மாசிமக தீர்த்தவாரி : புதுச்சேரி கடற்கரையில் நூற்றுக்கணக்கான உற்சவ மூர்த்திகள் - தரிசனம் செய்ய குவிந்த மக்கள்
100-க்கும் மேற்பட்ட கோயில்களில் இருந்து வந்த உற்சவர்கள் கடலில் தீர்த்தவாரி முடித்து கடற்கரையோரம் கிழக்கு நோக்கி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்
புதுச்சேரி மாசிமக தீர்த்தவாரி
புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரையில் நடைபெற்று வரும் மாசிமக தீர்த்தவாரியில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில் இருந்து கொண்டுவரப்பட்ட 100-க்கும் மேற்பட்ட உற்சவ மூர்த்திகள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தந்து வருகின்றனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் நீராடியும் முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்தும் வழிபட்டு வருகின்றனர்.
மாசிமக தீர்த்தவாரி
மாதங்களில் மகத்தான மாதம் மாசி மாதம் ஆகும். மாசி மாதத்தில் நாம் செய்யும் எந்த காரியமும் இரட்டிப்பு பலன்கள் தரும் என்பது ஐதீகம். அந்த வகையில் மாசிமகத்தையொட்டி புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தீர்த்தவாரி நிகழ்ச்சி இன்று சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இதை முன்னிட்டு புதுச்சேரி மற்றும் அதனையொட்டியுள்ள தமிழக மாவட்டங்களில் உள்ள பிரசித்திபெற்ற கோயில்களில் இருந்து கொண்டுவரப்பட்ட நுற்றுக்கணக்கான உற்சவ மூர்த்திகள் அலங்கரிக்கப்பட்டு புதுச்சேரி வைத்திக்குப்பம் கடற்கரையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றது.
100-க்கும் மேற்பட்ட உற்சவர்கள்
குறிப்பாக பிரசித்தி பெற்ற விழுப்புரம் மாவட்டம் மயிலம் முருகன், தீவனூர் பொய்யாமொழி விநாயகர், செஞ்சி ரங்கநாதர், மேல்மலையனூர் அங்காளபரமேஸ்வரி, திண்டிவனம் நல்லியகோடான் நகர் அலர்மேல் மங்கா சமேதா சீனிவாச பெருமாள், மிகவும் பிரசித்தி பெற்ற புதுச்சேரி மணக்குள விநாயகர், வேதபுரீஸ்வரர், ராமகிருஷ்ணாநகர் லட்சுமி ஹயக்கிரீவர், பிள்ளைச்சாவடி சாய்பாபா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கோயில்களில் இருந்து வந்த உற்சவர்கள் கடலில் தீர்த்தவாரி முடித்து கடற்கரையோரம் கிழக்கு நோக்கி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
இந்த மாசிமக பெருவிழா தீர்த்தவாரியை முன்னிட்டு புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் கூடி சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதற்காக கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அவர்கள் கடற்கரையில் கூடி முன்னோர்களுக்கு தர்பணம் கொடுத்தும் வரிசையில் நிற்கும் அனைத்து சாமிகளையும் வழிபட்டு செல்கின்றனர்.
கண்காணிப்பு கோபுரங்கள்
மேலும் தீர்த்தவாரிக்கு வந்த பக்தர்கள் பலர் சாமிதரிசனம் செய்துவிட்டு கடலில் புனிதநீராடினர். அவர்கள் கடலின் ஆழமான பகுதிக்கு சென்றுவிடாதவாறு போலீசார் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை செய்தபடி இருந்தனர். கூட்டத்தில் பக்தர்களிடம் திருட்டு கும்பல் கைவரிசை காட்டுவதை தவிர்க்க, போலீசார் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து அங்கிருந்து பைனாகுலர் மற்றும் டிரோன் கேமரா மூலமாகவும் மூலமும் கூட்டத்தினரை கண்காணித்து வருகின்றனர். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் நகரில் ஒயிட் டவுன் பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. மாசிமகத்தையொட்டி புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து மாற்றம்
புதுச்சேரி நகரப் பகுதியில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கவும், பொது மக்களின் வசதிக்காகவும் நகரின் பிரதான சாலைகளில் நாளை காலை 8 மணி முதல் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரி மகாத்மா காந்தி வீதியில், அஜந்தா சந்திப்பில் இருந்து ஏழை மாரியம்மன் கோவில் சந்திப்பு வரை இருசக்கர வாகனங்களை தவிர மற்ற அனைத்து வித வாகனங்களும் செல்ல அனுமதி இல்லை. எனவே, காலாப்பட்டில் இருந்து புதுச்சேரிக்கு இசிஆரில் வரும் அனைத்து வகை வாகனங்களும் சிவாஜி சதுக்கம் சந்திப்பு வழியாக செல்ல வேண்டும்.
புதிய பஸ் நிலையத்திலிருந்து முத்தியால்பேட்டை வழியாக சென்னை இ.சி. ஆரில் செல்லும் பஸ்கள் அனைத்தும் வெங்கடசுப்பா சிலையில் வலதுபுறம் திரும்பி, மறைமலை அடிகள் சாலை வழியாக நெல்லிதோப்பு, இந்திரா காந்தி சதுக்கம், ராஜிவ் காந்தி சதுக்கம், சிவாஜி சிலை வழியாக சென்னை செல்ல வேண்டும்.