Sabarimala Temple: சபரிமலையில் நேற்று மட்டும் 95 ஆயிரம் பேர்; 5 கி.மீ வரை வரிசை கட்டி நிற்கும் பக்தர்கள்! முக்கியமா இதை தெரிஞ்சிக்கோங்க!
கேரளா மாநிலம் சபரிமலை கோயிலில் புத்தாண்டு முன்னிட்டு 95,000 பேர் நேற்று ஒரே நாளில் சாமி தரிசனம் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் அமைந்துள்ளது சபரிமலை ஐயப்பன் கோயில். உலகப்புகழ்பெற்ற சபரிமலை கோயிலில் ஐயப்பனை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். கார்த்திகை மாதம் முதல் நாள் தொடங்கி மண்டல பூஜை காலம் வரை 41 நாட்கள் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும். அதனை தொடர்ந்து மகர விளக்கு ஜோதி பூஜைக்காக நடை திறக்கப்பட்டிருக்கும். இதனை தவிர்த்து மாதந்தோறும் பூஜைக்காக நடை திறக்கப்பட்டிருக்கும்.
அந்த வகையில் கடந்த மாதம் 16 ஆம் தேதி மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. 17-ஆம் தேதி முதல் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். சபரிமலை சீசன் என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த ஆண்டு எப்போதும் இல்லாத வகையில் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். மண்டல பூஜை டிசம்பர் 27 ஆம் தேதி நடந்து முடிந்தது. மண்டல பூஜைக்காக ஐயப்பன் சுவாமிக்கு தங்க அங்கி அணிவித்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து இரண்டு நாட்கள் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை சாத்தப்பட்டது.
மீண்டும் மகர விளக்கு பூஜைக்காக டிசம்பர் 30, 2023 அன்று நடை திறக்கப்பட்டது. இதனால் மீண்டும் சபரிமலையில் பகதர்கள் கூட்டம் அலைமோதியது. நேற்று புத்தாண்டு என்பதாலும் விடுமுறை நாள் என்பதாலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்தனர். தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி அதிகாலை 3 மணிக்கு கோவில் நடையை திறந்து வைத்தார். பின் பக்தர்கள் 18 ஆம் படி வழியாக ஐயப்பனை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். புத்தாண்டு என்பதால் நள்ளிரவு முதலே அதாவது நடை திறக்கபடும் முன் இருந்தே பக்தர்கள் கூட தொடங்கினர். நேற்று ஆன்லைனில் முன்பதிவு செய்த 80 ஆயிரம் பக்தர்கள் மற்றும் உடனடி பதிவு செய்த பக்தர்களும் திரண்டு வந்ததால் 95 ஆயிரம் பேர் வரை தரிசனம் செய்திருக்கலாம் என திருவாங்கூர் தேவஸ்தானம் போர்டு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்ததால் சபரிமலையில் பம்பை முதல் சன்னிதானம் வரை சுமார் 5 கி.மீ தூரம் வரை நீண்ட வரிசையில் நின்று தரிசனத்திற்காக காத்திருந்தனர். வரும் ஜனவரி 15 ஆம் தேதி மகர ஜோதி தரிசனம் நடைபெற உள்ளது. சபரிமலையில் நடைபெறும் மிக முக்கியமான நிகழ்வு இதுவாக கருதப்படுகிறது. அன்றைய தினம் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
எந்த ஆண்டும் இல்லாமல் இந்த ஆண்டு அதிக கூட்டம் இருப்பதால் பக்தர்களின் வசதிக்காக தரிசன நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு, சுப்ரபாத சேவை மற்றும் நெய் அபிஷேகத்திற்குப் பிறகு தரிசனங்கள் தொடங்கப்படும். பின்னர் மதியம் 1 மணிக்கு தரிசனம் நிறுத்தப்படும். அதன்பிறகு மாலை 4 மணிக்கு மீண்டும் தரிசனம் தொடங்கப்பட்டு இரவு 11 மணி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அதனை தொடர்ந்து ஹரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு பின்னர் நடை அடைக்கப்படும்.
இந்த பூஜைகளை நேரில் கண்டு ஐயப்பனை தரிசனம் செய்ய இணையதளம் மூலமாக பக்தர்கள் பதிவு செய்து கொள்ளலாம். இதனை தொடர்ந்து, ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கும் வகையில், நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது என தேவசம்போர்டு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் https://sabarimalaonline.org/#/login எனும் இணையதள முகவரியில் தரிசனத்திற்கான முன்பதிவை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.