Karthigai Month: பிறந்தது கார்த்திகை... அதிகாலை முதல் மாலை அணியும் ஐயப்ப பக்தர்கள்!
சிவபெருமான்,முருகப்பெருமான் மற்றும் ஐயப்பனுக்கு உகந்த கார்த்திகை மாதம் இன்று பிறந்தது. காலை முதல் ஐயப்ப மற்றும் முருக பக்தர்கள் மாலை அணிந்து வருகின்றனர்.

ஆன்மீகத்தைப் பொறுத்தமட்டில் தமிழ் மாதங்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதங்களில் ஒன்று கார்த்திகை மாதம். சிவபெருமான், முருகப்பெருமான் மற்றும் ஐயப்பனுக்கு மிகவும் உகந்த மாதமாக இந்த மாதம் விளங்குகிறது.
பிறந்தது கார்த்திகை:
நடப்பாண்டில் கார்த்திகை மாதம் நவம்பர் 17ம் தேதி பிறக்கும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதன்படி, இன்று கார்த்திகை மாதம் 1ம் தேதி பிறந்துள்ளது. கார்த்திகை மாதம் என்றாலே ஐயப்பனுக்கு மாலை அணிவதற்கான மாதம் ஆகும். இன்று 1ம் தேதி பிறந்துள்ளதால் ஐயப்ப பக்தர்கள் காலை முதலே மாலை அணிந்து வருகின்றனர்.
மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள்:
சபரிமலை ஐயப்பனுக்கு வேண்டிக்கொண்டு தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று காலை முதல் மாலை அணிந்து வருகின்றனர். ராகு காலம் மற்றும் எமகண்டம் தவிர மற்ற எந்த நேரத்திலும் இன்று மாலை அணிந்து கொள்ளலாம். இருப்பினும், அதிகாலையிலே குளித்துவிட்டு மாலை அணிவது சிறப்பு என்பதால் பெரும்பாலான பக்தர்கள் காலை நேரத்திலே மாலை அணிந்து வருகின்றனர். குருசாமி கைகளினாலோ, கோயில்களிலோ அல்லது வீட்டில் தாய்களின் கைகளிலோ பக்தர்கள் மாலை அணிந்து வருகின்றனர்.
ஐயப்பனுக்கு மட்டுமின்றி இந்த மாதம் முருகப்பெருமானுக்கு உகந்த மாதமும் என்பதால் பக்தர்கள் பலர் முருகனுக்காகவும் மாலை அணிந்து வருகின்றனர். திருச்செந்தூர், பழனி போன்ற முருகன் ஆலயங்களுக்காக வேண்டிக்கொண்டு மாலை அணிந்து வருகின்றனர்.
சிவாலயங்களில் கொண்டாட்டம்:
கார்த்திகை மாதம் என்றாலே மிகவும் முக்கியமான நாள் கார்த்திகை தீபம் ஆகும். திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் நாளில் ஜோதியை காண லட்சக்கணக்கான பக்தர்கள் ஒரே நாளில் குவிவார்கள். கார்த்திகை தீபம் டிசம்பர் 3ம் தேதி வருகிறது. இன்று கார்த்திகை மாதம் பிறந்துள்ளதால் சிவாலயங்களிலும் கொண்டாட்டம் களைகட்டத் தொடங்கியுள்ளது.
சபரிமலை, சிவாலயங்கள் மற்றும் முருகப்பெருமான் கோயில்களுக்கு இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகளவு காணப்படும் என்பதால் அதிகளவு பக்தர்கள் வரும் கோயில்களுக்கு சிறப்பு பேருந்துகள் வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மந்தமாகும் இறைச்சி, மீன் விற்பனை:
கார்த்திகை 1ம் தேதி இன்று பிறந்துள்ளதை முன்னிட்டு அதிகாலை முதலே சிவாலயங்கள், முருகன் ஆலயங்கள் உள்பட அனைத்து கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகளும் பூஜைகளும் நடந்து வருகிறது. மேலும், இந்த மாதம் ஏராளமான பக்தர்கள் மாலை அணிவார்கள் என்பதால் இறைச்சி, மீன் விற்பனையும் மந்தமாகவே இருக்கும். மேலும், இன்று முதல் ஒரு மாத காலத்திற்கு காய்கறிகளின் விற்பனை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்றே கருதப்படுகிறது.





















