உலக தாய்ப்பால் வாரம் 2022: இந்த வருடம் என்ன தீம்? ஏன் கொண்டாட வேண்டும்? வரலாறு என்ன?
உலக தாய்ப்பால் வாரம் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி தொடங்கி, 7 நாட்களுக்கு உலகம் முழுக்க கடைபிடிக்கப்படுகிறது. தாய்பால் வாரம் எதற்காக கொண்டாடப்படுகிறது? அதன் வரலாறு என்ன?
ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 1 முதல் 7 ஆம் தேதி வரை தொடர்ந்து 7 நாட்கள் ஒரு வாரம் வரை உலகம் முழுக்க தாய்ப்பால் வாரம் கொண்டாடப்படுகிறது. அதே போல இந்த வருடமும் தாய்ப்பாலின் மகிமைகளை, அவசியத்தை மக்களுக்கு எடுத்து சொல்ல ஒரு விழிப்புணர்வு நாளாக கொண்டாப்படுகிறது.
உலக தாய்ப்பால் வாரம் - வரலாறு
தாய்ப்பால் கொடுப்பதை ஆதரிப்பதற்காகவும் ஊக்குவிப்பதற்காகவும், உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள் நல அமைப்பு (UNICEF) 1990 இல் ஒரு ஆணையை உருவாக்கியது. அதன்படி 1992ஆம் ஆண்டு ’வேர்ல்டு அலையன்ஸ் பிரஸ்ட் ஃபீடிங் ஆக்ஷன்’ (வாபா) அமைப்பால் முதல் முறையாக தாய்ப்பால் வாரம் கொண்டாடப்பட்டது. தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிக்கவே இந்த வாரம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. ஆரம்பத்தில், சுமார் 70 நாடுகள் வாரத்தை நினைவுகூர்ந்து வந்த நிலையில், தற்போது 170 நாடுகளால் கொண்டாடப்படுகிறது.
ஏன் கொண்டாடவேண்டும்?
தாய்ப்பாலின் பல நன்மைகள் பற்றி மக்கள் அறிந்திருப்பது அவசியம். WHO அறிக்கையின்படி, 3 குழந்தைகளில் 2 குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கப்படுவதில்லை. எனவே, இந்த வாரத்தை கொண்டாடுவது மிகவும் முக்கியமானது. இதன் மூலம் பலருக்கு விழிப்புணர்வு கிடைக்கும். தாய்ப்பாலில் காணப்படும் நோய் எதிர்ப்பு சக்திகள் கிருமிகள் மற்றும் வைரஸ்களுக்கு எதிராக செயல்பட்டு குழந்தையின் பாதுகாப்பிற்கு உதவுகின்றன. ஆறு மாதங்களுக்கு தாய்ப்பால் கொடுக்கும் குழந்தைகளுக்கு நோய்த்தொற்றுகள், சுவாசக் கோளாறுகள் அல்லது வயிற்றுப்போக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. தாய்ப்பால் கொடுக்கும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா அல்லது ஒவ்வாமை ஏற்படும் அபாயம் குறைவு. இவற்றை மக்களிடம் கொண்டு சேர்க்கவே இந்த நிகழ்வு உலகமெங்கும் நடை பெறுகிறது.
இந்த நாளில் என்னென்ன நடக்கும்?
உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, தாய்ப்பால் கொடுப்பதன் நன்மைகள் குழந்தைகளுக்கு மட்டுமல்ல, தாய்மார்களுக்கும் சேர்த்து தான். இது தாய்மார்களுக்கு மார்பக மற்றும் கருப்பை புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது. அரசு அலுவலகங்களில் விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்படுகின்றன. அதிகமாக தாய்ப்பால் குடித்து கொழுக் மொழுக் என்று இருக்கும் 6 மாத குழந்தைக்கு பரிசுகள் வழங்கி ஊக்குவிக்கப்படுகிறது.
உலக தாய்ப்பால் வாரம் 2022 - கருப்பொருள்
உலக தாய்ப்பால் வாரத்திற்கான இந்த ஆண்டு கருப்பொருள் "தாய்ப்பால் கொடுப்போம் வாருங்கள்: அறிவூட்டல் மற்றும் ஆதரவளித்தல்" என்ற பெயரில் நடைபெறுகிறது. தாய்ப்பால் கொடுப்பதற்கான பாதுகாப்புகளை உருவாக்க நிறுவனங்களையும் நாடுகளையும் வலியுறுத்துவதன் மூலம், இந்த தலைப்பில் இந்த வாரத்தை சிறப்பிப்பதன் மூலம் தாய்ப்பால் விழிப்புணர்வை அதிகரிக்கும் என்று நம்புகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்