(Source: ECI/ABP News/ABP Majha)
Palani Kumbabishekam: பழனி கோயில் கும்பாபிஷேகம் - தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி தொடக்கம்
Palani Murugan Temple Kumbabishekam: பழனி மலைக்கோவில் கும்பாபிஷேகம் வருகிற 27ம்தேதி நடைபெறவுள்ளது. இதையடுத்து பழனி கோவிலுக்கு அதிகளவில் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
பழனி மலைக்கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும் நேரத்தில் அதிகளவிலான பக்தர்கள் கூடுவதை தவிர்க்கும் விதமாக கோவில் நிர்வாகம் சார்பில் ஆறாயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. இதில் நான்காயிரம் பேர் நன்கொடையாளர்கள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் நிர்வாக ரீதியிலான அதிகாரிகள் ஆகியோரும் மீதமுள்ள இரண்டாயிரம் பேர் பொதுமக்களும் அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து கும்பாபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பி 51 ஆயிரம் பக்தர்கள் இணையவழியில் பதிவு செய்தனர். இவர்களில் இரண்டாயிரம் பேர் கடந்த 21ம் தேதி குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்களுக்கு கும்பாபிஷேகத்திற்கு செல்வதற்கான நுழைவுச்சீட்டு இன்றும், நாளையும் வழங்கப்படுகிறது. தேர்வான பக்தர்கள் தங்களது அசல் ஆதார்அட்டையை நேரில் காண்பித்து ஹாலோகிராம் பொருத்திய நுழைவுச்சீட்டு பெற்றுக்கொள்ளலாம். இதையடுத்து இன்று காலை 10 மணியளவில் தேர்வான பக்தர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் பழனி தேவஸ்தான வேலவன் விடுதியில் பெற்று வருகின்றனர்.
பழனி கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக ஒருகோடி ரூபாய் மதிப்பிலான புதிய மின்இழுவைரயில் பெட்டி ஒன்று நன்கொடையாக வழங்கப்பட்டது. பழனி கோவில் அறங்காவலர் குழு தலைவரும், தொழிலதிபருமான சந்திரமோகன் தனது சொந்த நிதியில் இருந்து நவீன மின்இழுவைரயில் பெட்டியை வழங்கியுள்ளார். மலைக்கோவிலுக்கு மேலே செல்ல வசதியாக ஏற்கனவே மூன்று மின் இழுவை ரயில்கள் உள்ளன. இவற்றில் 30 பேர் வரை செல்லும் வகையில் உள்ளது.
ஆனால் தற்போது தலைவர் வழங்கியுள்ள நவீனமான புதிய மின் நிலுவை ரயில் பெட்டியில் 72 பேர் வரை பயணம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலேயே பழனி கோவிலில் மட்டுமே மின் இழுவை ரயில் சேவை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1965ம் ஆண்டு காமராஜர் ஆட்சியில் முதல் மின்இழுவைரயில் அமைக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டாவது மின் இழுவை ரயில் கடந்த 1982ம் ஆண்டும் மூன்றாவது மின் இழுவை ரயில் கடந்த 1988ம் ஆண்டும் தொடங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பழனி கோவில் அறங்காவலர் குழு தலைவர் சார்பில் புதிய நவீனமான மின் இழுவை ரயில்பெட்டி வழங்கப்பட்டுள்ளது.
கொடுக்கப்பட்டுள்ள மின் நிலுவையில் பெட்டியானது பக்தர்கள் சேவைக்கு வருவதற்கு சிறிது நாட்கள் ஆகும் என்றும் வெட்டியின் அமைப்பை பொறுத்து சில சில பணிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது என்றும், எனவே தைப்பூசம் நிறைவடைந்து பிறகே புதிய மின்இழுவைரயில் பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இன்று காலை பழனி மலைக்கோவிலில் உள்ள உபகோயில்களில் கலாகர்சனம் நடைபெற்றது. இந்நிகழ்வில் பழனி கோவில் அறங்காவலர்கள், இணைஆணையர், கோவில் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்