்கு புறப்பட்டு காலை 7.45 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.
இதனை தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு சித்திரை வீதிகளில் உலா வந்து இரவு 8.30 மணிக்கு சந்தனு மண்டபம் வந்தடைகிறார். அங்கிருந்து புறப்பட்டு இரவு 9 மணிக்கு யாகசாலையை சென்றடைகிறார். அங்கு நம்பெருமாள் திருமஞ்சனம் கண்டருளுகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு 12-ந் தேதி அதிகாலை 2 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைகிறார். அன்று மாலை கற்பகவிருட்ச வாகனத்தில் உலா வருகிறார்.
13-ந் தேதி காலை சிம்ம வாகனத்திலும், மாலை யாளி வாகனத்திலும், 14-ந் தேதி காலை இரட்டை பிரபை வாகனத்திலும், மாலை கருடவாகனத்திலும், 15-ந்தேதி காலை சேஷவாகனத்திலும், மாலை அனுமந்த வாகனத்திலும், 16-ந்தேதி காலை தங்க ஹம்ச வாகனத்திலும், மாலை யானை வாகனத்திலும் நம்பெருமாள் எழுந்தருளி சித்திரை வீதிகளில் உலா வருகிறார். 17-ந் தேதி நெல்லளவு கண்டருளுகிறார். 18-ந்தேதி காலை வெள்ளி குதிரை வாகனத்திலும், மாலை தங்க குதிரை வாகனத்திலும் வீதி உலா வருகிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. 20-ந்தேதி சப்தாவரணம் நடைபெறுகிறது. விழாவின் நிறைவு நாளான 21-ந்தேதி நம்பெருமாள் ஆளும்பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வருகிறார். மேலும் காவல்துறை அதிகாரிகள் பாதுக்காப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்