(Source: ECI/ABP News/ABP Majha)
Mahashivratri 2023: மயிலாடுதுறை மாவட்ட கோயில்களில் விமரிசையாக நடந்த சிவராத்திரி விழா
மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள பல்வேறு சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா கோலாகலமாக நடைபெற்றுள்ளது.
நாடு முழுவதும் மகா சிவராத்திரி விழா சிவாலயங்களில் நேற்று இரவு விடிய விடிய பல்வேறு நிகழ்ச்சிகளுடன் வெகு விமர்சையாக நடைபெற்றது. அதன் ஒன்றாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் வழிபாடுகள் நடைபெற்றன. மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் தேவாரப் பாடல் பெற்றதும் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்ததுமான அவையாம்பிகை சமேத மயூரநாதர் ஆலயம் அமைந்துள்ளது. சிவனை அபயாம்பிகை அம்மன் மயில் உருவம் கொண்டு பூஜித்து சாப விமோசனம் அடைந்த இவ்வாலயத்தில் சிவராத்திரியை முன்னிட்டு நான்கு கால யாகசாலை பூஜைகள் செய்யப்பட்டு, பால், பன்னீர், இளநீர், சந்தனம், திரவிய பொடி உள்ளிட்ட 16 வகை பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
தொடர்ந்து மகா தீபாரதனை காட்டப்பட்டது. இன்றைய மகா சிவராத்திரியை முன்னிட்டு ஒரே சமயத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். நீண்ட வரிசையில் நின்று காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். ஆலயத்தில் நடைபெற்ற மயூர நாட்டிய அஞ்சலி நிகழ்ச்சியை கண்டு ரசித்தனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலத்தில் இருந்தும் சிவனின் பெருமைகளை உணர்த்தும் பரதநாட்டிய நிகழ்வுகளை பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.
ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நான்குகால சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா ஆக்கூர் கிராமத்தில் வாள் நெடுங்கண்ணி உடனாகிய தான்தோன்றீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. முற்கால சோழ மன்னர்களின் ஒருவரும் அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவருமான கோச்செங்கட் சோழ மன்னனால் அமைக்கப்பட்ட மாடக் கோயில்களில் ஒன்றான இக்கோயிலில் சுவாமி தானாக தோன்றியதால் தான்தோன்றிஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
தேவாரப்பாடல் பெற்றதும் அறுபத்தி மூன்று நாயன்மார்களில் ஒருவரான சிறப்புலி நாயனார் பிறந்து வளர்ந்து வாழ்ந்து சிவபெருமானை வழிபட்டு முக்தி அடைந்த தலம் ஆகும். இத்தகைய சிறப்பு வாய்ந்த ஆக்கூர் தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் மகாசிவராத்திரியை முன்னிட்டு இரவு நான்குகால பூஜைகள் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் மங்கை நல்லூர் கிராமத்தில் மகம் நட்சத்திரத்திற்கு உரியதும் செவ்வாய் தோஷ பரிகார ஆலயமான ஸ்ரீ மங்கள பரமேஸ்வரர் ஆலயத்தில் முதல் கால பூஜைகள்500க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்று மாங்கல்ய பலம் வேண்டி வழிபாடு செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் தாலுகா மங்கைநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேலமங்கநல்லூரில் சோழர் காலத்தைச் சார்ந்த கல்வெட்டுகள் நிறைந்த பழமையான ஸ்ரீ மங்கள பரமேஸ்வரி சமேத ஸ்ரீ மங்கள பரமேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. நவகிரகங்களில் மாங்கல்ய பலத்தை அளிக்கும் செவ்வாய்க்கு மங்கள காரகன் என்று பெயர். செவ்வாய் தோஷ பரிகாரம் நீங்கவும் மாங்கல்ய பலம் வேண்டியும் திருமண தடைகள் அகலவும் செவ்வாய்க்கு உரிய பரிகாரம் செய்வது ஜோதிட சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ளது.
இந்த ஆலயம் மகம் நட்சத்திரத்திற்கு உரிய ஆலயமாக கூறப்பட்டுள்ள நிலையில் ஆலயத்தில் மங்கள விநாயகர், ஸ்ரீ மங்கள பரமேஸ்வரர், ஸ்ரீ மங்கள பரமேஸ்வரி ஆகியோரை தரிசனம் செய்தால் செவ்வாய் தோஷங்கள் அகன்று மாங்கல்ய பலம் கிடைக்கும் என்று ஆலய வரலாறு கூறுகிறது. இன்று மகா சிவராத்திரியை முன்னிட்டு முதல் கால பூஜையில் 108 கலசங்கள் வைத்து சிறப்பு ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து மாங்கல்ய பலம் வேண்டியும், சிவராத்திரியை முன்னிட்டும் ஆலயத்தில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் மட்டும் பங்கேற்று சுவாமி மற்றும் அம்பாளை பிரார்த்தனை செய்தனர் தொடர்ந்து நான்கு கால பூஜைகள் செய்யப்பட்டு மகா அபிஷேகம் மகா தீபாரதனை காட்டப்பட்டது.