53 வயது அபயாம்பிகை யானை; 2 நாட்கள் கோலாகலமாக நடந்த பொன்விழா!
மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்திற்கு அபயாம்பிகை யானை வந்து 50 ஆண்டுகள் ஆகிய நிலையில் அதனை பொன்விழா ஆண்டாக கோலாகலமாக கொண்டாடப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் தேவாரப் பாடல்கள் பெற்ற 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த மயூரநாதர் ஆலயம் அமைந்துள்ளது. திருவாவடுதுறை ஆதினத்திற்கு சொந்தமான இந்த ஆலயத்திற்கு 1972 -ஆம் ஆண்டு மூன்று வயது குட்டியாக அபயாம்பிகை யானை அழைத்துவரப்பட்டது. மூன்று தலைமுறைகளாக யானை பாகன்கள் குடும்பத்தினர் யானையை பராமரித்து வருகின்றனர்.
மயிலாடுதுறை மக்களின் செல்ல பிள்ளையாகவும் மயிலாடுதுறை அடையாளங்களில் ஒன்றான இந்த யானை, மயிலாடுதுறையில் நடைபெறும் அனைத்து ஆலய விழாக்களில் முன்னே செல்வது வழக்கம். யானை மயிலாடுதுறைக்கு வருகை புரிந்து 50 ஆண்டுகள் நிறைவு பெற்றதை பொதுமக்களும், யானை விரும்பிகளும் பொன்விழாவாக கொண்டாடினர். இரண்டு நாள் நடைபெற்ற நிகழ்ச்சியில் யானைக்கு காலில் கொலுசு, கழுத்தில் டாலருடன் சங்கிலி உள்ளிட்ட ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு யானை மீது புனித நீர் எடுத்து வருதல், யானைக்கு பொதுமக்கள் சீர்வரிசை எடுத்து வருதல், யாகசாலை பூஜை செய்து யானைக்கு கலசபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றது.
இதில் திருவாவடுதுறை ஆதீனம் குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலமான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள், மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜ்குமார் நகர மன்ற தலைவர் செல்வராஜ் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர். 50 ஆண்டுகளாக கோயிலில் வசித்து வரும் அவையாம்பிகை யானையுடன் யானைப்பாகன் முதல் அனைவரும் யானைக்கு பிடித்த உணவுகளை பாசத்தோடு வழங்கி யானையுடன் சேர்ந்து நின்று செல்போனில் படம் பிடித்தும் செல்பி எடுத்தும் மகிழ்ச்சி அடைந்தனர். தொடர்ந்து யானையிடம் ஆசிர்வாதம் பெற்று இன்புற்றனர்.
மேலும் நேற்று இரவு பன்னிரு திருமுறைகளை யானை மீது வைத்து தேவார இன்னிசை கச்சேரியோடு முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா நடைபெற்றது. வானவேடிக்கையோடு மேளதாளங்கள் முழங்க, குதிரை, ஒட்டகம் முன்னே செல்ல நடைபெற்ற நிகழ்ச்சியில் வழியெங்கும்வழியெங்கும் வணிகர்கள் பழங்கள், காய்கறிகள், ஐஸ்கிரீம் ஆகியவற்றை அபயாம்பிகை யானைக்கு கொடுத்து தங்கள் அன்பை வெளிப்படுத்தினர். யானையின் ஐம்பதாவது பொன்விழா ஆண்டு கொண்டாட்டம் மயிலாடுதுறை பகுதி மக்களு அனைவருக்கும் மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
கம்பர் விழாவின் 2 -ம்நாள் நிகழ்ச்சியில் கம்பராமாயணத்தின் நிலைத்த புகழுக்குப் பெரிதும் காரணம், காகுத்தன் கதையா?. கம்பன் கவியா என்ற தலைப்பில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் ஏராளமானோர் பங்கேற்பு.
யாமறிந்த புலவர்களிலே கம்பனைப் போல், வள்ளுவனை போல், இளங்கோவை போல் பூமி தன்னில் யாங்கெனுமே பிறந்ததில்லை என பாரதி மேற்கோள்காட்டிய புலவர்களிலேயே முதலிடத்தை பெறுபவர் கம்பர். கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும் என்பார்கள். இத்தகைய சிறப்புகள் பல பெற்ற கம்பர் பிறந்தது மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுக்காவில் உள்ள தேரழுந்தூர். இவரது பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என தமிழ் ஆர்வலர்கள் பலரும் அரசுக்கு கோரிக்கை விடுத்து வரும் நிலையில், ஆண்டுதோறும் அவரது பிறந்த நாள் விழா தேரழுந்தூர் கம்பர் கழகம் மற்றும் புதுக்கோட்டை கம்பன் கழகம் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.
அவ்வகையில் 93 -ஆம் ஆண்டு கம்பர் விழா இரண்டு நாட்கள் நடைபெற்றது. தேரழுந்தூர் கம்பர் கோட்டத்தில் நடைபெற்ற 2ம் நாள் நிகழ்ச்சியில் திருமுருக வள்ளல் கிருபானந்தவாரியார் அரங்கில், கம்பராமாயணத்தின் நிலைத்த புகழுக்குப் பெரிதும் காரணம், காகுத்தன் கதையா? கம்பன் கவியா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. புதுக்கோட்டை கம்பன் கழக தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற பட்டிமன்றத்தில் சென்னை தமிழ்ச்சுடர் சிவக்குமார். நடுவராக வீற்றிருக்க, புதுக்கோட்டை கம்பன் கழகம் ச.பாரதி, தேரழுந்தூர் கம்பர் கழகம் முத்துலெட்சும்பாலு, காகுத்தன் கதையே என்ற அணியிலும் புதுக்கோட்டை கம்பன் கழகம் சம்பத்குமார், சென்னை கம்பன் கழக மாணவர் பத்மா மோகன் கம்பன் கவியா என்ற அணியிலும் விவாதித்தனர்.
இந்நிகழ்ச்சிகளை தேரழுந்தூர் கம்பர் கழகம் ஜானகிராமன், புதுக்கோட்டை கம்பன் கழகம் சம்பத்குமார் ஒருங்கிணைத்து வழங்கினர். இதில் ஏராளமான தமிழ் ஆர்வலர்கள் தமிழ் அறிஞர்கள் ஆர்வமுடன் பங்கேற்று பட்டிமன்றத்தை கண்டு ரசித்தனர். கம்பர் விழாவை முன்னிட்டு கம்பர்கோட்டம், கம்பர் மேடு மின்னொளியால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது.