Sabarimala Ayyappan Temple: அதிகரிக்கும் பக்தர்கள் கூட்டம்.. சபரிமலையில் அரவணை பாயாசத்திற்கு தட்டுப்பாடு..!
சபரிமலை ஐயப்பன் கோயில் பக்தர்கள் கூட்டம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அரவணை பாயாசத்திற்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் அமைந்துள்ளது சபரிமலை ஐயப்பன் கோயில். உலக புகழ்பெற்ற சபரிமலை கோயிலில் ஐயப்பனை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். கார்த்திகை மாதம் முதல் நாள் தொடங்கி மண்டல பூஜை காலம் வரை 41 நாட்கள் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும். அதனை தொடர்ந்து மகர விளக்கு ஜோதி பூஜைக்காக நடை திறக்கப்பட்டிருக்கும். இதனை தவிர்த்து மாதந்தோறும் பூஜைக்காக நடை திறக்கப்பட்டிருக்கும்.
அந்த வகையில் கடந்த மாதம் 16 ஆம் தேதி மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. 27 ஆம் தேதி மண்டல பூஜை நடைபெற்றது. மண்டல பூஜையின் போது தங்க அங்கி அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அதன் பின் இரண்டு நாட்களுக்கு நடை மூடப்பட்டது. பின் மீண்டும் டிசம்பர் 30 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. இந்த ஆண்டு எப்போதும் இல்லாத வகையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் மேற்கொள்ள வழிப்பாட்டு நேரத்தை அதிகரித்துள்ளது. அதேப்போல் வரும் 15 ஆம் தேதி மகர விளக்கு ஜோதி நடைபெறுகிறது. அன்றைய தினம் தற்போது இருப்பதை விட அதிக அளவு பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால், திருவாங்கூர் தேவஸ்தானம் தரப்பில் முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஸ்பாட் புக்கிங் (spot booking) வரும் ஜனவரி 10 ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது. Virtual queue அதாவது முன்பதிவும் குறைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 14 ஆம் தேதி 50,000 பக்தர்களும், மகர ஜோதி 40,000 பக்தர்களும் முன்பதிவு செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஜனவரி 14 மற்றும் 15 ஆம் தேதி அதிக கூட்டம் இருக்கும் காரணத்தால் பெண்கள் மற்றும் குழந்தைகள் மல்லிகாபுரம் மற்றும் மணிகண்டாஸ் வழியாக தரிசனம் செய்ய வேண்டாம் என தேவஸ்தானம் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டதில் இருந்து தற்போது வரை 4 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். நேற்று ஒரே நாளில் 99 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். தொடந்து பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலின் முக்கிய பிரசாதமான அரவணை பாயாசத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, ஒருவருக்கு 2 டின்கள் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. தினசரி ஒரு லட்சத்து 30 ஆயிரம் டின் வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் சம்பந்தப்பட்ட நிறுவனம் 65,000 மட்டுமே வழங்கியது. இதனால் டின்கள் தட்டுப்பாடு காரணமாக தினசரி உற்பத்தி மூன்று லட்சத்திலிருந்து இரண்டு லட்சத்து 30 ஆயிரம் குறைக்கப்பட்டுள்ளது.
அரவணை பாயசத்திற்கான டின்கள் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு டெண்டர் கோரப்பட்டுள்ளது. டின்கள் போதிய அளவு தயாரிக்கப்பட்டால், இந்த தட்டுப்பாடுக்கு தீர்வு கிடைக்கும் என தேவஸ்தானம் போர்டு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.