Thanjavur big temple: ராஜ ராஜ சோழன் சதய விழா; பெருவுடையாருக்கு 48 வகை பொருட்களை கொண்டு பேரபிஷேகம்
மாமன்னன் ராஜராஜ சோழன் 1038-வது ஆண்டு சதயவிழாவை ஒட்டி பெருவுடையாருக்கு 48 வகையான பொருட்களை கொண்டு பேரபிஷேகம் நடந்தது.
தஞ்சாவூர்: மாமன்னன் ராஜராஜ சோழன் 1038-வது ஆண்டு சதயவிழாவை ஒட்டி பெருவுடையாருக்கு 48 வகையான பொருட்களை கொண்டு பேரபிஷேகம் நடந்தது.
தஞ்சை பெரிய கோயில் உலக பிரசித்தி பெற்ற கோயிலாகும். இது தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோயிலுக்கு தமிழகம் மட்டும் அல்லாது, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.
உலக மக்கள் மத்தியில் பெரும் புகழ் பெற்று விளங்கும் இந்த பெரிய கோயிலை கட்டியவர் மாமன்னன் ராஜராஜசோழன். வானளாவிய கோபுரம் கொண்ட பெரிய கோவில் நமது முன்னோர்களின் பழங்கால வாழ்வியலின் வெற்றி சின்னம். நதிக்கரை நாகரீகத்தின் வெளிப்பாடு. சோழ சாம்ராஜ்யத்தின் அருமை பெருமைகளை ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் பறை சாற்றும் பொக்கிஷமாக இந்த கோயில் விளங்குகிறது. .
ராஜராஜேஸ்வரம், தஞ்சைப் பெருவுடையார் கோயில், பிரகதீசுவரர் கோயில் அல்லது தஞ்சை பெரிய கோயில் என அழைக்கப்படுகிறது. தஞ்சாவூரிலுள்ள, சோழ நாட்டு காவிரி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது. இது பாடல் பெற்ற திருத்தலம் ஆகும். கோட்டைச் சுவர் வாயிலை அடுத்து உள்ள ஐந்து அடுக்கு கோபுர வாயிலுக்கு கேரளாந்தகன் நுழைவாயில் என்று பெயர். அடுத்து 3 அடுக்குகளுடன் ராஜராஜன் திருவாயில் அமைந்துள்ளது. இவை தவிர, தென்புறம் இரண்டும், வடபுறம் இரண்டுமாக நான்கு வாசல்கள் உள்ளன. பெரிய கோயில் கோபுரத்தைவிட பெருவுடையாரின் விமானம் பிரமாண்டமானது. சுமார் 216 அடி உயரத்துடன் திகழும் இந்த விமானம், ஆசியாவிலேயே மிகப் பெரிய விமானம், தஞ்சைப் பெருவுடையார் கருவறை விமானம்தான். சிற்பக்கலை, கட்டிடக் கலை ஓவியக் கலை என ஆலயம் சார்ந்த அத்தனை கலைகளையும் சிறப்பாக பறை சாற்றும் பெருமையை தன்னகத்தே கொண்டுள்ள கோவில் தஞ்சை பெரிய கோவில் என்றால் அது மிகை ஆகாது. ராஜ ராஜ சோழனின் பிறந்தநாளை சதயவிழாவாக மக்கள் கொண்டாடுகின்றனர். தஞ்சை பெரிய கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மாமன்னன் ராஜராஜசோழன் சதய விழா ஐப்பசி மாதம் கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன்படி இந்தாண்டு சதயவிழா பந்தக்கால் முகூர்த்த நிகழ்ச்சியுடன் தொடங்கியது. ராஜ ராஜ சோழன் சதய விழாவான இன்று மாமன்னன் ராஜராஜ சோழன் உருவச் சிலைக்கு மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து பல்வேறு கட்சியினர், அமைப்பினர் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதையடுத்து பெருவுடையாருக்கு 48 வகையான பொருட்களைக் கொண்டு பேராபிஷேகம் செய்யப்பட்டது.
வில்வம் இலை, வன்னி இலை, நொச்சி இலை, பிச்சி இலை, அத்தி கொழுந்து, அரசன் கொழுந்து, ஆலம் கொழுந்து, மாங்கொழுந்து, பலாக்கொழுந்து, விளாக்கொழுந்து, ஜெர்மன் பச்சிலை, விபூதி அபிஷேகம், தைலகாப்பு அபிஷேகம், சாம்பிராணி தைலம் அபிஷேகம், நவகவ்ய அபிஷேகம் , திரவிய பொடி அபிஷேகம், வாசனைப் பொடி அபிஷேகம், நெல்லி முன்னி பொடி அபிஷேகம், மஞ்சள் பொடி அபிஷேகம், அரிசி மாவு பொடி அபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம் நடந்தது.
மேலும், தேன் அபிஷேகம், நெய் அபிஷேகம், பசும் பால் அபிஷேகம், பசுந்தயிர் அபிஷேகம், மாதுளை முத்து அபிஷேகம், பிலாச்சுளை அபிஷேகம், ஆரஞ்சு சுளை அபிஷேகம், அன்னாசி அபிஷேகம், திராட்சை அபிஷேகம், விளாம் பழம் அபிஷேகம், கொளிஞ்சி பழம் அபிஷேகம், நார்த்தம் பழச்சாறு அபிஷேகம், சாத்துக்குடிசாறு அபிஷேகம், எலுமிச்சை பழச்சாறு அபிஷேகம், கருப்பஞ்சாறு அபிஷேகம், இளநீர் அபிஷேகம், அன்னாபிஷேகம், சந்தன அபிஷேகம், பன்னீர் அபிஷேகம், ஏகதாரை அபிஷேகம், சகஸ்ரதாரை அபிஷேகம், சிங்கேதனம் அபிஷேகம், வலம்புரி சங்கு அபிஷேகம், சொர்ணாபிஷேகம், கங்கா ஜலம் அபிஷேகம், 108 ஸ்தாபன கலச அபிஷேகம், புஷ்பாஞ்சலி ஆகிய 48 பொருட்களால் பேரபிஷேகம் செய்யப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.