Swarna Akarshana Bhairava : ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் கோவில் கும்பாபிஷேகம்.. திரண்ட பக்தர்கள்.. என்ன சிறப்பு தெரியுமா?
சீர்காழியில் ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் கோயில் உள்ளிட்ட பல்வேறு கோயில்களில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் தருமை ஆதீன குருமகா சன்னிதானம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தேவாரம் பாடல் பெற்ற ஸ்ரீ சட்டநாதர் சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சட்டநாதருக்கு எதிரே அஷ்ட பைரவர்கள் சன்னதி அமைந்துள்ளது. இதன் ஒரு பாகமாக வயிரவன் கோடி என்று அழைக்கப்படும் இடத்தில் பைரவர்களில் ஒருவரான ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் கோவில் அமைந்துள்ளது. இதனால் காசிக்கு இணையான பைரவர் ஷேத்திரமாக சீர்காழி விளங்கி வருகிறது. தடையின்றி நாள் தோறும் இந்த ஸ்வர்ண ஆகர்ஷண பைரவரை வழிபட்டால் வியாபாரம் பெருகி செல்வம் செழிக்கும் என்று கூறப்படுகிறது.
இதனால் சீர்காழி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் காலையில் இந்த பைரவரை வணங்கி சென்று வியாபாரத்தை தொடங்குவது வழக்கம்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 17 ஆம் தேதி பூர்வாங்க பூஜையும், 20 ம் தேதி முதல் கால யாகசாலை பூஜையும் தொடங்கியது. தொடர்ந்து 4-கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்து பூர்ணாஹூதி மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னர், யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு செய்யப்பட்டு கோயிலை வலம் வந்து விமானத்தை அடைந்தது.
அதனையடுத்து தருமபுரம் ஆதீனம் 27ஆவது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சுவாமிக்கு, அபிஷேக ஆராதனையும் செய்யப்பட்டது. இதில் தருமை ஆதீன கட்டளைத் தம்பிரான்கள், வர்த்தக சங்கத் தலைவர் எஸ்கேஆர்.சிவசுப்பிரமணியன், தொழிலதிபர் கியான் சந்த், டாக்டர் முத்துக்குமார் மற்றும் வர்த்தகர்கள், சீர்காழி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
இதேபோன்று மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பழமை வாய்ந்த பத்ரகாளியம்மன் மற்றும் அங்காள பரமேஸ்வரி அம்மன், ஏழைகாத்த அம்மன் கோயில்களின் கும்பாபிஷேகமும் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 18-ஆம் தேதி முதல் கால யாகசாலை பூஜையும் தொடங்கியது. 6-ஆம் கால யாகசாலை பூஜைகள் முடிவடைந்து பூர்ணாஹூதி மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது.
தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பட்டு கோயிலை வலம் வந்தன. முதலில் விநாயகர் சன்னதி, அதனை அடுத்து ஏழைகாத்தம்மன், அங்காளம்மன், பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. யாகசாலை பூஜைகள் மற்றும் கும்பாபிஷேகத்தை சர்வசாதகம் கோயில் அர்ச்சகர் சுரேஷ் சிவம், மணிகண்ட சிவம், சட்டநாத சிவம் ஆகியோர் தலைமையிலான சிவாச்சாரியார்கள் செய்துவைத்தனர். கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு சீர்காழி டிஎஸ்பி. பழனிச்சாமி தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மற்றொரு நிகழ்வாக சீர்காழி அருகே குமிளங்காடு ஆதி நாகாத்தம்மன் சக்தி ஆலயத்தில் பால்குட விழா திரெளான பக்தர்கள் சாமி தரிசனம்!
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த குமிளங்காடு கிராமத்தில் ஆதி நாகாத்தம்மன் சக்தி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பால்குட விழா சிறப்பு வாய்ந்தது. பக்தர்கள் இக்கோயிலில் பால்குடம் எடுப்பதாக வேண்டி பால்குடம் எடுத்து வந்து கோயிலை அடைந்து நேர்த்திக் கடன் செய்வது வழக்கமாக இருந்து வருகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக நடைபெறாமல் இருந்த விழா இவ்வாண்டு சிறப்பாக நடைபெற்றது. விழாவையொட்டி நாகாத்தம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து காப்பு கட்டிக்கொண்டு விரதம் இருந்த பக்தர்கள் குமிளங்காடு கிராமத்தில் உள்ள கோட்டை ஐயா கோயிலிலிருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் என நூற்றுக்கணக்கானோர் பால்குடம் சுமந்து முக்கிய வீதிகள் வழியாக சென்று நாகாத்தம்மன் கோயிலை அடைந்தனர். பக்தர்கள் அலகு காவடி எடுத்து வந்தும் நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் பக்தர்கள் எடுத்து வந்த பாலை கொண்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. விழாவில் உள்ளூர் மற்றும் வெளியூர்களிலிருந்தும் வந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.