Margazhi: வீட்டில் செல்வம் குவிய.. மார்கழி மாசம் இதை செய்யுங்க.. மிஸ் பண்ணிடாதீங்க..!
Margazhi: மார்கழி மாதத்தில் அவர் மகிழ்ந்தால் வீட்டில் செல்வம் தழைத்திடும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு சிறப்புகள் இருக்கின்றன. அந்த வகையில் மார்கழி மாதம் இறைவழிபாட்டிற்கு சிறப்பு மிகுந்த மாதமாக பார்க்கப்படுகிறது. மார்கழி மாதம் முழுவதும் வீட்டில் விளக்கேற்றி, வீட்டு வாசலில் கோலமிட்டு பொதுமக்கள் வழிபடுவார்கள். அதேபோன்று ஒவ்வொரு கோயில்களும் சிறப்பு அபிஷேகங்களும் பஜனைகளும் நடைபெறும்.
பூசணி பூ
திருமணம் ஆகாத பெண்கள் திருமணம் நடைபெற வேண்டி, பாவை நோன்பு இருப்பார்கள். பண்டைய தமிழர்கள் இந்திரனை முக்கிய கடவுளாக வணங்கி வந்தனர். மருத நிலத்தில் தெய்வமாக இந்திரன் இருந்து வந்தார். இந்திரனுக்கு உகந்ததாக உள்ள பூசணி பூவை பசுஞ்சாண உருண்டைகளில், பொதித்து வைத்து அலங்கரிப்பது பண்டைய கால முதலே கடைபிடித்து வரும் வழக்கமாக உள்ளது. இந்திரனின் முக்கிய ஆயுதமான இடியே பூமியில் பூசணி மலராக மலர்ந்ததாக நம்பப்படுகிறது. இந்திரனின் ஐரவத யானையே, வெண்பூசணியாக பூமியில் காய்க்கிறது என்றும் கிராமங்களில் இன்றும் கதைகள் இருக்கின்றனர்.
பலன்கள் என்ன ?
மஞ்சள் நிற பூக்களான பூசணி பூக்களை வைத்து கோலமிட்டு அலங்கரிப்பதன் மூலம், மருத நில கடவுளான இந்திரனினை மகிழ்வார் என்பது நம்பிக்கையாக உள்ளது. இந்திரன் மழை தரும் கடவுளாகவும், பஞ்சபூதங்களை கட்டுப்பாட்டில் வைக்கும் கடவுளாகவும் நம்பப்படுகிறார். மார்கழி மாதத்தில் அவர் மகிழ்ந்தால் வீட்டில் செல்வம் தழைத்திடும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
ஒவ்வொரு வீட்டிலும் மலர்களை வைத்து அலங்கரிப்பது என்பது இன்றும் கிராமப்புறங்களில் நடைமுறையில் இருந்து வருகிறது. ஒவ்வொருவரும் எத்தனை உருண்டைகளை வைத்து, அலங்கரிக்கிறோம் என்பது ஒரு போட்டியாகவும் இருக்கிறது. பக்கத்து வீட்டில் இருப்பவர்கள் மூன்று வைத்தால், நாம் 5 வைக்க வேண்டும் என போட்டியிட்டுக் கொண்டு பெண்கள் இன்றும் கிராமப்புறங்களில் வாசலை அலங்கரித்து வருகின்றனர்.
இந்தச் சாண உருண்டைகளை முற்பகலுக்கு மேல் எடுத்துச் சுவரில் பூவுடன் சேர்த்து வறட்டியாகத் தட்டுவர். அது காய்ந்ததும், எடுத்துச் சேகரித்து வைத்து, தைப் பொங்கல் நாளில் மூட்டும் அடுப்புத் தீக்கு எரிபொருளாகப் பயன்படுத்துகின்றனர். பொங்கலின் போது பெரிய சல்லடையில் பூசணி இலைகளில் பொங்கலை வைத்து, படைப்பதே வழக்கமாகும். இந்திரன் ஆயிரம் கண்களை உடையவன். சல்லடைக்கும் ஆயிரம் கண்கள். இதனால் சல்லடையை இந்திரனின் வடிவமென்று கருதுகின்றனர்.
கண்டிப்பாக செய்ய வேண்டும்
இன்றைய காலகட்டத்தில் தற்போது வாசலில் பூசணி பூ வைப்பது மிகவும் குறைந்து வருகிறது. பல நூற்றாண்டுகளாக தமிழர்கள் பின்பற்றி வந்த வழக்கத்தை பின்பற்ற மக்கள் முயற்சிக்க வேண்டும். குறிப்பாக மார்கழி மாதங்களில் வரும் வெள்ளிக்கிழமைகளில் மட்டுமாவது, வாசலில் பூசணிப்பூ வைக்க வேண்டும்.