அமைச்சர் சேகர்பாபு கட்சி பாகுபாடு இன்றி சாட்டையை சுழற்ற வேண்டும் - மதுரை ஆதீனம்
அறநிலையத் துறை அமைச்சர்கள் எல்லோரும் கரை வேட்டி கட்டி தான் பார்த்து இருப்போம், தற்போதைய அமைச்சர் எங்களுடன் சேர்ந்து காவி வேட்டி கட்டிவிட்டியது எங்களுக்கு பெரிய வெற்றி என மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.
அறநிலையத் துறை அமைச்சர்கள் எல்லோரும் கரை வேட்டி கட்டி தான் பார்த்து இருப்போம், ஆனால் தற்போதைய அமைச்சர் சேகர்பாபு எங்களுடன் சேர்ந்து காவி வேட்டி கட்டிவிட்டியது எங்களுக்கு பெரிய வெற்றி என மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.
வீரட்டேஸ்வரர் திருக்கோயில்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் அடுத்த திருப்பறியலூர் என்று அழைக்கப்படும் பரசலூர் கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமையான, தேவாரம் பாடல் பெற்ற அட்டவீரட்ட தலங்களில் 4-வது தலமான இளங்கொம்பனையாள் சமேத வீரட்டேஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது.
கோயில் வரலாறு
முன்னொரு காலத்தில் செய்நன்றி மறந்த மாமன் முறை கொண்ட தட்சனை, வீரபத்திரரை கொண்டு தட்சனின் தலையை கொய்து, சுவாமி வதம் செய்த தலமாகவும், பின்னர் தட்சனின் மனைவி வேதவல்லி வேண்டுதலை ஏற்று ஆட்டின் தலையை பொருத்தி, தட்சனை சிவபெருமான் உயிர்ப்பித்த தலமாகவும் விளங்குவதால் சுவாமிக்கு வீரட்டேஸ்வரர் என்ற பெயர் வழங்கப்பட்டது. கோயிலின் வரலாறு குறித்து தக்கயாக பரணி என்ற நூலில் ஒட்டக்கூத்தர் விவரமாக குறிப்பிட்டுள்ளார். இக்கோயிலுக்கு வந்து சுவாமியை தரிசனம் செய்பவர்களுக்கு விவாகத்தடை மற்றும் மாங்கல்ய தோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.
பாலாலயம்
இத்தகைய சிறப்பு வாய்ந்த கோயிலில் ஆகம விதிப்படி பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பாபிஷேகமானது கடந்த 2011-ஆம் ஆண்டு நடைபெற்றது. அதனை தொடர்ந்து பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது மீண்டும் மகா கும்பாபிஷேகம் விழா செய்ய தருமபுரம் ஆதீனம் மற்றும் அவ்வூர் பக்தர்கள் முடிவெடுத்து அதற்காக திருப்பணிகளை கடந்த ஆண்டு சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் செய்து பாலாலயம் பூஜைகள் செய்து பணிகளை தருமபுரம் ஆதீனம் 27 வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து கோயிலில் புதிய காட்டிட வேலைகள், வண்ணம் தீட்டுதல் உள்ளிட்ட பல்வேறு திருப்பணிகள் கடந்த ஒர் ஆண்டாக நடைபெற்று நிறைவுற்றது. அதனை அடுத்து கோயில் கும்பாபிஷேக விழாவிற்கான நாள் குறிக்கப்பட்டு, கோயில் மகா கும்பாபிஷேகம் விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
குடமுழுக்கு விழாவில் மதுரை ஆதீனம்
இக்கோயில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் மதுரை ஆதீனம் 293-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கலந்து கொண்டார் அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது; முத்தமிழ் மாநாட்டிற்கு எனக்கு அழைத்தவர் தினாமுனா கட்சியை சேர்ந்தவர். தினாமுனா கட்சியில் இருந்தால் கறைவேஷ்டிதான் கட்டவேண்டும். இதுவரை இருந்த இந்து அறநிலையத் துறை அமைச்சரிலேயே எல்லாம் கரை வேட்டி கட்டிய அமைச்சரைதான் பார்த்து இருப்போம், அவர் எங்களுடன் சேர்ந்து காவி வேட்டி கட்டிவிட்டார் அமைச்சர் சேகர்பாபு தான். இது எங்களுக்கு பெரிய வெற்றி. கட்சி கறைவேஷ்டி கட்டயவரை காவி வேஷ்டி கட்டவைத்தது முத்தமிழ்மாநாடு அனைவருக்கும் சிறப்பு செய்துள்ளார்.
தருமை ஆதீனத்தில் தான் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடியுள்ளனர். மகாவித்தான் தண்டபானிதேசிகர்தான் கலைஞர் ஆசான். அவர் வந்த உடனே அவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்தார். ஒரு ஆதீனம் தண்டபானி தேசிகரை உருவாக்கியது. அவர்தான் கலைஞர் கருணாநிதியை உண்டாக்கினார். தருமை ஆதீனம் ஒரு சம்பிரதாயம் கருதிதான் பல்லக்கில் ஏறுகிறார். எங்கள் ஆதீனம் நடக்கவும் செய்வார். பல்லக்கு ஒரு பொறுட்டல்ல நடக்கவும் செய்வார், பல்லக்கில் ஏறுவார். அதை அமைச்சர் புரிந்து கொள்வார். இந்த கோயிலில் கூட எனக்கு பேச வாய்ப்பு இல்லை, இந்த கோயிலுக்கு கூட குத்தகை தாரர்கள் நிரைய பேர் இருக்கிறார்கள்.
சேகர்பாபு நம் பாபு
கோயில் குத்தகையை கேட்டால் குத்துவதற்கு கைதான் வருகிறது. கோயில் குத்தகை வழங்காதவர்களிடம் வசூல் செய்ய அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே அமைச்சர் சட்டம் என்னும் சாட்டையை எடுத்து சுழற்றி யாராக இருந்தாலும், எந்த கட்சியை சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களிடமிருந்து கோயில் வழிபாட்டுக்குரிய குத்தகையை பெற்றுத் தர நடவடிக்கை எடுத்தால் சேகர்பாபு நம் பாபுவாக இருப்பார். ஆன்மீக பணியில் தமிழ்நாடு அரசு எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு அதை எல்லாம் கேட்காதீங்க இதோட என்னை விட்டு விடுங்கள் என்று கழண்டு சென்றார்.