மார்கழி மாதம்: வாசலில் பூசணிப்பூ, திருமணம் வேண்டுமா? காஞ்சிபுரம் பெண்களின் பாரம்பரியம்!
"மார்கழி மாதம் வீட்டு வாசலில் பூசணி பூ உருண்டை வைத்து வழிபட்டால், திருமணம் நடக்கும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது"

மார்கழி மாதம் தொடங்கியதை முன்னிட்டு வீட்டு வாசலில் மாவுக்கோலமிட்டு பூசணிப்பூ வைத்து விளக்கேற்றி வரவேற்ற கோவில் நகரப்பெண்கள். அதிகாலையிலேயே கோவில்களுக்குச் சென்று விளக்கேற்றி வைத்து வழிபாடு செய்தனர்.
உகந்த மாதமான மார்கழி
மாதத்தில் நான் மார்கழியாக இருக்கிறேன் என கிருஷ்ண பகவான் கூறியதைப் போல இறைவனின் வழிபாட்டுக்கு உகந்த மாதமான மார்கழி மாதம் இன்று முதல் தொடங்கியது.
மார்கழி மாதம் தொடங்கியதையொட்டி கோவில் நகரமான காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள பெண்கள் பழமையை மறக்காமல் அதிகாலையிலேயே எழுந்து தங்கள் வீட்டு வாசல்களில் வண்ண வண்ண மாவு கோலங்கள் போட்டு, பூசணிப்பூ வைத்து, வீடுகளின் வாசல்கள் தோறும் விளக்கேற்றி வைத்து மார்கழி மாதத்தை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் அதிகாலையிலேயே குளித்து விட்டு தங்கள் வீடுகளின் அருகில் உள்ள கோவில்களுக்கு சென்று விளக்கேற்றி வைத்து வழிபாடு செய்தனர்.
இந்திரனுக்கு பிடித்த பூசணிப்பூ
பல ஆண்டுகளாக தமிழர் பாரம்பரியத்தில், பூசணிப்பூ வைத்து வழிபடுவது இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. வயலும் வயல் சார்ந்த இடமும்மான, சமவெளி மருத நிலத்தில் கடவுளாக இந்திரன் இருந்து வருகிறார். சிவன் மற்றும் விஷ்ணு உள்ளிட்ட கடவுள்களின் வழிபாடு பெருமளவில் இல்லாத போது, இந்திர வழிபாடு தமிழர்கள் மரபில் அதிக அளவு இருந்தது.
அந்த வகையில் இந்திரனுக்கு பல்வேறு வகையில் வழிபாடுகள் நடத்தப்பட்டு வந்தன. அதன் ஒரு பகுதியாக இந்திரனுக்கு உகந்த பூவாக பூசணிப்பூ கருதப்படுகிறது. இதனால் பூசணி பூவை பசுஞ்சாண உருண்டைகளில், பொதித்து வைத்து அலங்கரிப்பது பண்டைய கால முதலே கடைபிடித்து வரும் வழக்கமாக உள்ளது. மார்கழி மாதம் இந்திரன் கடவுளை மகிழ்வித்துவதற்காக தமிழர்கள் பாரம்பரியமாக பின்பற்றி வந்ததாக கூறப்படுகிறது.
திருமணம் நடக்க பூசணிப்பூ உருண்டை வழிபாடு
ஒவ்வொரு வீட்டிலும் மலர்களை வைத்து அலங்கரிப்பது என்பது இன்றும் கிராமப்புறங்களில் நடைமுறையில் இருந்து வருகிறது. ஒவ்வொருவரும் எத்தனை உருண்டைகளை வைத்து, அலங்கரிக்கிறோம் என்பது ஒரு போட்டியாகவும் இருக்கிறது. பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் மூன்று வைத்தால் , நாம் 5 வைக்க வேண்டும் என போட்டியிட்டுக் கொண்டு பெண்கள் இன்றும் கிராமப்புறங்களில் வாசலை அலங்கரித்து வருகின்றனர். திருமணம் ஆகாத பெண்கள் மார்கழி மாதம் முழுவதும், பூசணிப்பூ வைத்து வணங்கி வந்தால் அடுத்த தை மாதத்திற்குள் திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
பொங்கல் வைக்க பயன்படும் பூசணிப்பூ உருண்டை வறட்டி
தொடர்ந்து மார்கழி மாதம் முழுவதும் இவ்வாறு வைக்கப்படும் பூசணி உருண்டைகள் காலை 10 மணிக்கு மேல், அவை எருமுட்டையாக தட்டப்படும், அவை காய்ந்த பிறகு பொங்கல் வைப்பதற்காக அந்த எருமுட்டைகள் (வறட்டி) பயன்படுத்தப்படுகிறது. முதல் சூரியப் பொங்கலை, இந்த வறட்டி மூலம் வைப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.





















