Kulasai Dasara 2023: வேடமணிந்து முத்தாரம்மனை தரிசித்தால் அடுத்த ஆண்டு தசராவுக்குள் பலன் கிடைக்கும்
சம்ஹார நாட்களில் முத்தாரம்மன் மிகவும் ஆவேசமாக காணப்படுவாள். எனவே 12-வது நாள் 108 பால்குடம் அபிஷேகம் செய்து அம்பாள் ஆவேசத்தை தணிப்பார்கள்.
உலகப் புகழ் பெற்ற தசரா திருவிழா மைசூருக்கு அடுத்து தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் உள்ள ஸ்ரீ ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் திருக்கோவிலில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் நவராத்திரி தினத்தை முன்னிட்டு நடைபெறும் இந்த தசா திருவிழா கடந்த 15 ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறக்கூடிய தசரா திருவிழாவில் நாள்தோறும் அம்மாள் பல்வேறு அவதார கோலத்தில் எழுந்திருளி வீதி உலா வரும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.
திருவிழாவின் 1-ம் நாள் விழாவில் அம்பிகை முத்தாரம்மன், துர்கை அம்மன் அலங்காரத்திலும், 2-ம் நாள் விழாவில் விஸ்வகாமேஸ்வரர் அலங்காரத்திலும், 3-ம் நாள் விழாவில் பார்வதி அம்பிகை அலங்காரத்தில் அருள் பாலிக்கிறாள். அதேபோல, 4-ம் நாள் விழாவில் பால சுப்பிரமணியர் அலங்காரத்திலும்,
5-ம் நாள் விழாவில் நவநீதகிருஷ்ணர் அலங்காரத்திலும் 6-ம் நாள் விழாவில் மகிஷாசூரமர்த்தினி அலங்காரத்திலும், 7-ம் நாள் விழாவில் ஆனந்த நடராஜர் அலங்காரத்திலும், 8-ம் நாள் விழாவில் கஜலெட்சுமி அலங்காரத்திலும், 9-ம் நாள் விழாவில் கலைமகள் அலங்காரத்திலும் எழுந்தருளி ரத வீதிகளில் வீதியுலா வருதல் நடைபெறுகிறது. 10-ம் நாள் விழாவான வரும் 24-ம் தேதி, இரவு 11.30 மணிக்கு சிம்ம வாகனத்தில் மகிஷாசூரமர்த்தினி அலங்காரத்தில் எழுந்தருளி கடற்கரையில் நள்ளிரவு 12 மணிக்கு மகிஷாசுரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறுகிறது. 11-ம் நாளான 25-ந்தேதி மாலை 4 மணிக்கு அம்மனுக்கு காப்பு களையப்படுகிறது. தொடர்ந்து வேடம் அணிந்த பக்தர்களும் காப்புகளை களைந்து விரதத்தை முடித்து கொள்கின்றனர்.
விஜயதசமியன்று நடக்கும் மகிஷாசூர வதம் நிகழ்ச்சி சிதம்பரேஸ்வரர் கோவிலுக்கும் அறம் வளர்த்த நாயகி கோவிலுக்கும் இடைப்பட்ட 3 கி.மீ. தூர கடற்கரையில் நடைபெறும். சிவபெருமானிடம் முத்தாரம்மன் சூலம் வாங்கி சென்று மகிஷனை சம்ஹாரம் செய்வதாக வரலாறு உள்ளது. எனவே முத்தாரம்மன் ஏந்தி வரும் சூலத்துக்கும் சிறப்பு பூஜைகள் செய்வார்கள்.
விஜயதசமி தினத்தன்று சரியாக இரவு 12 மணிக்கு மகிஷனை அம்பாள் சம்ஹாரம் செய்வாள். மகிஷனை வதம் செய்த பிறகு முத்தாரம் மன் தேரில் பவனி செல்வாள். தமிழ்நாட்டில் அம்பாள் தேரில் ஏறி பவனி செல்வது இந்த தலத்தில் மட்டுமே நடைபெறுகிறது. சம்ஹார நாட்களில் முத்தாரம்மன் மிகவும் ஆவேசமாக காணப்படுவாள். எனவே 12-வது நாள் 108 பால்குடம் அபிஷேகம் செய்து அம்பாள் ஆவேசத்தை தணிப்பார்கள். தசரா திருவிழாவுக்கு இந்த ஆண்டு 15 லட்சம் பக்தர்கள் வரை திரள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காளி வேடம் போடுற பக்தர்கள் 41 நாட்களும் மற்ற வேடம் போடும் பக்தர்கள் தசரா திருவிழா கொடியேறிய நாளில் இருந்து மாலை போட்டு 10 நாள் விரதம் கடைப்பிடிச்சு அவரவர் நேர்த்திக்கடனாக நினைச்ச வேடத்தைப் போட்டு உள்ளனர். இந்த விரத நாள்கள்ல ஒரு நேரம் மட்டும் பச்சரிசி சாதம் சாப்பிடுவாங்க. மற்ற நேரங்களில் பாலும், பழமும்தான்.
காளி வேடம்தான் பெரிய வேடம். முதல்ல முகத்துக்கு பவுடர், சாயம் பூசி அடுத்ததா சேலை கட்டி ஜடை முடியை தலையில் கட்டி, தலைக்கு கிரீடம் வச்சு கண்ணுக்கு வெள்ளி கண்மலர் பூட்டி, வாயில் வெள்ளி வீரப்பல் வைத்து கடைசியாக காலுக்கு சலங்கை கட்டுவார்கள்.கையில் திரிசூலம் ஏந்தி வீட்டில் அம்பாளுக்கு பூஜை செய்து தெருக்கள், பஜார்களில் தர்மம் எடுத்து, அந்தக் காணிக்கையை உண்டியலில் போடுவார்கள்.
எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும் அம்பாளுக்கு நேர்ந்துகொண்ட வேடம் அல்லது குருசாமிகள் வாக்கு சொன்ன வேடம் போட்டு 7 வீடு, 11 வீடு, 21 வீடு, 51 வீடு என தங்கள் என்னப்படி அத்தனை வீடுகளில் தட்டு ஏந்தி தர்மம் எடுத்து வருகின்றனர். குறவன், குறத்தி, அம்மன், ராஜா, ராணி, லெட்சுமி, விநாயகர், காளி, சிவன், பார்வதி, ராமர் , லெட்சுமணர், அனுமர், கிழவி, கிழவன், பிச்சைக்காரன், பெண் வேடம்… எனப் பல வகை வேடங்களை பக்தர்கள் போட்டு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்த உள்ளோம் என்றனர். மனமுறுகி வேண்டிக்கொண்டு தசாரா திருவிழாவில் மாலை போட்டு வேடமணிந்து முத்தாரம்மனை தரிசித்தால் அடுத்த ஆண்டு தசராவுக்குள் பலன் கிடைக்கும் என்கின்றனர்.