500 ஆண்டுகள் பழமையான பெருமாள் கோவில்; "அபிஷேகம் பார்த்தாலே நினைத்தது நடக்கும்"
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை ஒட்டி 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த குபேர வடிவிலான பூதநாராயண பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலை மாட வீதியில் உள்ள ஶ்ரீபூத நாராயண பெருமாளுக்கு புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையான இன்று மகா சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்யப்பட்டன.
புரட்டாசி மாத சனிக்கிழமை பூத நாராயணுக்கு அபிஷேகம்
புரட்டாசி மாதம் எப்போதும் பெருமாளுக்கு உரிய நாளாக இருந்து வருகிறது. புரட்டாசி மாதங்களில் இந்துக்கள் வைணவ கோயில்களுக்கு படையெடுப்பது வழக்கமாக உள்ளது. ஒருவரின் வாழ்வில் ஏற்றத்தையும், மாற்றத்தையும் தரும் புதன் பகவானுக்கே அதிபதியாக, அதிதேவதையாக இருப்பவர் மகாவிஷ்ணு. அந்த புதன் பகவானின் அதிதேவதையான மகாவிஷ்ணுவை, புதன் அவதரித்த புரட்டாசி மாதத்தில் வழிபட்டால் வாழ்வில் உள்ள சங்கடங்களும், கஷ்டங்களும் நீங்கும் என்பது ஐதிகமாக உள்ளது. இந்த நிலையில் திருவண்ணாமலை மாட வீதியில் குபேர மூலையில் வீற்றிருக்கும் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஶ்ரீ.பூத நாராயண பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் ஆராதனைகள் நடைபெற்றது .
பூத நாராயண கோவில் வரலாறு
பகவான் கிருஷ்ணரை அழிக்க கம்சன் பூதகி என்ற அரக்கியை பகவான் கிருஷ்ணர் இடம் அனுப்பி உள்ளார். இந்நிலையில் கிருஷ்ணன் பூதகியை வதம் செய்ததால் இந்த பெருமான் பூத நாராயணன் என்று அழைக்கப்படுகிறார் என்பது ஐதீகம். பூத நாராயணர் சன்னதியில் இருக்கும் மூலவர் குபேரன் போல் இருப்பதால் வாரந்தோறும் புதன்கிழமை மற்றும் சனிக்கிழமை அன்று பூத நாராயணனை வழிபட்டால் செல்வம் கொழிக்கும் என்பதும் ஐதீகம். புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு இன்று காலை கோவிலின் நடை திறக்கப்பட்டு ஶ்ரீ.பூத நாராயணனுக்கு சந்தனாதி தைலம் ,மஞ்சள் ,பச்சரிசி, மாவு ,பால் ,இளநீர் எலுமிச்சைச்சாறு, சொர்ண அபிஷேகங்கள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பட்டாச்சாரியார் வேத மந்திரங்கள் முழங்க பெருமாள் பாசுரங்கள் பாட பகவானுக்கு மகா கற்பூர தீபாராதனை காண்பிக்கப்பட்டது . பின்னர் குபேர வடிவிலான ஸ்ரீ பூத நாராயண பெருமாளுக்கு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை தினமான இன்று ஸ்ரீ.பூத நாராயணனின் அபிஷேகத்தையும் தீப ஆராதனையையும் ஏராளமான பக்தர்கள் காத்திருந்து பக்தியுடன் தரிசித்து சென்றார்கள்.