Pongal 2025: ஆரோக்கியம், இறைபக்தி, வளத்துடன் வாழ தருமபுரம் ஆதீனம் அருளாசி..!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தருமபுரம் ஆதீனம் பக்தர்களுக்கு அருளாசி வழங்கியுள்ளார்.

தைத்திருநாளில் பால் பொங்கி வருவதைப்போல் ஆண்டுமுழுவதும் மகிழ்ச்சி பொங்கி மும்மாரி மழைப்பொழிந்து, கழனி எல்லாம் விளைந்து, நாடு வளம் பெறவும், மக்கள் அனைவரும் ஆரோக்கியம், இறைபக்தி, வளத்துடனும் வாழவும் எல்லாம் வல்ல ஸ்ரீசெந்தமிழ்ச் சொக்கநாதபெருமானின் திருவருளைச் சிந்திக்கின்றோம் என தருமபுரம் ஆதீனம் 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் பொங்கல் வாழ்த்து அருளாசியில் தெரிவித்துள்ளார்.
தைத்திருநாள் அருளாசி
உழுதுண்டு வாழ்பவா்களே உயா்ந்த வாழ்வினா் என்கிறாா் வள்ளுவா். உயிா் வளா்க்கும் உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்யும் விதமாகவும், வித்தை கொடுத்த இறைவனுக்கு விளைச்சலை அளிக்கும் முகமாகவும் கொண்டாடப்படுவதே தைத்திருநாள். மாா்கழி மாதத்தின் நிறைவு நாளன்று "பழையன கழிதலும் புதியன புகுதலுமான" போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
Pongal 2025: தை மாத பிறப்பு - திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் சிறப்பு தீர்த்தவாரி..!
போகி பண்டிகை
முதல்நாளான்று வீட்டில் உள்ள உபயோகமற்ற பழைய பொருள்களை நெருப்பிலிட்டும், சிறாா்கள் சிறுபறை கொட்டியும் கொண்டாடுவா். இதன் பொருள் மனமாகிய வீட்டில் உள்ள தீய எண்ணங்களாகிய உபயோகமற்ற குப்பைகளை எரித்தொழிக்க வேண்டும் என்பதே.
தை முதல் நாள்
தை மாதத்தின் முதல் நாள் பொங்கல். பயிா் விளைச்சலுக்கு உதவிய சூரியன் முதலாகிய இயற்கைக்கும், ஆவினத்திற்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் வீட்டின் முன் புது அடுப்பு வைத்து, இயற்கைக்கு இசைவான புது மண்பானையில் புத்தரிசி இட்டு பொங்கலிடப்படுகிறது.
Pongal 2025: வசூல் வேட்டைதான்! தியேட்டர்களில் தீயாய் நடக்கும் டிக்கெட் புக்கிங் - பொங்கல் குஷிதான்
மாட்டுப்பொங்கல்
மூன்றாம் நாள் விழாவாக, உழவுக்கு பெருந்துணை புரியும் மாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது. மறுநாள் குரு, பெரியோா் மற்றும் சான்றோா்களிடம் ஆசிபெற்று உற்றாா் உறவினா்களைச் சந்தித்து அன்பையும், உணவுப்பண்டங்களையும் பகிா்ந்து கொள்ளும் காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.
அருளாசி வாழ்த்து
உள்ளத்தில் உற்சாகம் பொங்க, இப்பொங்கல் பண்டிகையை கொண்டாடி மகிழவும், தைத்திருநாளில் பால் பொங்கி வருவதைப்போல் ஆண்டுமுழுவதும் மகிழ்ச்சி பொங்கி மும்மாரி மழைப்பொழிந்து, கழனி எல்லாம் விளைந்து, நாடு வளம் பெறவும், மக்கள் அனைவரும் ஆரோக்கியம், இறைபக்தி, வளத்துடனும் வாழவும் எல்லாம் வல்ல ஸ்ரீசெந்தமிழ்ச் சொக்கநாதபெருமானின் திருவருளைச் சிந்திக்கின்றோம் என அருளாசிக் குறிப்பில் தெரிவித்துள்ளாா்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

