Diwali 2024: தீபாவளி ஏன் கொண்டாடப்படுகிறது? நரகாசுர வதம் நடந்தது எப்படி? புராணம் சொல்வது இதுதான்
தீபாவளி பண்டிகை ஏன் கொண்டாடப்படுகிறது? என்று புராணங்கள் சொல்லும் நரகாசுர வதம் என்றால் என்ன என்பதை கீழே விரிவாக காணலாம்.
இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் தீபாவளி பண்டிகை மிகவும் புகழ்பெற்றது ஆகும். தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக பல காரணங்கள் கூறப்பட்டாலும் நரகாசுரனை வதம் செய்தததற்காகவே தீபாவளி கொண்டாடப்படுவதாக பெரும்பாலும் கூறப்படுகிறது. நரகாசூரன் யார்? எதற்காக அவர் வதம் செய்யப்பட்டார்? அது ஏன் தீபாவளியாக கொண்டாடப்படுகிறது? என புராணம் சொல்லும் கதையை கீழே காணலாம்.
வராகன் – பூமாதேவியின் மகன் நரகாசூரன். வானாசூரனுடன் கைகோர்த்த நரகாசுரன் உலக மக்களை கொடுமைப்படுத்தினான். விண்ணுலகத்தையும் ஆள வேண்டும் என்று ஆசை கொண்ட நரகாசூரன் தனது அமைச்சரவையிடம் ஆலோசனை கேட்டார். தேவர்களைப் போலவே தாங்களும் சாகாவரம் பெற்றால் மட்டுமே அவர்களை வெல்ல முடியும் என்று ஆலோசனை வழங்கினர்.
இதையடுத்து, படைக்கும் கடவுளான பிரம்மனை நோக்க தவம் புரிந்தான் நரகாசூரன். நரகாசூரனின் கடும் தவத்தால் மெச்சிய பிரம்மா அவன் முன்னே தோன்றினார். அப்போது, நரகாசூரனுக்கு வேண்டிய வரத்தை கேட்குமாறு கூறினார். அதற்கு நரகாசூரன் தனக்கு சாகாவரம் வேண்டும் என்று கூறினார். பிறந்த ஒருவர் இறந்தே தீர வேண்டும் என்று கூறிய பிரம்மா வேறு வரம் தருமாறு கூறினார்.
அதற்கு தனக்கு தன் தாயால் மட்டுமே மரணம் நிகழ வேண்டும் என்று வரம் வாங்கினார் நரகாசூரன். இந்த வரத்தைப் பெற்ற பிறகு நரகாசூரன் எந்த தாயும் மகனை கொல்லமாட்டாள் என்று தனது தீய எண்ணங்களைத் தொடர்ந்து செயல்படுத்தினான். தேவலோகத்தை கைப்பற்றிய நரகாசூரன் இந்திரனின் தாய் அதிதியின் காதணியையும் பறித்துச் சென்றான்.
நரகாசூரனிடம் இருந்து தப்பித்த இந்திரன் மகா விஷ்ணுவிடம் தங்களை காப்பாற்றுமாறு கோரிக்கை விடுத்தார். அப்போது கிருஷ்ண அவதாரம் எடுத்திருந்த மகாவிஷ்ணு. இந்திரனை கிருஷ்ணரிடம் அனுப்பி வைத்தார். இந்திரன் உதவி கோரியதை அடுத்து நரகாசூரனை தான் அழிப்பதாக கிருஷ்ணர் உத்தரவாதம் அளித்தார். நரகாசூரனுடனான போரின்போது தனது மனைவி சத்தியபாமாவை அழைத்துச் சென்றார் கிருஷ்ணர்.
நரகாசூரன் உடனான போர் உச்சமடைந்தபோது தான் மயக்கம் அடைந்தது போல நடித்தார் கிருஷ்ணர். தனது கணவரின் நிலை கண்ட சத்தியபாமா கோபத்தின் உச்சிக்கே சென்றார். நரகாசூரன் மீது சரமாரியாக அம்புகளைத் தொடுத்தார். சத்தியபாமா தொடுத்த அம்பு துளைத்ததால் நரகாசூரன் மண்ணில் சரிந்து உயிரை விட்டான்.
தாயால் மட்டுமே மரணம் நிகழும் என்ற பிரம்மனின் வரம் இருக்க மண்ணில் விழுந்ததன் மாயம் என்ன? என்று குழம்பிய நரகாசூரனுக்கு தனது தாய் பூமாதேவியே சத்தியபாமா அவதாரமாக கிருஷ்ணரின் மனைவியாக தோன்றியுள்ளார் என்பது தெரியவந்தது. மேலும், நரகாசூரனை வீழ்த்திய பிறகே அது தனது மகன் என்று சத்தியபாமாவிற்கு தெரியவந்தது.
இறக்கும் தருவாயில் தனது தாயிடம் தனது அழிவை மக்கள் துக்கமாக கொண்டாடமால் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாலே தீபாவளி கொண்டாடப்படுவதாக கூறப்படுகிறது. மகன் என்றும் பாராமல் அநீதி இழைத்த மகனை கொன்ற தாயை போற்றும் விதமாக தீபாவளி கொண்டாடப்படுவதாகவும் கூறப்படுகிறது. தீபாவளி கொண்டாடப்படுவதற்காக பலரும் கூறும் நரகாசூரனை கொன்ற கதை இதுவே என்று புராணங்களில் கூறப்படுகிறது. நடப்பாண்டிற்கான தீபாவளி வரும் 31ம் தேதி கொண்டாடப்படுகிறது.