Thengai Sudum Pandigai: ஆடி முதல் நாள்.. தேங்காய் சுடும் பண்டிகை என்றால் என்ன..? எப்படி கொண்டாடுவது?
Aadi Thengai Sudum Pandigai in Tamil: தமிழ்நாட்டில் நாமக்கல், சேலம், தருமபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் தேங்காய் சுடும் பண்டிகை ஆண்டுதோறும் ஆடி மாதம் முதல் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழ் மாதங்களிலே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மாதமாக ஆடி மாதம் உள்ளது. நடப்பாண்டிற்கான ஆடி மாதம் வரும் 17-ஆம் தேதி தொடங்க உள்ளது. மகாபாரத போரானது ஆடி முதல் நாள் தொடங்கி 18 நாட்கள் நடைபெற்றது. ஆடி 18-ம் நாள் முடிவுக்கு வந்தது.
மகாபாரத போரில் தர்மம் வெல்ல வேண்டும் என்பதற்காக யுத்தம் தொடங்கிய முதல் நாளான ஆடி முதல் நாளில் மக்கள் அனைவரும் விநாயகர் மற்றும் அவரவர் இஷ்ட தெய்வங்களுக்கு பூஜை செய்தனர். இந்த நாளில் தேங்காயை சுட்டு, அதனை பிரசாதமாக படைத்து வழிபடுவது வழக்கமாக உள்ளது.
தமிழ்நாட்டில் கொங்கு மண்டலத்தில் உள்ள மாவட்டங்களான நாமக்கல், சேலம், தருமபுரி உள்ளிட்ட பல மாவட்டங்களில் தேங்காய் சுடும் பண்டிகை ஆண்டுதோறும் ஆடி மாதம் முதல் நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.
தேங்காயை எப்படி தயார் செய்வது?
- தேங்காய் சுடும் பண்டிகைக்கு எப்போதும் நன்றாக முற்றிய தேங்காயை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
- நன்றாக ஒரு பெரிய தேங்காயை எடுத்துக்கொள்ள வேண்டும். அதில் உள்ள ஒரு கண்ணை துளை போட்டு, அதன் வழியாக நீரை வெளியேற்றி பாத்திரத்தில் பிடித்துக் கொள்ள வேண்டும்.
- நாம் பூஜைக்கு தேங்காயை தயார் செய்வது போல நார்களை அகற்ற வேண்டும். பின்னர், தேங்காய் மீது மஞ்சள் பூச வேண்டும்.
- பின்பு எள், பாசிப்பயறு, நாட்டு வெல்லம், பச்சரிசி, அவல், பொட்டுக்கடலை போன்றவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். மேலே கூறியவற்றை நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
- நன்றாக அரைத்த அந்த கலவையை தேங்காயில் ஏற்கனவே துளையிட்டுள்ள கண் வழியாக உள்ளே செலுத்த வேண்டும்.
- அந்த அரைத்த கலவையை உள்ளே செலுத்திய பிறகு, ஏற்கனவே பாத்திரத்தில் பிடித்து வைத்திருந்த தேங்காய் நீரில் கொஞ்சம் மீண்டும் அந்த கண் வழியாக உள்ளே ஊற்ற வேண்டும்
இவ்வாறு தேங்காய் சுடும் பண்டிகைக்காக தேங்காயை தயார் செய்ய வேண்டும்.
சுடுவது எப்படி?
நாம் தயார் செய்து வைத்துள்ள தேங்காய்யின் உள்ளே தற்போது ஒரு நீளமான குச்சியை செலுத்த வேண்டும். குச்சி என்றால் அனைத்து குச்சியையும் செலுத்தக்கூடாது. இதற்காக பெரும்பாலும் அழிஞ்சல் குச்சிகளையே பயன்படுத்துகின்றனர். அந்த அழிஞ்சல் குச்சியை மஞ்சளை பூசி தேங்காய் கண் வழியாக குச்சியை நுழைக்க வேண்டும்.
இப்போது, வீட்டின் முன்பு நெருப்பு மூட்டுவார்கள். அந்த நெருப்பில் தயாராக வைத்துள்ள தேங்காயை குச்சி மூலமாக காட்டி நன்றாக வேக வைப்பார்கள். நெருப்பில் நன்றாக வெந்த பின்னர் தேங்காய் நல்ல சத்தத்துடன் வெடிக்கும்.
பலன்கள் என்ன?
இப்போது, அந்த தேங்காய் ஓட்டை உடைத்து தேங்காயை சாமிக்கு படைப்பார்கள். அவ்வாறு படைத்த பிறகு வீட்டின் உள்ளே பகிர்ந்து சாப்பிடுவார்கள். தேங்காய் உள்ளே இருக்கும் எள்ளு, பாசிப்பயறு, நாட்டு வெல்லம், அவல் , பொட்டுக்கடலை ஆகியவையும், தேங்காயும், தேங்காய் தண்ணீரும் இணைந்து அற்புதமான சுவையாக இருக்கும்.
இந்த ஆரோக்கியமான உணவை சாப்பிடுவதால் உணவு வயிற்றுப்புண்களுக்கு சிறந்த நிவாரணி ஆகும். எள்ளு, பாசிப்பயறு, நாட்டு வெல்லம், அவல், பொட்டுக்கடலை ஆகியவை அடங்கிய தேங்காய் உடலுக்கு மிகுந்த ஆரோக்கியம் ஆகும்.
ஆடி மாதம் முதல் நாளில் இந்த தேங்காய் சுடும் பண்டிகை வெகு விமர்சையாக பல இடங்களில் வரும் 17-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது.