திருச்சி மலைக்கோட்டை கார்த்திகை தீபம் - ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்றம், ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்பு.
திருச்சியின் மிகப்புகழ் வாய்ந்த அடையாளச் சின்னமாக விளங்குவது மலைக்கோட்டை. இது உச்சிப்பிள்ளையார் கோயில் என்றும் அழைக்கப்படுகிறது. இது 275 அடி உயர மலையின் மேல் அமைந்துள்ளது. மலையின் பாதி தூரத்தில் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தாயுமானவர் சுவாமி கோயில் ஒன்று உள்ளது. இந்த உச்சி பிள்ளையார் கோயிலில் 100 கால் மண்டபம், மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டுக்கள் உள்ளன. மேலும் மலைக்கோட்டையின் மீது இருந்து பார்க்கையில், திருச்சி மாநகரின் எல்லா பக்கமும் ரம்மியமாக தெரியும். மலைக் கோட்டையின் உயரம் 275 அடி. மலைக்கோயிலுக்கு செல்ல 417 படிக்கட்டுகள் உள்ளன. இப்படி வடிவமைக்கப்பட்ட கோயிலின் ஆயிரங்கால் புனித மண்டபம் சிறப்பு வாய்ந்தது. திருச்சி மலைக்கோட்டை கடந்த 6ம் நூற்றாண்டில் வாழ்ந்த குணபரன் என்ற மகேந்திரவர்ம பல்லவர் ஆட்சியில் கட்டப்பட்டதாக கல்வெட்டு செய்தி கூறுகிறது. இக்கோயிலில் குடைந்தெடுக்கப்பட்ட இரண்டு குகைகள் உள்ளன.பல்லவர் கால குடைவரை கோயிலும், பாண்டியர் கால குடைவரை கோயிலும் இம்மலையில் உள்ளன.
குறிப்பாக கோட்டையுடன் கம்பீரமாக காட்சிதரும் கோயில் திக்கற்றவர்களுக்கு இத்தலத்து ஈசன், தாயாக இருந்து அரவணைத்துக் காக்கிறார். தாயை இழந்தவர்கள் இவரிடம் வேண்டிக்கொண்டால், அவர்களுக்கு தாயாக இருந்து வழி நடத்துவார் என்பது நம்பிக்கை. ரத்தினாவதி என்ற பெண்ணிற்கு அவள் தாய் வடிவில் வந்து இறைவனே சுகப் பிரசவம் செய்வித்து அருளிய தலம் இதுவாகும். சுகப்பிரசவம் ஆவதற்கு இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள். மூலவர் கருவறை தெற்குச் சுற்றில் தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தி எட்டு முனிவர்களுடன் தர்ப்பாசனத்தில் அமர்ந்து அருள் பாவிப்பது மற்ற தலங்களில் இல்லாத சிறப்பாகும்.
மேலும் கார்த்திகை தீபத்திருநாளில் திருச்சி மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோயிலில் வருடம் தோறும் மகா தீபம் ஏற்றுவது வழக்கம். இன்று கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு உச்சிப்பிள்ளையார் கோயிலில் மாலை மகா தீபம் ஏற்றப்பட்டது. இதற்காக ஏற்கனவே தீபத்திரியை தயாரிக்கும் பணிகளில் 20-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டனர். சுமார் 300 மீட்டர் நீளமுள்ள திரிகள் தயாரிக்கப்பட்டன. துணி நூல்கள் வைக்கப்பட்டு 10-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் அதனை உருண்டையாக வடிவமைத்து அதனை கட்டி ஒவ்வொன்றாக அடுக்கி பெரிய துணிகள் வைத்து அதைக் கட்டினர். பின்னர் உச்சி பிள்ளையார் கோயிலின் மேல் அமைக்கப்பட்டுள்ள தீபம் ஏற்றும் இடத்தில் அதை வைத்தனர் தீபம் ஏற்றுவதற்கான கொப்பறையில் சுமார் 700 லிட்டர் இலுப்ப எண்ணெய், நல்லெண்ணெய், நெய் உள்ளிட்ட பல்வேறு வகையான எண்ணெய்கள் ஊற்றப்பட்டன. சுமார் ஒரு வாரத்திற்கு மேலாக இந்த எண்ணெயில் அந்த திரிகளை ஊற வைக்கப்பட்டன.
இதனைத்தொடர்ந்து இன்று மாலை 6.03 மணி அளவில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. தமிழகத்தில் திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்ட பின்னர் இங்கு தீபம் ஏற்றப்பட்டது. இதற்கான பணிகளை கோயில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் மேற்கொண்டனர்.