Aani Thirumanjanam 2024: சிவனுக்கு உகந்த ஆனி திருமஞ்சனம் என்றால் என்ன? எப்போது கொண்டாடப்படுகிறது?
Aani Thirumanjanam 2024 Date: சிவபெருமானுக்கு உகந்த ஆனி திருமஞ்சனம் என்றால் என்ன? எப்போது கொண்டாப்படுகிறது? என்பதை கீழே காணலாம்.
அனைத்திற்கும் ஆதியாக கருதப்படும் சிவபெருமானின் மிக உகந்த நாட்களில் ஒன்று ஆனி உத்திரம் ஆகும். ஆனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தில் நடராஜப் பெருமானாகிய சிவபெருமானுக்கு நடத்தப்படும் அபிஷேகமே ஆனி திருமஞ்சனம் என்று அழைக்கப்படுகிறது. இதற்கு ஆனி உத்திரம் என்ற மற்றொரு பெயரும் உண்டு.
ஆனி திருமஞ்சனம் எப்போது? | Aani Thirumanjanam 2024 Date
நடப்பாண்டிற்கான ஆனி உத்திரம் வரும் 12ம் தேதி கொண்டாடப்படுகிறது. உத்திர நட்சத்திரமான வரும் ஜூலை 11ம் தேதி மதியம் 1.47 மணிக்கு தொடங்குகிறது. அடுத்த நாளான ஜூலை 12ம் தேதி மாலை 4.20 மணிக்கு உத்திர நட்சத்திரம் முடிவடைகிறது. சூரிய உதயத்தின்போது எந்த நட்சத்திரத்தில் தொடங்குகிறதோ அந்த நாள் முழுவதும் அதே நட்சத்திரமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். அதன்படி, உத்திர நட்சத்திரம் ஜூலை 11ம் தேதி பிறந்தாலும், ஆனி உத்திரம் ஜூலை 12ம் தேதியே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
களைகட்டும் சிவாலயங்கள்:
ஆனி உத்திரம் வந்தாலே தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிவாலயங்களும் களைகட்டும். குறிப்பாக, நடராஜப் பெருமானுக்கு உகந்த நாளான ஆனித் திருமஞ்சனம் இருப்பதால் தில்லை நடராஜனாக சிவபெருமான் காட்சி தரும் சிதம்பரம் கோயிலில் மிகப்பிரம்மாண்டமாக கொண்டாடப்படும். இதனால், சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும் நடத்தப்படுவது வழக்கம்.
சிதம்பரத்தில் 10 நாட்கள் திருவிழாவாக நடத்தப்படும் ஆனித் திருமஞ்சனத்தை முன்னிட்டு சிதம்பரம் கோயிலில் இன்று கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது.
தனிச்சிறப்பு:
நடப்பு ஆனி உத்திரத்தில் வளர்பிறை சஷ்டியும் சேர்ந்து வருகிறது. சஷ்டியானது முருகப்பெருமானுக்கும் உகந்த நாள் ஆகும். ஆனி உத்திர தினத்திலே வளர்பிறை சஷ்டியும் சேர்ந்து வருவதால் சிவபெருமான் – முருகப்பெருமான் இருவரையும் வணங்குவது தனிச்சிறப்பாக கருதப்படுகிறது.
வழிபடுவது எப்படி?
ஆனித் திருமஞ்சன தினத்தில் அருகில் உள்ள சிவாலயங்களுக்கு நேரில் சென்று, சிவபெருமானை வழிபடலாம். பெரும்பாலான சிவாலயங்களிலே முருகப்பெருமானுக்கும் கோயில் இருப்பதால் இருவரையும் வணங்குவதால் பலன் உண்டாகும் என்பது பக்தர்கள் நம்பிக்கை ஆகும். கோயிலுக்கு செல்ல முடியாத பக்தர்கள் சுத்தமான நீர், பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு வீட்டிலே சிவபெருமானின் படத்திற்கு பூஜை செய்து வழிபடலாம். வில்வ இலை கொண்டு பூஜை செய்வதும் தனிச்சிறப்பு ஆகும்.
ஆனி திருமஞ்ச தினத்தில் புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், சிதம்பரம் நடராஜர் கோயில்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள். மேலும், தமிழ்நாட்டில் உள்ள பிற சிவாலயங்களிலும் சிவ பக்தர்கள் குவிவார்கள்.