மயிலாடுதுறை அருகே பக்தி பரவசத்தில் தீ மிதித்து நேர்த்தி கடன் செலுத்திய பக்தர்கள்
மயிலாடுதுறை அருகே பிரசித்தி பெற்ற ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
மயிலாடுதுறை அடுத்த கழனிவாசல் கிராமத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழாவில் வேண்டுதலை நிறைவேற்றும் வகையில் ஏராளமான பக்தர்கள் தீமிதித்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
ஆடி திருவிழாக்கள்
கடந்த ஜுலை 17 -ம் தேதி ஆடி மாதம் துவங்கியது, ஆடி மாதம் என்றாலே குறிப்பாக தமிழகத்தில் உள்ள இந்து கோயில்களில் திருவிழாக்கள் களைகட்ட துவங்கிவிடும், அதனைத் தொடர்ந்து பல்வேறு கோயில்களிலும் தீமிதி, காவடி எடுத்தல், பால்குட ஊர்வலம், முளைப்பாரி எடுத்தல், பொங்கல் வைத்தல் என பல்வேறு வகையான திருவிழாக்கள் கோயில்களில் நடைபெறும். அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் ஆடி மாதம் பிறந்த நாள் முதல் ஏராளமான திருவிழாக்கள் நடைபெற்று வருகின்றன.
கழனிவாசல் ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோயில்
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கழனிவாசல் கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமையான ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோயில் அமைந்துள்ளது. மேலும் இங்கு பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் திரெளபதி அம்மன் அப்பகுதியில் பலருக்கும் குலதெய்வமாகவும், வேண்டிய வரங்களை அருள்பவர் ஆகவும் விளங்கி வருகிறார். இத்தகைய பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இக்கோயிலின் ஆண்டு தீமிதி திருவிழா விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத நாயன்மார்கள் திருவிழா
ஆண்டு திருவிழா
அந்த வகையில் இந்த ஆண்டு தீமிதி திருவிழாவானது கடந்த 8- ஆம் தேதி, கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு காப்பு கட்டப்பட்டு, வில்வளைப்பு, திரௌபதி அம்மன் திருக்கல்யாணம், கிருஷ்ணன் தூது, அரவான் பலியிடுதல், கர்ணமோட்சம் போன்ற வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகள் தினந்தோறும் நடைபெற்று வந்தது. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான 15 -ஆம் நாள் நிகழ்வாக தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
கோலாகலமாக நடைபெற்ற செம்பியன் புனித அந்தோனியார் ஆலய தேர் பவனி திருவிழா
தீமிதி உற்சவம்
தீமிதியை முன்னிட்டு காலை பால்குடம் எடுத்தல், துரியோதனன் படுகளம் உள்ளிட்ட நிகழ்வுகள் நிறைவுற்றது, அதனை தொடர்ந்து கடலாடி ஆற்றங்கரையில் இருந்து பம்பை மேளம் உள்ளிட்ட மங்கள வாத்தியங்கள் முழங்க பச்சைக்காளி, பவளகாளி ஆட்டத்துடன் சக்தி கரகம் புறப்பாடு செய்யப்பட்டு, மஞ்சள் உடை உடுத்தி, காப்பு கட்டி விரதம் இருந்த ஏராளமான பக்தர்கள் பால் காவடி, பன்னீர் காவடி, அலகு காவடி எடுத்தும், வாயில் 16 அடி நீள அலகு குத்தியும் ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர்.
தீக்குண்டத்தில் இறங்கிய பக்தர்கள்
பின்னர் அங்கு கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த தீக்குண்டத்தில் இறங்கி தீ மிதித்து தங்களது நேர்த்திக் கடனை செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு மாவிளக்கு தீபமிட்டு அம்மனை வழிபாடு செய்தனர். மேலும், விண்ணைமுட்ட கண் கவரும் வானவேடிக்கை பொதுமக்களை உற்சாகப்படுத்தியது. தொடர்ந்து நடைபெற்ற காளி ஆட்டமும் பக்தர்களை கவர்ந்தது, அதனை அடுத்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அங்கு வீடுகள் தோறும் அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிப்பட்டனர்.