Watch Video: கொதிக்கும் எண்ணெயில் வெறும் கையால் வடை எடுக்கும் பூசாரி; ரூ 7 ஆயிரத்துக்கு ஏலம் போன வடை
ஆதிபராசக்தி ஆலயத்தில் கொதிக்கும் எண்ணெயில் வெறும் கைகளால் வடை எடுக்கும் பூசாரி. வடையை 7000 ரூபாய்க்கு ஏலம் எடுத்து குழந்தை இல்லாத தம்பதியினர் உட்கொண்ட வினோத திருவிழா.
திருவண்ணாமலை (Tiruvannamalai News): திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த துரிஞ்சிகுப்பம் கிராமத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீ ஆதிபராசக்தி ஆலயம் இருந்து வருகின்றது. இந்த ஆலயத்தில் வருட வருடம் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மனுக்கு பால்குடம் எடுத்தல், கூழ்வார்த்தல், தீமிதி திருவிழா போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறும். அதேபோல் கொதிக்கும் எண்ணெய் சட்டியில் வடை சுட்டு வெறும் கைகளால் எடுத்து அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவது வழக்கமாகும். அதைத் தொடர்ந்து இந்த ஆண்டிற்கான ஆடி முதல் வெள்ளி ஆடிப்பூரத்தை முன்னிட்டு இன்று துரிஞ்சுகுப்பம் கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ ஆதிபராசக்தி ஆலயத்தில் 3 பூசாரிகள் 21 நாள் விரதம் இருந்து கொதிக்கும் எண்ணெய் சட்டியில் வடை சுட்டு அதனை வெறும் கையால் எடுக்கும் காட்சி அனைவரையும் வியக்க வைத்தது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் ஆதிபராசக்தி ஆலயத்தில் கொதிக்கும் எண்ணெயில் வெறும் கைகளால் வடை அள்ளும் பூசாரி ஏலம் விடப்பட்ட வடையை 7000 ரூபாய்க்கு ஏலம் எடுத்து குழந்தை இல்லாதவர் தம்பதியினர் உட்கொண்ட வினோத திருவிழா @abpnadu @SRajaJourno pic.twitter.com/WBeLsyoR79
— Vinoth (@Vinoth05503970) July 24, 2023
கொதிக்கும் எண்ணெயில் எடுக்கப்பட்ட வடைகள் ஏலம்
வெறும் கைகளால் எடுக்கப்பட்ட வடையினை கோவில் நிர்வாகத்தன் மூலம் ஏலம் விடப்படும், அதிலும் 7 வடைகள் மட்டுமே ஏலம் விடப்படுவது வழக்கமாகும். அதில் ஒரு வடையின் விலை 100 ரூபாய்க்கு ஆரம்பமாகிறது , அதிகபட்சமாக 7000 ரூபாய்க்கு விலை போனது. ஏழு வடைகள் ஏலம் விடப்பட்டது முதல் வடை 7000 ரூபாய்க்கும், இரண்டாவது வடை 4500 ரூபாய்க்கும், மூன்றாவது வடை 3700 ரூபாய்க்கு விலை போனது. மொத்தம் ஏழு வடையின் ஏலத்தொகை 30000 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.
வடையை வாங்கி சாப்பிடும் குழந்தை இல்லாத தம்பதிகள்
இந்த வடையினை குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியினர்கள் ஏலம் எடுக்கின்றனர். வடையை உட்கொண்டால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும் என்பது ஐதிகமாக உள்ளது. இந்த திருவிழாவில் வெளியூர் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.