மேலும் அறிய
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் நடை சாத்தப்படும் - கோயில் நிர்வாகத்தின் முக்கிய அறிவிப்பு
மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்சமூர்த்திகளுடன் திருப்பரங்குன்றத்தில் புறப்பாடாகுவதால் 14ஆம் தேதி மீனாட்சி அம்மன் கோயில் நடை சாத்தப்படுகிறது.

மீனாட்சியம்மன் கோயில்
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 14ஆம் தேதி மீனாட்சி அம்மன் கோயில் நடை சாத்தப்படும் என மீனாட்சியம்மன் கோயில் இணை ஆணையர் அறிவித்துள்ளார்.
சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் திருகுடமுழுக்கு பெருவிழா
அறுபடை வீடுகளில் முதற்படை வீடு திருப்பரங்குன்றம். இங்குள்ள அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் திருகுடமுழுக்கு பெருவிழா வருகிற 14.07.2025-ந் தேதியன்று நடைபெறவுள்ளது. குடமுழுக்கு விழாவிற்காக மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்சமூர்த்திகளுடன் குடமுழுக்கு விழாவிற்கு முந்தைய நாளான 13.07.2025-ஆம் தேதி நள்ளிரவு திருக்கோயிலில் இருந்து புறப்பாடாகி, திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் எழுந்தருளுகிறது. இதனால் 13.07.2025-ஆம் தேதி மாலை 6.00 மணி வரை மட்டும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவர்.
மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் மீண்டும் எப்போது வருகிறார்
அதன்பின்னர் திருக்கோயிலில் பூஜை நடைபெற்று, அன்றைய தினம் இரவு சுமார் 10.00 மணியளவில் இத்திருக்கோயிலில் இருந்து அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் பஞ்சமூர்த்திகளுடன் புறப்பாடாகி, நள்ளிரவு மற்றும் 14.07.2025 அன்று அதிகாலையில் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுக்குச் சென்றடையும். தொடர்ந்து அங்கு நடைபெறும் குடமுழுக்கு விழாவில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெறும். மீண்டும் இரவு திருப்பரங்குன்றம் திருக்கோயிலில் இருந்து புறப்பாடாகி, நள்ளிரவு மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் வந்து சேர்த்திடுவார்கள்.
பக்தர்களை ஆடிவீதிகளில் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்
எனவே, 14.07.2025-ஆம் தேதி திங்கட்கிழமை முழுவதும் மீனாட்சியம்மன் திருக்கோயிலின் நடைசாத்தப்பட்டிருக்கும். மேலும் 13.07.2025 -ஆம் தேதி மாலை 6.00 மணி முதல் மறுநாள் 14.07.2025-ஆம் தேதி முழுவதும் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும், பக்தர்களின் வசதிக்காக 13.07.2025-ஆம் தேதி மாலை 06.00 மணி முதல் மற்றும் 14.07.2025-ஆம் தேதி முழுவதும் தற்போது வழக்கத்தில் உள்ளபடி கலைக்கூடத்திற்கும் (ஆயிரங்கால் மண்டபம்) மற்றும் அன்னதானத்திற்கும், அத்துடன் அன்றைய தினம் நடைபெறும் திருமணங்களுக்கும், அருள்மிகு வன்னிமரத்தடி விநாயகர் திருக்கோயிலுக்கும் பக்தர்களை ஆடிவீதிகளில் மட்டும் அனுமதிக்கப்படுவார்கள். மேலும் 15.07.2025 ஆம் தேதி வழக்கம் போல் அதிகாலை முதல் பக்தர்கள் திருக்கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்”. என மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாக இணை ஆணையர் கிருஷ்ணன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement





















