Aadi amavasai 2025: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் அமாவாசை திருவிழா: லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம்
மேல்மலையனூர் அருள்மிகு ஶ்ரீ அங்காளம்மன் கோவிலில் ஆடி மாத அமாவாசை முன்னிட்டு உற்சவர் அங்காளம்மன் ஸ்ரீ நாகபூஷணி அம்மன் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

விழுப்புரம்: பிரசித்தி பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோயில் அமாவாசை திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம்.
ஆடி அமாவாசை திருவிழா
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த பிரசித்திபெற்ற மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் மாதந்தோறும் அமாவாசை நாட்களில் ஊஞ்சல் உற்சவம் வெகு விமர்சியாக நடைபெறும். ஆடி அமாவாசை, தை, மாசி, அமாவாசை விழாக்கள் மிகவும் கோலாகலமாக நடைபெறும். இன்று ஆடி அமாவாசை விழாவை முன்னிட்டு அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. ஆடி அமாவாசை தினமான இன்று காலையிலிருந்தே பக்தர்களின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. பெரும்பாலான பக்தர்கள் தாடை மற்றும் நாக்குகளில் அலகு குத்தியும், தீச்சட்டி ஏந்தியும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர்.
ஆடி அமாவாசை முன்னேற்பாடுகள்:-
மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோவிலில் 24.07.2025 இன்று அமாவாசை திருவிழா நடைபெறுகிறது. எனவே, பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொள்ள ஏதுவாக ஊராட்சி ஒன்றியத்தின் சார்பில், அடிப்படை வசதிகளான குடிநீர் வசதிகள், தற்காலிக கழிவறைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்திடுவதோடு, தற்காலிக பேருந்து நிலையங்கள் மற்றும் திருக்கோவிலுக்கு வரும் வழிகளில் அதிகளவில் குப்பைதொட்டிகளை அமைத்து, குப்பைகளை உடனுக்குடன் அகற்றி, சுகாதாரப்பணிகள் மேற்கொள்ள எதுவாக துப்புரவு பணியாளர்களை பணியமர்த்தியுள்ளனர் .
பாதுகாப்பு பணியில் காவல் துறை
மேலும், காவல்துறை சார்பில், பாதுகாப்பு நடவடிக்கையாக பாதுகாப்பு ஒத்திகை அணிவகுப்பு நடத்துவதுடன், தற்காலிக பேருத்து நிலையங்கள், கிராம தெருக்கள், திருக்கோயில் வளாகம் மற்றும் இதர இடங்களில் திருட்டு, வழிப்பறி மற்றும் அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறாத வண்ணம் போதிய அளவில் காவலர்களை நியமித்து பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள்
ஊஞ்சல் உற்சவம் நடைபெறும் நேரத்தில் திருக்கோயிலின் ஊஞ்சல் மண்டபம் (ம) கிழக்கு மண்டபத்தின் மேற்பகுதியில் எவரும் ஏறாத வகையில் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளபட்டு வருகிறது. மேலும், கனரக வாகனங்கள் திருவிழா நாட்களில் செல்லா கூடாது. இதுமட்டுமல்லாமல், திருக்கோவிலுக்கு வரும் ஆட்டோக்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்வதற்கான ஒருவழிப்பாதை அமைத்து வாகனங்கள் செல்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் சார்பில், திருக்கோயிலில் உள்ள மின் வழித்தடங்க் சீரமைக்கப்பட்டது. மேலும், திருவிழா நாட்களில், சுழற்சி முறையில் மின் பணியாளர்கள் 24 மணிநேரமும் பணியில் உள்ளனர். வாகனம் நிறுத்து மிடங்களில் போதிய மின்விளக்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கண்காணிப்பு மற்றும் அடிப்படை வசதிகள்
மேலும், திருக்கோவில் நிர்வாகம் மற்றும் காவல்துறை மூலம், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமரா அமைத்து கண்காணிக்கும் பணிகளில் ஈடுபட வேண்டும். ஆங்காங்கே குடிநீர் வசதிகள், தற்காலிக கழிப்பறை வசதிகள், கூட்டநெரிசலை தவிர்த்திடும் பொருட்டு தடுப்புகட்டை வசதிகளை அமைக்கப்பட்டுள்ளது. திருக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பாதை வசதிகள் மற்றும் திசைகள் அறிந்து கொள்ளும் வகையில் தேவையான இடங்களில் வழிகாட்டி பதாகைகள் (Route Map Boards) வைக்கப்பட்டுள்ளது.
தீயணைப்புத்துறை சார்பில், திருக்கோயில் வளாகத்தில் தீயணைப்பு வாகனத்தினை தயார் நிலையில் நிறுத்தி வைப்பதோடு, தியணைப்பு வீரர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் தொடர் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், சுகாதார மருத்துவகுழு அவசர ஊர்தியுடன் திருக்கோவில் வளாகத்திற்குட்பட்ட இடங்களில் மருத்துவ முகாம் அமைத்து, மருத்துவ பணியினை மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
போக்குவரத்து வசதி:-
விழுப்புரம் சார்பாக மேல்மலையனூருக்கு விழுப்புரத்தை ஒட்டியுள்ள சென்னை, திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், புதுச்சேரி, ஆரணி, ஆற்காடு ஆகிய வழித்தடங்களில் இருந்து மொத்தம் 425 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.





















