தலையில் தேங்காய் உடைத்து சாட்டையடி வாங்கிய பக்தர்கள் - கரூரில் வினோத நிகழ்ச்சி
ஆண்கள், பெண்கள் உள்ளிட்டோர் அமர வைத்து அவர்களுக்கு கோவில் பூசாரியால் சாட்டையடி நிகழ்ச்சி நடைபெற்றது.
கரூர் பெரிய சேங்கல் கிராமத்தில் பங்காளிகள் ஒன்று கூடி நடைபெற்ற திருவிழாவில் தலையில் தேங்காய் உடைப்பு மற்றும் சாட்டையடி வினோத நிகழ்ச்சி நடைபெற்றது.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தென்பாக்கம் செங்கல் கிராமத்துக்கு உட்பட்ட பெரிய சேங்கல் உள்ள காமாட்சியம்மன், பச்ச மலையாச்சி அம்மன், கருப்பண்ணசாமி, மதுரை வீரன் உள்ளிட்ட ஆலயத்தில் அப்பகுதியைச் சேர்ந்த பங்காளிகள் ஒன்று கூடி நடத்தும் திருவிழாவில் முன்னதாக காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்துவரப்பட்டது.
இதனைத் தொடர்ந்து விரதம் இருந்த ஆண்கள், பெண்கள் தங்களின் வேண்டுதலை நிறைவேற்ற தலையில் தேங்காய் உடைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வேண்டுதலை முன்னிட்டு கோவில் பூசாரி, விரதம் இருந்த பக்தர்களின் தலையில் தேங்காய் உடைக்கும் வினோத திருவிழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள ஆண்கள், பெண்கள் உள்ளிட்டோர் அமர வைத்து அவர்களுக்கு கோவில் பூசாரியால் சாட்டையடி நிகழ்ச்சி நடைபெற்றது.
இங்கு சாட்டையடி பெறுவோர்கள் காற்று, கருப்பு, ஏவல் உள்ளிட்டவைகள் அவர்களை விட்டு நீங்கும் என்பது ஐதீகம். இந்த திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றிக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து பங்காளிகள் ஒன்று கூடி பொங்கல் வைக்கும் வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
அண்ணாசாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் ஆவணி முதல் நாளை முன்னிட்டு மூலவர் கணபதிக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம்.
ஆவணி முதல் தேதியை முன்னிட்டு பல்வேறு ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இந்நிலையில் கரூர் மாநகராட்சிக்குட்பட்டு அண்ணா சாலை அருள்மிகு ஸ்ரீ கற்பக விநாயகர் ஆலயத்தில் மூலவர் கணபதிக்கு என்னைக்காப்பு சாற்றி,பால் ,தயிர், பஞ்சாமிர்தம் ,தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், அபிஷேக பொடி, பன்னீர், விபூதி உள்ளிட்ட சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதைத் தொடர்ந்து மூலவர் கணபதிக்கு பட்டாடை உடுத்தி பண்ண மாலைகள் அணிவித்த பிறகு அரிசி மாவால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர், ஆலயத்தின் சிவாச்சாரியார் மூலவர் கணபதிக்கு உதிரிப்பூக்களால் நாமாவளிகள் கூறினார்.
சுவாமிக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு நெய்வேத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது. கரூர் கற்பக விநாயகர் ஆலயத்தில் நடைபெற்ற ஆவணி மாத சிறப்பு அபிஷேகத்தை காண ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய நிர்வாகிகள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.