Vinayagar Chaturthi: பொது இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கும் வழக்கம் எப்போது தொடங்கியது? - முழு வரலாறு இதோ
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது, முதன்முதலாக பொது இடத்தில் வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் பற்றி தெரிந்து கொள்வோம்.
இந்தியா முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா விமர்சியாக கொண்டாடப்படுகிறது. இந்து விழாக்களில் பல்வேறு பண்டிகைகள் வந்தாலும், இளைஞர்கள் கொண்டாட கூடிய விழாவாக விநாயகர் சதுர்த்தி இருந்து வருகிறது. குறிப்பாக, ஒவ்வொரு பகுதிகளிலும் இளைஞர்கள் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடுவது வருடம் வருடம் அதிகரித்து வருகிறது. அதேபோன்று விநாயகர் சிலை ஊர்வலம், மிகவும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
விநாயகர் பிறந்த நாளை முன்னிட்டு அவரவர் வீடுகளில் சிலை வைத்து கொண்டாடும் வழக்கங்கள் பல நூறு ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளதாக தெரிகிறது . ஆனால் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று, கோயில்களிலும், பொது இடங்களிலும், பல்வேறு அமைப்பு சார்பாக விநாயகர் சிலை வைப்பது கடந்த நூற்றாண்டில் துவக்கத்தில் தான் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்ப காலகட்டத்தில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கும் வழக்கம் வட இந்தியாவில் இருந்த நிலையில் படிப்படியாக அது நாடு முழுவதும் பரவியது.
பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கும் வழக்கம் தொடங்கியது எப்போது ?
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில், பால்ய திருமணங்களை தடை செய்யும் வகையிலான சட்டம் கொண்டுவரப்பட்டது. அப்பொழுது பால கங்காதர திலகர், பொதுமக்களை ஒன்று திரட்ட விநாயகர் சதுர்த்தியை பயன்படுத்த முயற்சி மேற்கொண்டார். இதன் ஒரு பகுதியாக விநாயகர் சிலைகளை வீட்டில் வைக்காமல் பொது இடங்களில் சிலைகளை வைத்து கொண்டாட செய்தார். அவ்வாறு பொது இடங்களில் வைக்கப்படும் விநாயகர் சிலைகள், அவற்றை தனித்தனியாக சென்று ஆற்றிலோ குளத்திலோ கரைக்காமல், ஊர்வலமாக சென்று கரைக்கும் படி ஏற்பாடு செய்தார்.
முதல் முதலாக இந்த விநாயகர் சிலைகள் பால கங்காதர் திலகர் அறிவுரையின்படி , விநாயகர் சிலை பொது இடங்களில் வைக்க பல்வேறு, வகையில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் முதல் முதலாக விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டன. நாளடைவில் வட இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலை வைப்பதும், அனைத்து விநாயகர் சிலைகளும் ஒரே நேரத்தில் ஊர்வலமாக செல்வதும் அதிகரிக்கத் தொடங்கின.
தமிழ்நாட்டில் விநாயகர் சிலை வைப்பது தொடங்கியது எப்போது ?
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை தாமதமாகவே பொது இடங்களில் விநாயகர் சிலை வைப்பது தொடர்பான வழக்கங்கள் உருவாக தொடங்கின. 1982ல் இந்து முன்னணி அமைப்பு உருவான பிறகு, இந்துக்களே இந்து முன்னணி அமைப்பைக் கொண்டு செல்லவும், இந்துக்களை ஒன்றிணைக்கவும் வட இந்தியாவில் பால கங்காதர திலகரின் வழியை தமிழ்நாட்டிற்கு பின்பற்ற திட்டம் தீட்டினர்.
முதல் முதலாக தமிழ்நாட்டில், 1983 ஆம் ஆண்டு சென்னை மேற்கு மாம்பலத்தில் பொது இடத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை ஒன்று வைத்து வழிபாடு நடத்தப்பட்டது. அதன் பிறகு தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் பல்வேறு இடங்களில், விநாயகர் சிலை வைப்பது அதிகரிக்க தொடங்கியது. இது போன்று விநாயகர் சிலை வைப்பதை பல்வேறு அமைப்புகளும் ஊக்கப்படுத்த தொடங்கின.
இளைஞர்கள் பங்கு பெற்றது எப்படி ?
பொதுவாக ஊர் திருவிழாக்கள் என்றால் பெரியவர்கள், ஊர் முக்கியஸ்தர்கள், காலம் காலமாக திருவிழா நடத்துபவர்கள் என தொடர்ந்து ஒரு தரப்பினர் மட்டுமே பணிகளை மேற்கொண்டு வருவார்கள். இவ்வாறு திருவிழா நடத்துபவர்களுக்கு ஊரில் தனி கெவரமும் கிடைப்பது குறிப்பிடத்தக்கது. இந்த கலாச்சாரம் நீண்ட ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் இருந்து வருகிறது.
ஆனால் அதுவே விநாயகர் சதுர்த்தி திருவிழா என்பது இளைஞர்கள் திருவிழா என்ற பிம்பம் தமிழ்நாட்டில் உருவாக்க தொடங்கியது. சிலை வைக்க நிதி திரட்டுவது, சிலை வாங்குவது, சிலை ஊர்வலமாக கொண்டு செல்வதற்கான பணிகள் என அனைத்தையும் இளைஞர்கள் மேற்கொண்டதால், அடுத்தடுத்த பகுதிகளுக்கு சிலை வைப்பது போட்டோ போட்டியின் அடிப்படையில் , 1980 களின் இறுதியில் தமிழ்நாடு முழுவதும் பரவத் தொடங்கியது.
நகரங்களில் தொடங்கிய இந்த கலாச்சாரம், குக்கிராமம் வரை நீண்டு கொண்டே சென்றது. ஆரம்ப கட்டத்தில் ஒரு குறிப்பிட்ட அமைப்பை சார்ந்து மட்டுமே விநாயகர் சிலைகள் வைக்கப்பட்ட நிலையில், 1990களின் இறுதியில் அனைத்து தரப்பையும் உள்ளடக்கிய நிகழ்வாக மாறத் தொடங்கியது . இதுபோன்று விநாயகர் சதுர்த்தி விழாவில் வைக்கும் விநாயகர் சிலை கண் திறக்கும் நிகழ்வின் போது, முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளத் தொடங்கினர்.
இன்றைய நிலவரப்படி தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பொது இடங்களில் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது. இது ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. விநாயகர் சிலை ஊர்வலத்தின் பொழுது பல கசப்பான சம்பவங்கள் நடைபெற்றாலும், இளைஞர்கள் மத்தியில் இந்த சிலை வைக்கும் வழக்கம் தொடர்ந்து வரவேற்பை பெற்று வருகிறது .