தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்... நீண்ட நேரம் காத்திருந்ததால் பெரும் அவதி
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். ஆனால் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உருவானதால் வயது முதிர்ந்தவர்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.
தஞ்சாவூர்: ஆவணி மூன்றாவது ஞாயிற்றுக்கிழமையை ஒட்டி தஞ்சை அருகே புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு சம்பங்கி அலங்காரம் செய்யப்பட்டு இருந்து. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். ஆனால் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உருவானதால் வயது முதிர்ந்தவர்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர்.
பிரசித்தி பெற்ற புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில்
தஞ்சையில் இருந்து 5 கிலோமீட்டர் தூரத்தில் மாரியம்மன்கோவில் உள்ளது. இந்த கோயில் அரண்மனை தேவஸ்தானத்திற்குட்பட்ட 88 கோவில்களில் ஒன்றாகும். மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் மூலஸ்தானம் புற்றுமண்ணால் உருவானது. மூலவர் புற்று மண்ணால் உருவானதால் அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தைலக்காப்பு சாற்றப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பாலாலயம் செய்யப்பட்டுள்ளதால் ஆவணி திருவிழா கட்
இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். விழா நடைபெறும் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். கோவில் குடமுழுக்கிற்காக பாலாலயம் செய்யப்பட்டுள்ளதால் ஆவணி திருவிழா நடத்தப்படவில்லை. ஆனால் அம்மனுக்கு உகந்த நாளான ஆவணி மாத 3-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று முன்தினம் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.
தரிசனம் செய்ய குவிந்தனர் பக்தர்கள்
அதிகாலையில் கோயில் நடை திறப்பதற்கு முன்பே மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் குவிந்தனர். பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் நடந்தே வந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நேரம் செல்ல, செல்ல பக்தர்களின் வருகை அதிகரித்து கொண்டே இருந்தது. அதிகாலையில் நடை திறக்கப்பட்டவுடன் பக்தர்கள் நீண்டநேரம் வரிசையில் காத்து நின்று அம்மனை தரிசனம் செய்து வழிபட்டனர். ஆவணி 3-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று மாரியம்மனுக்கு சம்பங்கி அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
இதை காண அதிகளவில் திரண்ட பக்தர்கள் சிரமம் இன்றி அம்மனை தரிசனம் செய்வதற்காக பொதுவழி, சிறப்புவழி என இருவழிகள் ஏற்படுத்தப்பட்டு இருந்தன. இந்த இருவழிகளின் வழியாக சென்று அம்மனுக்கு அர்சனை செய்து தரிசனம் செய்தனர். கோயிலுக்கு நடைபயணமாக சென்ற பக்தர்கள் தரிசனம் செய்த பிறகு தங்களது ஊர்களுக்கு செல்வதற்காக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
தவித்து போன வயது முதிர்ந்த பக்தர்கள்
தஞ்சை மட்டுமின்றி அதை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்தும், மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் பாத யாத்திரையாகவும், பஸ்கள், மோட்டார் சைக்கிள்கள் மூலமாகவும் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலுக்கு வந்திருந்தனர். கோயில் நடை திறக்கப்பட்டவுடன் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக சென்றனர். ஏராளமான பக்தர்கள் பொது வழியின் வழியாகவே சென்று தரிசனம் செய்தனர். இவர்கள் வரிசையாக செல்வதற்காக கம்பிகளால் ஆன தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த வழியானது கோவில் பிரகாரத்தை சுற்றி செல்லும். இருந்தாலும் வரிசை நிற்காமல் சென்று கொண்டிருந்தால் பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்துவிட்டு செல்வார்கள். ஆனால் நேற்று திடீரென பொது வழி வரிசையானது நீண்டநேரம் நகராமல் நின்றது. இதனால் பக்தர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளானார்கள்.
குழந்தைகளுடன் வந்த பெண்களும் அவதி
குறிப்பாக வயதானவர்கள் வரிசையில் நிற்க முடியாமல் மயக்க நிலைக்கு சென்றனர். ஓரிரு மூதாட்டிகள் மயங்கி விழுந்தனர். சிறுவர்களுடன் வந்த பெண்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். பக்தர்களின் மனது நோகாமல் விரைவாக தரிசனம் செய்வதற்கு கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும், கோரிக்கையும் ஆகும்.