Aadi Amavasaya: ஆடி அமாவாசை எப்போது? .. வீட்டிலேயே தர்ப்பணம் கொடுப்பது எப்படி?
ஆடி அமாவாசை நாளில் நீர்நிலைகளில் மறைந்த நம் முன்னோர்களுக்கு பலரும் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். சிலரால் இந்நாளில் பல காரணங்களால் நீர் நிலைகளுக்கு சென்று தர்ப்பணம் கொடுக்க முடியாது.

முன்னோர்களை வழிபட மிக உகந்த நாளாக பார்க்கப்படும் ஆடி அமாவாசை 2026ஆம் ஆண்டு எப்போது வருகிறது என்பதைப் பற்றிக் காணலாம்.
ஆடி அமாவாசை சிறப்பு
இந்து மதத்தில் அமாவாசை, பௌர்ணமி தவிர்த்து 14 வளர்பிறை மற்றும் தேய்பிறை திதிகள் உள்ளது. ஒவ்வொரு திதியும் பல்வேறு விதமான சிறப்புகளை கொண்டிருக்கிறது. அப்படியாக அமாவாசையானது முன்னோர்களை வழிபட உகந்த நாளாக பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் அமாவாசை வந்தாலும் நாம் முன்னோர்களை 3 அமாவாசைகளில் கட்டாயம் வழிபட வேண்டும் என சாஸ்திரங்கள் சொல்கிறது. அதன்படி ஆடி, புரட்டாசி, தை ஆகிய 3 அமாவாசைகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை.
பித்ருலோகத்தில் இருக்கும் முன்னோர்கள் அவர் தம் குடும்ப உறுப்பினர்களை காணும் பொருட்டு ஆடி மாத அமாவாசை நாளில் பூலோகத்திற்கு புறப்பட்டு வருவார்கள். புரட்டாசி மாதம் வரும் மஹாளய அமாவாசை நாளில் பூமியில் தங்கி தை மாத அமாவாசை நாளில் மீண்டும் பித்ருலோகம் திரும்புவார்கள் என்பது ஐதீகமாக உள்ளது. இதனால் இந்த மற்ற அமாவாசைகளில் முன்னோர் வழிபாடு, தர்ப்பணம் போன்றவை கொடுக்காவிட்டாலும், இந்த 3 அமாவாசைகள் தவறாமல் கடபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
2026 ஆடி அமாவாசை எப்போது?
அதன்படி 2026ம் ஆண்டு ஆடி அமாவாசை வரும் ஆகஸ்ட் 12ம் தேதி புதன் கிழமை கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளில் நீர்நிலைகளில் மறைந்த நம் முன்னோர்களுக்கு பலரும் தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். சிலரால் இந்நாளில் பல காரணங்களால் நீர் நிலைகளுக்கு சென்று தர்ப்பணம் கொடுக்க முடியாது. அவர்கள் வீட்டிலேயே பின்வரும் நடைமுறைகளை பின்பற்றி தர்ப்பணம் செய்யலாம்.
வீட்டிலேயே தர்ப்பணம் செய்வது எப்படி?
இதற்கு முதலில் மறைந்த முன்னோர்கள் புகைப்படங்களை ஓரிடத்தில் வைக்க வேண்டும். இது கட்டாயம் கிடையாது. ஒரு பாத்திரத்தில் தண்ணீர், கருப்பு எள், தர்ப்பைப்புல், ஒரு தாம்பாளம், மோதிர விரலில் அணியும் தர்ப்பை புல்லாலான பவித்திரம் ஆகியவை வைத்திருக்க வேண்டும்.
தர்ப்பணம் செய்பவர்கள் சூரிய உதயம் தொடங்கிய நேரத்தில் இருந்து நண்பகல் 12 மணிக்குள் செய்து விட வேண்டும். தர்ப்பணம் கொடுக்க கிழக்கு அல்லது வடக்கு திசையை நோக்கி அமர வேண்டும்.
தாம்பால தட்டை நன்கு கழுவி அதனை உங்கள் முன் வைக்கவும். அதில் தர்ப்பைப்புல்லை கிழக்கு மேற்காக பரப்பி முன்னோர்களை மனதார நினைத்து அவர்களின் பெயர் கோத்திரம் ஆகியவற்றை கூறி மனதார அழைக்க வேண்டும்.
பவித்திரத்தை வலது கை மோதிர விரலில் அணிந்துக் கொண்டு வலது கையின் கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையே உள்ள பகுதி வழியாக கருப்பு எள் கலந்த தண்ணீரை பித்ரு தீர்த்தமான நினைத்து தட்டில் உள்ள தர்ப்பைப்புல்லின் மீது விட வேண்டும். இதனை தந்தை மற்றும் தாய் வழி முன்னோர்களுக்காக தலா 3 முறை செய்ய வேண்டும். பின்னர் இரு கைகளையும் கூப்பி சூரியனை நோக்கி வணக்கம் செலுத்தி குடும்பத்தினரை ஆசீர்வசித்து நல்வழிப்படுத்த வேண்டும் என மனதார பிராத்தனை செய்யவும். தர்ப்பணம் செய்த தண்ணீரை யாரும் மிதிக்காதவாறு செடி, கொடிகளின் வேர்களில் ஊற்றி விட வேண்டும்.
பின்னர் வீட்டில் உள்ள முன்னோர் புகைப்படத்திற்கு அவர்களுக்குப் பிடித்த உணவுகள், திண்பண்டங்கள் போன்றவை படைத்து வழிபட வேண்டும். மாலையில் அருகிலுள்ள ஏதேனும் ஒரு கோயிலுக்கு சென்று கட்டாயம் வழிபட வேண்டும். இந்நாளில் தர்ப்பணம் செய்பவர்கள் கண்டிப்பாக விரதம் இருக்க வேண்டும். விரதம் முடித்த பின்னரே வீட்டில் உள்ளவர்கள் சாப்பிட வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். இந்நாளில் முன்னோர்களின் ஆசீர்வாதம் கிடைக்க நாம் தானம் செய்யலாம்.
ட்ரெண்டிங் செய்திகள்






















