karthigai deepam: கார்த்திகை தீபத்தன்று மகாலட்சுமி அருள் பெற இதை செய்யுங்கள்..! மண் அகலில் தீபம் ஏற்றுவது ஏன் ?
karthigai deepam 2024: இன்று கார்த்திகை தீபம் கொண்டாட உள்ள நிலையில், அகல்விளக்குகளை பயன்படுத்தி ஏன் தீபம் ஏற்ற வேண்டும் என்பது குறித்து தெரிந்து கொள்வோம்
கார்த்திகை தீபம் 2024 (karthigai deepam 2024): தமிழ் மாதங்களில் சிறப்பான மாதமாக கார்த்திகை மாதமாக கார்த்திகை தீபம் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் கார்த்திகை மாதம் வரும் விழாக்களில் முக்கிய விழாவாக திருக்கார்த்திகை தீபம் உள்ளது. இந்த ஆண்டு திருக்கார்த்திகை தீபம் இன்று தமிழ்நாடு முழுவதும் வெகு விமர்சையாக கொண்டாடப்பட உள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு பண்டிகைகள் இருந்தாலும், கோயில்கள் மற்றும் வீடுகளில் ஒரே நேரத்தில் கொண்டாடப்படும் பண்டிகையாக திருக்கார்த்திகை திருவிழா உள்ளது. திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு சிவன் கோயில்கள் மற்றும் முருகர் கோயில்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.
வீடுகளில் கொண்டாட்டம்
அதேபோன்று திருக்கார்த்திகை தீபத்தன்று வீடுகளிலும் தீபம் ஏற்றி, முருகருக்கு படையில் போட்டு சாமி தரிசனம் மேற்கொள்வது வழக்கமாக உள்ளது. ஒவ்வொரு வீடுகளிலும் திருக்கார்த்திகை பண்டிகையை முன்னிட்டு, வீடு முழுவதும் அகல் விளக்குகளால் தீபம் ஏற்றி கொண்டாடுவது வழக்கமாக உள்ளது. குறிப்பாக அக்னி ஸ்தலமாக உள்ள திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுவது வழக்கமாக உள்ளது. இதேபோன்று பல்வேறு கோயில்களிலும் சிறிய அளவில் தீபங்கள் ஏற்றுவது, கோயில்களில் மலை மீது தீபம் ஏற்றுவது என பல்வேறு வகைகளில் கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்படுகிறது.
அகல் விளக்கு ஏற்றப்படுவது ஏன் ?
கார்த்திகை தீபத்தன்று வீடுகளில் மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகளால் தீபம் ஏற்றுவது பாரம்பரியமாக இருந்து வருகிறது. இன்று சந்தையில் பல்வேறு வகையில் அகல்விளக்குகள் கிடைத்தாலும் மண்ணால் செய்த அகல் விளக்குகளை பயன்படுத்தி தான் கார்த்திகை தீபத்தன்று தீபத்தை ஏற்ற வேண்டும். மண் அகலில் விளக்கேற்றினால் வீட்டில் இருப்பவர்களின் ஆயுள் பெருகும் என்பது நம்பிக்கையாக உள்ளது. இது சனி பகவானின் அம்சமாக கருதப்படுவதால், மண் அகலில் விளக்கேற்றினால் சனி தோஷம் விலகும்.
கார்த்திகை தீப பண்டிகை என்பது செல்வத்தை பெருக்கும் பண்டிகையாக பார்க்கப்படுகிறது எனவே மண்ணால் செய்யப்பட்ட அகல்விளக்கு, மண் மகளான மகாலட்சுமியையும் குறிப்பதாகும் எனவே மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகளை ஏற்றினால் இல்ல மகாலட்சுமி அருள் பரிபூரணமாக கிடைக்கும். மண் என்பது நிலையாக இருக்கக் கூடியது. அது போல் நம்மை தேடி வரும் செல்வம் நம்மிடம் நிலையாக, உறுதியாக தங்க வேண்டும் என்பதற்காக மண் அகலில் தீபம் ஏற்ற வேண்டும் என்கிறார்கள்.
பழைய அகல்களை பயன்படுத்தியும் கார்த்திகை தீபத் திருவிழாவன்று வீடுகளில் விளக்கேற்றலாம். ஆனால் குறைந்த பட்சம் 3 புதிய அகல்களாவது வாங்கி, தீபம் ஏற்றுவது நன்மை பயக்கும் என்பது ஐதிகமாக உள்ளது. கார்த்திகை தீபத்தன்று கண்டிப்பாக வீட்டு வாசலில் போடப்படும் கோலத்தின் மீது, தீபம் ஏற்ற வேண்டும் என்பதும் ஐதீகமாக உள்ளது.
வீட்டில் தீபம் ஏற்ற சரியான நேரம் என்ன ?
திருவண்ணாமலை மலை உச்சியில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படும். அதன் பிறகு நமது வீடுகளில் தீபம் ஏற்றுவது நன்மை பயக்கும். திருவண்ணாமலையில் ஜோதி வடிவமாக காட்சியளிக்கும், சிவபெருமான் நமது வீடுகளிலும் ஜோதி வடிவாக காட்சி தருவது, ஐதீகமாக பார்க்கப்படுகிறது. செல்வத்தைத் தரும் கார்த்திகை தீப பண்டிகையை, அனைவரும் தங்களது இல்லங்களில் கொண்டாடி மகிழ்வோம்.