விநாயகர் சதுர்த்தி: திண்டுக்கல்லில் பிரம்மாண்ட விநாயகர் சிலை தரிசனம்!
ஆசிய கண்டத்திலேயே ஒரே கல்லிலால் அமையப்பெற்ற 32 அடி உயர சங்கடகர சதுர்த்தி விநாயகர் திண்டுக்கல்லில் உள்ள 1008 விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு ஆசிய கண்டத்திலேயே ஒரே கல்லிலால் அமையப்பெற்ற 32 அடி உயர சங்கடகர சதுர்த்தி விநாயகர் திண்டுக்கல்லில் உள்ள 1008 விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நாடெங்கும் விநாயகர் சதுர்த்தி திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் விநயாகர் சிலைக்கு பல்வேறு விதமான அலங்காரங்கள் அலங்கரிக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகிறது. பிள்ளையார்பட்டி போன்ற பிரசித்தி பெற்ற விநாயகர் கோயில்கள் உள்ள இடங்களில் இன்று அதிகாலை முதலே விநாயகர் சிலைகளுக்கு பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக விநாயகர் சிலைக்கு பண மாலைகள், கொளுக்கட்டை மாலைகள், பூக்கள், காய்கறிகள் போன்றவைகள் மூலம் அலங்கரித்து வித்தியாசமான அலங்காரங்களுடன் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.
அதே போலதான் திண்டுக்கல் கோபாலசமுத்திரக்கரையில் அமைந்துள்ள அருள்மிகு நன்மை தரும் 108 விநாயகர் கோவிலில் ஆசிய கண்டத்திலேயே ஒரே கல்லிலான 32 அடி உயர சங்கடகர சதுர்த்தி விநாயகர் சிலை உள்ளது. ஒவ்வொரு விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டும் ஒவ்வொரு அலங்காரத்தில் விநாயகர் இங்கு காட்சியளிப்பார். இந்த வருடம் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 32 அடி உயர சங்கடகர சதுர்த்தி விநாயகர் சிலையை சுற்றி ஐந்து முகம் விளக்கு, லட்சுமி விளக்கு உட்பட 1008 விளக்குகளில் தீபம் ஏற்றப்பட்டு விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இதேபோல் ஆலயத்தில் உள்ள 108 விநாயகரும் சிறப்பு பூஜை நடைபெற்றது. திண்டுக்கல் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தற்போது சங்கடகர சதுர்த்தி விநாயகர் மற்றும் 108 விநாயகரை வணங்கி வருகின்றனர்.
இதேபோல் ஆலயத்தில் உள்ள 108 விநாயகருக்கும் பரிவார தெய்வங்களான காளகஸ்தீஸ்வரர், அம்மன், கருப்பண்ணசாமி உள்ளிட்ட தெய்வங்களுக்கு வண்ண, வண்ண செடிகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தற்போது சங்கடகர சதுர்த்தி விநாயகர் மற்றும் 108 விநாயகரை வணங்கி வருகின்றனர்.
குறிப்பக திண்டுக்கல் அடுத்துள்ள குடைபாறைபட்டி, இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பேகம்பூர் அருகே அமைந்துள்ளது. இதனால், இப்பகுதியில் கட்சியில் சார்பாகவோ, அமைப்புகள் சார்பாகவோ விநாயகர் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்ய காவல்துறையினர் தடை விதித்துள்ளனர்.
இந்த நிலையில், காவல்துறையினரின் தடையையும் மீறி இந்து முன்னணியினர் இன்று குடைபாறைபட்டி ஊரின் நடுவே உள்ள காளியம்மன் கோவிலில் 3 அடி விநாயகர் சிலையை வைத்து வழிபாடு செய்தனர். பின்னர் அங்கிருந்து ஊர்வலமாக எடுத்து வந்து கருப்பண்ணசாமி கோவில் மைதானத்தில் வைத்தனர். மீண்டும் அங்கு பூஜை வழிபாடு செய்தனர். இதற்கு வருவாய் துறையின் சார்பில் மேற்கு தாசில்தார் மற்றும் அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், அவர்களது எதிர்ப்பையும் மீறி பூஜை செய்து பின்னர் விநாயகர் சிலையை ஊர்வலமாக எடுத்துச் செல்ல இந்து முன்னணியினர் முற்பட்டனர். இதனை அடுத்து இந்து முன்னணியை சேர்ந்த பெண்கள் உட்பட 40 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 அடி விநாயகர் சிலையை பறிமுதல் செய்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் எடுத்துச் சென்று கோட்டை குளத்தில் கரைத்தனர்.தற்பொழுது குடை பாறை பட்டியில் அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.மேலும், காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட 40-க்கும் மேற்பட்டோர் தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.




















