Maha Shivaratri 2024: பிரதோஷத்துடன் வரும் மகா சிவராத்திரி.. வழிபாட்டு முறைகள் என்ன? முழு விவரம்..
Maha Shivarathri : இன்று மகா சிவராத்திரி முன்னிட்டு சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகிறது.
Maha Shivarathri : 2024 ஆம் ஆண்டுக்கான மகா சிவராத்திரி இன்று கொண்டாடப்படுகிறது. மாதந்தோறும் சிவராத்திரி வந்தாலும் மாசி மாதத்தில் வரும் சிவ ராத்திரி தான் மகா சிவராத்திரியாக அனுசரிக்கப்படுகிறது. சிவனுக்கே உரிய நாட்களில் மிக முக்கியமான நாள் இதுவாகும். மாசி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி திதியே மகா சிவராத்திரி என்று கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய தினம் உலகெங்கும் இருக்கும் சிவாலயங்களில் சிறப்பு வழிப்பாடுகள் நடத்த மற்றும் இரவு நான்கு கால பூஜைகள் நடத்தப்படும். இந்த ஆண்டு மகா சிவராத்திரி வெள்ளிக்கிழமை பிரதோஷத்துடன் வருவது கூடுதல் சிறப்பாகும்.
மகா சிவராத்திரியன்று மக்கள் விரதம் இருந்து சிவனை வழிப்படுவார்கள். சிவனை வழிப்பட ஆடம்பரம் தேவையில்லை. முழு பக்தியோடு மனம் உருகி வேண்டினாலே கேட்ட வரத்தை கொடுப்பவர். மகாசிவராத்திரி அன்று சிவாலயங்களுக்கு சென்று வழிபட்டால் ஓராண்டு முழுவதும் சிவபூஜை செய்த புண்ணியம் கிடைக்கும் என நம்பப்படுகிறது. சிவராத்திரியை முன்னிட்டு இன்று காலை முதலே சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகளும், நான்கு கால பூஜைக்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் காலை முதல் சிவாலயங்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இதனை தவிர்த்து கோவை அருகே இருக்கும் வெள்ளயங்கிரி மலையை ஏற ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். இந்த ஆண்டு சுமார் 3000 பேர் மலை ஏற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளயங்கிரியில் 7 மலைகள் கடந்து சென்று சாமி தரிசனம் செய்ய வேண்டும். மிகவும் கடினமான பாதையை கடந்து செல்லும் பக்தர்கள் சிவபெருமானை தரிசனம் செய்தால் சகல பாவங்களும் நீங்கி வேண்டியதை கொடுப்பார் என நம்பப்படுகிறது. வாழ்க்கையில் ஒரு முறையாவது வெள்ளயங்கிரி மலைக்கு சென்று சிவபெருமானை தரிசனம் செய்ய வேண்டும் என்பதே சிவ பக்தர்களாக இருக்கும் அனைவரின் எண்ணம்.
வெள்ளயங்கிரியை போலவே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்திருப்பது சதுரகிரி சுந்தரமகாலிங்க கோயில். இங்கு நடைபெறும் 4 கால பூஜையை காண பக்தர்கள் காலை முதல் வந்த வண்ணம் உள்ளனர். மேலும் வனப்பகுதி என்பதால் பக்தர்கள் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்கள் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோயிலுக்கு சென்று 4 கால பூஜை பார்க்கவில்லை என்றாலும் வீட்டில் இருந்தப்படியே சிவபெருமானை வழிபடலாம். காலை எழுந்து குளித்து முடித்தவுடன் சிவபெருமானுக்கு உரிய வில்வ இலை, பால், நீர், சிந்தூரம், சிவலிங்கப்பூ ஆகியவற்றுடன் நெய்வேத்தியம் வைத்து வழிபடலாம். வீட்டில் விக்ரஹம் அல்லது சிவலிங்கம் வைத்திருப்பவர்கள் அதற்கு அபிஷேகங்கள் செய்து சிறப்பு வழிபாடு மேற்கொள்ளலாம்.
முதல் கால பூஜை என்பது மாலை 6.45 மணிக்கு தொடங்கி இரவு 9.28 மணி வரை இருக்கும். இரண்டாம் கால பூஜை இரவு 9.28 மணி முதல் நள்ளிரவு 12.31 மணி வரை நடைபெறும். மூன்றாம் கால பூஜை என்பது 12.31 மணிக்கு தொடங்கி அதிகாலை 3.34 மணி வரை நடக்கும். கடைசியாக நான்காம் கால பூஜை என்பது 3.34 முதல் காலை 6.37 மணி வரை நடைபெறும். சென்னையில் கபாலீஸ்வரர் கோயில், மருந்தீஸ்வரர் கோயில், ஏகாம்பரேஸ்வரர் கோயில், வேங்கீஸ்வரர் கோயில் உள்ளிட்ட சிவாலயங்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.