Sani Peyarchi 2023: சனிப்பெயர்ச்சி விழா: திருநள்ளாறில் முன்னேற்பாடுகள் தீவிரம்
வருகின்ற 20-ம் திருநள்ளாறு சனிபகவான் கோயிலில் நடைபெற உள்ள சனிப்பெயர்ச்சி விழா ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.
புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறில் அமைந்துள்ளது மிகவும் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த தர்பாரண்யேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இங்கு நவகிரக ஸ்தலங்களில் ஒன்றான ஸ்ரீ சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். இங்கு இரண்டரை ஆண்டுகள் ஒரு முறை நடைபெறும் சனிப்பெயர்ச்சி விழா மிக விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இதற்காக புதுச்சேரி மாநிலம் மற்றும் இன்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து வழிபாடு செய்வார்கள்.
இந்நிலையில் இந்தாண்டு வருகின்ற டிசம்பர் 20 -ம் தேதி அன்று நடைபெற உள்ள சனிப்பெயர்ச்சி நிகழ்வை அடுத்து சனிப்பெயர்ச்சி விழாவை புதுச்சேரி அரசு, காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மிகச் சிறப்பாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இந்த விழாவிற்கு இந்தியா முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், காரைக்கால் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் இந்த சனிப்பெயர்ச்சி விழாவினை மிக சிறப்பாக நடத்த காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் தலைமையில் பல்வேறு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும், துச்சேரி காவல்துறையின் மூலம் பாதுகாப்பிற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த சனிப்பெயர்ச்சி விழா மிகச் சிறப்பாக நடைபெற அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும், பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த சனிப்பெயர்ச்சி விழாவுக்கு வரும் பக்தர்களுக்கு தூய்மையான குடிநீர், போக்குவரத்து வசதிகள், கூட்ட நெருக்கடியை தவிர்க்க சிறப்பு கட்டண வசதி, காவல்துறை மூலம் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள், அனைத்து இடங்களிலும் சி.சி.டி.வி. மூலம் கண்காணித்தல், சுகாதாரத்துறை மூலம் விரிவான மருத்துவ முகாம்கள், ஆங்காங்கே தற்காலிக தீயணைப்பு நிலையங்கள், QR code மூலமாக பக்தர்களுக்கு தேவையான வழித்தடங்களை அறிந்து கொள்ளும் வசதி, சிறப்பு தரிசன கட்டணத்தில் உள்ள QR code மூலமாக அவர்கள் கோயிலுக்கு செல்ல வழிகாட்டுதல், சனிப்பெயர்ச்சி விழாவினை பல்வேறு தொலைக்காட்சிகள் மூலம் நேரடியாக ஒளிபரப்பு நடவடிக்கை, 24 மணி நேரமும் காவல்துறை மூலம் பாதுகாப்பு ரோந்து போன்ற பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து விழா ஏற்பாடுகள் குறித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் கோயில் மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து இடங்களிலும் நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்க கோரி காவல்துறைக்கும், அரசுத்துறை அதிகாரிகளுக்கும் ஆலோசனைகள் வழங்கினார். இந்த ஆய்வின்போது காரைக்கால் மாவட்ட ஆட்சியர், காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியர் ஜான்சன், காவல்துறை அதிகாரிகள், கோயில் நிர்வாக அதிகாரிகள், மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.