அம்மா கெட்டப்பில் மகன்.. காட்டிக் கொடுத்த குரல்.. பென்ஷன் வாங்குவதில் தில்லுமுல்லு!
ஓய்வூதியம் பெறுபவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் தங்களுடைய ஆவணங்களை புதுப்பிக்க வேண்டிய விதிமுறை உள்ளது. அப்படியான சூழல் அந்த இளைஞருக்கும் வந்தது.

இத்தாலியில் இறந்த தனது தாயாரின் ஓய்வூதிய பணத்தை பெறிவதற்காக அவரைப் போல வேடமிட்டு சென்ற மகன் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு இத்தாலிய நகரமான மான்டுவாவிற்கு அருகிலுள்ள போர்கோ விர்ஜிலியோ பகுதியில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அப்பகுதியில் தனது தாயாருடன் இளைஞர் ஒருவர் வசித்து வந்தார். அந்த நபரின் தாயார் ஓய்வூதியம் பெற்று வந்துள்ளார். இப்படியான நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு அந்த பெண்மணி இயற்கையான முறையில் உயிரிழந்தார். ஆனால் அவருக்கு மாத ஓய்வூதியம் ஆயிரக்கணக்கான யூரோக்கள் வருவதை தெரிந்து வைத்திருந்த மகன் அதனை மோசடியாக பெற முடிவு செய்தார்.
அவரது உடலை துணியால் சுற்றி வீட்டில் மறைத்து வைத்தார். அக்கம் பக்கத்தினருக்கு எந்தவித சந்தேகமும் எழுந்து விடாதபடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டார். இந்த நிலையில் ஓய்வூதியம் பெறுபவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளிக்குள் தங்களுடைய ஆவணங்களை புதுப்பிக்க வேண்டிய விதிமுறை உள்ளது. அப்படியான சூழல் அந்த இளைஞருக்கும் வந்தது. அப்போதாவது அவர் உண்மையை சொல்லியிருக்கலாம்.
மாறாக தனது தாயைப் போல வேடமிட்டு அடையாள அட்டையை புதுப்பிக்க சென்றார். ஓய்வூதியம் பெறும் கவுன்சில் அலுவலகத்துக்கு அந்த நபர் தனது தாயாரின் தோற்றத்தில் வந்துள்ளார். லிப்ஸ்டிக், நெயில் பாலிஷ், நகைகள், பழங்கால காதணிகள் என பார்ப்பதற்கு வயதான பெண்மணி போல காட்சியளித்தார். ஆனால் கெட்டப்பை மாத்தினாலும் கேரக்டரை மாத்தவில்லை என்பது போல பெண் குரலில் பேச முயன்ற அந்த இளைஞர் நடுநடுவே ஆண் குரலில் பேசியுள்ளார். இதனைக் கண்டு அவரை எதிர்கொண்ட அதிகாரி அதிர்ச்சியடைந்தபோது அந்த பெண்மணி இளைஞர் திருதிருவென விழித்துள்ளார்.
இதனையடுத்து அந்த அதிகாரி அந்த பெண்மணியை உற்று நோக்கியபோது அவரின் கழுத்து சற்று தடிமனாக இருந்தது, சுருக்கங்கள் கூட விசித்திரமாக இருந்ததை கண்டறிந்தார். மேலும் அவரின் கைகளில் உள்ள தோல் கூட 85 வயதுடைய பெண்ணின் தோல் போல இல்லை என்பதையும் உணர்ந்தார். உடனடியாக ஓய்வூதிய அலுவலம் தரப்பில் போலீசில் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த அவர்கள் விசாரணை நடத்தியபோது அந்த இளைஞரின் வேடம் கலைந்தது.
மேலும் அவரின் வீட்டையும் சோதனை செய்தனர். அப்போது இறந்த பெண்மணியின் புகைப்படத்தையும், மாறுவேடம் பூண்ட மகனின் புகைப்படத்தையும் ஒப்பிட்டு பார்த்து காவல்துறை அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். காரணம் கிட்டதட்ட ஒரே மாதிரி இருந்துள்ளது. ஆனால் குரல் விஷயத்தில் மாட்டிக் கொண்டார். இத்தாலி நாட்டில் ஓய்வூதியம் பெறுபவரின் சலுகைகளைப் பெற அவர்களின் உடலை பிள்ளைகள் மறைத்து வைப்பது இது முதல் முறை கிடையாது. கடந்த 2023 ஆம் ஆண்டில், வெரோனாவில் ஒரு நபர் தனது தாயின் இறந்த உடலை ஐந்து ஆண்டுகளாக வீட்டில் வைத்திருந்து, அவரது ஓய்வூதியத்தைப் பெற்றதாகக் கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.





















